You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திரை உலகம்: இந்த வார படங்கள், சீரீஸ்கள் என்னென்ன?
கடந்த சில வாரங்களோடு ஒப்பிடுகையில் இந்த வாரம் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள், சீரிஸ்களின் பட்டியல்:
லைகர்
விஜய் தேவரகொண்டா நடிக்க பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். மிகப் பெரிய குத்துசண்டை வீரனாக விரும்பும் கதாநாயகன், தன் காதலிக்காக தன்னுடைய மானசீக குருவுடனேயே சண்டைபோட நேர்கிறது. நாயகன் தன் லட்சியங்களை அடைந்தானா என்பதுதான் கதை. இந்தப் படம் வியாழக்கிழமையன்றே வெளியாகிவிட்ட நிலையில், இந்தப் படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.
டைரி 'டி பிளாக்', 'தேஜாவு' என தொடர்ந்து த்ரில்லர் படங்களிலேயே கவனம் செலுத்திவரும் அருள்நிதியின் அடுத்த படம் 'டைரி'. இந்தப் படமும் த்ரில்லர்தான். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் வழியில் ஓரிடத்தில் தொடர்ந்து விபத்துகள் நடக்க, அதனைத் துப்பறிகிறார் கதாநாயகன். படத்தை இன்னாசி பாண்டியன் இயக்கியிருக்கிறார். உண்மைக் கதையில் சற்று கற்பனை கலந்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
தீர்ப்பு (மலையாளம்): இதுவும் ஒரு த்ரில்லர் திரைப்படம்தான். பிருத்விராஜ், இந்திரஜித், இஷா தல்வார், விஜய் பாபு, சைஜு குரூப் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ரதீஷ் அம்பாட் இயக்கியிருக்கிறார். ராம்குமார், பரமேஸ்வரன், அப்துல்லா, கல்யாண் ஆகிய நான்கு நண்பர்களின் வாழ்வில் நடக்கும் மிகப் பெரிய சம்பவத்திற்குப் பிறகு பிரிகிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகு மூன்று பேர் மட்டும் சந்திக்கத் திட்டமிடுகிறார்கள். அப்போது நான்வது நபரும் வருகிறார். அப்போது நடக்கும் விபரீத சம்பவங்களே இந்தப் படத்தின் கதை.
Odela Railway Station (தெலுங்கு): இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒதெலா என்ற சிறிய ஊரில் நடக்கும் கதை. அந்த ஊரில் புதிதாக திருமணமாகும் பெண்கள், பலாத்காரம் செய்து கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பது யார் என்பதை காவல்துறை விசாரிக்கும்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. அசோக் தேஜா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
Maharani - 2: சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, வங்காளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கிறது இந்தத் தொடர். 90களில் பிஹாரில் நடக்கும் கதை. முதலமைச்சராக இருக்கும் பீமா பாரதி சிறைக்குச் செல்ல வேண்டியிருப்பதால், மனைவி ராணி பாரதியை முதல்வராக்கி விட்டுச் செல்கிறார். சிறையிலிருந்து திரும்பி வரும் பீமா பாரதியால் மீண்டும் முதல்வர் பதவியைப் பெற முடிகிறதா என்பதே கதை. தொடர் வியாழனன்றே வெளியாகிவிட்ட நிலையில் பாசிட்டிவான விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன.
Criminal Justice - 3வது சீஸன்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இந்தத் தொடர், தமிழ், தெலுங்கு, இந்தி, மராட்டி, வங்காளம், மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. பிபிசியில் இதே பெயரில் வெளியான தொடரின் இந்திய வடிவம். ஏற்கனவே இரண்டு சீஸன்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால், இந்த சீஸன் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இவை தவிர, ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. படங்களின் பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் ஓடிடி தளங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. Hit: The First Case (நெட்ஃப்ளிக்ஸ்), 10th Class diaries (Amazon Prime), குலுகுலு (சன் நெக்ஸ்ட்), குருதி ஆட்டம் (ஆஹா), The Lost City (Amazon Prime), கொரிய தொடரான SolomonsPerjury (தமிழில் Disney+ Hotstar).
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்