விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படம் - ஊடக விமர்சனம்

நடிகர்கள்: விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, ஆனந்த்ராஜ், ரோபோ ஷங்கர், மிருணாளினி ரவி, மியா ஜார்ஜ்; இசை: ஏ.ஆர். ரஹ்மான்; ஒளிப்பதிவு: புவன் ஸ்ரீநிவாஸன், ஹரீஷ் கண்ணன்; இயக்கம்: அஜய் ஞானமுத்து.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களின் மூலம் பெரிதும் கவனத்தை ஈர்த்த அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் என்பதால் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது 'கோப்ரா'. விக்ரம் நடித்து இதற்கு முன்பாக வெளி வந்த 'மஹான்' பெரிதும் நெகடிவ் விமர்சனங்களையே எதிர்கொண்ட நிலையில், இந்த படத்தின் மூலம் அவர் வெற்றிப் பாதைக்குத் திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அஜய் ஞானமுத்துவின் முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் ஒரு த்ரில்லர் திரைப்படம்தான். ஸ்காட்லாந்தில் ஒரு இளவரசர் கொல்லப்படுகிறார். இந்தியாவில் ஒரு மாநில முதல்வர் கொல்லப்படுகிறார். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்படும் நிலையில், அதனை விசாரிக்க வருகிறார் இன்டர்போல் அதிகாரியாக அஸ்லான் இல்மாஸ் (இர்ஃபான் பதான்). ஜூடித் சாம்சன் என்ற குற்றவியல் நிபுணரும் அவரோடு இணைந்துகொள்கிறார். இவர்களது விசாரணையில், கோப்ரா என்பவர்தான் அந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் இருப்பதாகத் தெரிய வருகிறது.

அதேபோல, கொலைசெய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் ரிஷி என்ற தொழிலதிபருடன் தொடர்பு இருப்பதும் தெரியவருகிறது. இந்தக் கொலைகள் அனைத்தும் கணித முறைப்படி நடக்கின்றன என்பதால், நன்றாகக் கணிதம் அறிந்த ஒருவரால்தான் நடக்கும் என்று கருதுகிறார்கள். முடிவில், ஒரு சாதாரண கணக்கு வாத்தியாராக வாழ்ந்து கொண்டிருக்கும் மதியழகன் (விக்ரம்) இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் இருப்பது தெரியவருகிறது. கணக்கு வாத்தியார் ஏன் இதுபோன்ற பெரிய கொலைகளை செய்கிறார், அதற்கு என்ன காரணம் என்பது கோப்ரா படத்தின் மீதிக் கதை.

"இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்"

இந்தப் படம் புதன்கிழமை வெளியாகியிருக்கும் நிலையில், அது பற்றிய விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இந்தப் படம் சுவராஸ்யமாக இருந்தாலும், திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்கிறது தினமணி நாளிதழின் விமர்சனம்.

"படத்தில் கதாநாயகன் தனது கணிதத் திறமையைக் கொண்டு வித்தியாசமாக கொலைகளைச் செய்கிறார் என்பது கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் அதனைப் படமாக்குவதற்கு சற்று மெனக்கெட்டிருக்கலாம். அந்தக் காட்சிகளில் ஏகப்பட்ட லாஜிக் கேள்விகள் எழுகின்றன. ஆனாலும் படம் தொய்வில்லாமல் நகர்கிறது.

விக்ரம் - ஸ்ரீநிதி இடையிலான காதல் காட்சிகள் அழுத்தமாக இல்லாததால் அந்தக் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. பிரமாண்டமாக படமாக்குவதில் காட்டிய அக்கறையை இயக்குநர் திரைக்கதையில் காட்டியிருந்தால் கூடுதல் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்".

ஒட்டுமொத்த படத்தையும் விக்ரமிடம் ஒப்படைத்திருக்கிறார் இயக்குநர் என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழின் விமர்சனம். இருந்தபோதும் இரண்டாம் பாதி திரைப்படம் மிகுந்த சோர்வை ஏற்படுத்துவதாகவும் அந்த விமர்சனம் கூறுகிறது.

"தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்கு தேவைக்கு அதிகமான உழைப்பை செலுத்தி நியாயம் சேர்த்திருக்கிறார் விக்ரம். தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்கு தேவைக்கு அதிகமான உழைப்பை செலுத்தி நியாயம் சேர்த்திருக்கிறார். இரண்டாம் பாதியில் 'அந்நியன்' பட பாணியிலான அவரது நடிப்பு ரசிகர்களின் கைதட்டலை பெறுகிறது.

ஆனால், படத்தின் முதல் பாதியை பொறுத்தவரை ஸ்காட்லாந்து இளரவசர், ரஷ்ய அமைச்சர் என நாடுகளையும் அதீத பாதுகாப்பையும் கடந்து அசலாட்டாக நடக்கும் கொலைகள், அதையொட்டி கொடுக்கப்படும் பில்டப்புகள், லாஜிக் என்றால் என்ன என கேட்கும் அந்தக் காட்சிகள் ஒட்டவேயில்லை. அதே போல கணிதத்தை கொண்டு க்ளாஸ் எடுத்தது, தலைவர் ஒருவர் கொல்லப்படுவதற்கான டெக்னிக், திணிக்கப்பட்ட காதல் காட்சி என முதல் பாதியில் உள்ள பலவீனமான திரைக்கதையால் கோப்ரா சீறவேயில்லை. முதல் பாதியில் உள்ள சில புதிர்கள், அதையொட்டி இடைவேளையில் வரும் திருப்பம் தான் இரண்டாம் பாதியை பார்க்க தூண்டுகிறது.

இரண்டாம் பாதியில் தொடகத்தில் வரும் சண்டை காட்சியை போதும் போதும் என சொல்லும் அளவிற்கு திகட்ட திகட்ட கொடுத்து டயர்ட் ஆக்கியிருக்கிறார்கள். அதையடுத்து புதிர்களுக்கான விடைகள் ஒவ்வொன்றாக சொல்லப்படும்போது, சுவாரஸ்யம் தொற்றுவதற்கு பதிலாக குழப்பங்களும் நிறைய கேள்விகளுமே எழுகின்றன. மாறாக, கதையைப் புரிந்து கொள்வது மேலும் சிரமத்தை ஏற்படுத்தி விடுகிறது.

"நிறைய தேவையற்ற காட்சிகள்"

நீட்டி முழங்கி, நிறைய தேவையற்ற காட்சிகள், தேவைக்கு அதிகமான கதாபாத்திரங்கள், 2, 3 ஃப்ளாஷ்பேக்குகள், வில்லன் கதாபாத்திரத்தின் பின்புலத்தில் தெளிவின்மை என இரண்டாம் பாதியும் நிறையவே சோதிக்கிறது. சில சுவாரஸ்யமான காட்சிகள் இருந்தாலும் பல இடங்கள் சோர்வைத் தருகின்றன. குறிப்பாக, படத்தின் நீளம் பெரும் துயரம்" என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்திற்கு, மிகவும் கலவையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன.

தினமலர் நாளிதழின் விமர்சனமும் அதே பாணியில் அமைந்துள்ளது. "தன்னை நம்பி இந்தப் படத்தில் நடிக்க வந்த விக்ரமின் நம்பிக்கையை அஜய் ஞானமுத்து இன்னும் அதிகமாகக் காப்பாற்றி இருக்கலாம். மூன்று மணி நேரம் ஓடும் படத்தை இரண்டரை மணி நேரமாகச் சுருக்கி, சில காட்சிகளின் நீளத்தையும் குறைத்திருந்தால் பரபரப்பான ஒரு ஹாலிவுட் த்ரில்லர் படத்தைப் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்" என்கிறது தினமலர்.

இருந்தபோதும், படத்தில் பாராட்டத்தக்க அம்சங்களும் இருப்பதை தினமலர் நாளிதழின் விமர்சனம் சுட்டிக்காட்டுகிறது. "ஆரம்பக் காட்சியிலேயே அடையாளம் தெரியாத அளவிற்கு அசத்தலாய் அறிமுகமாகிறார் விக்ரம். அந்த அசத்தல் ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சரியத்துடன் நகர்கிறது. குறிப்பாக இடைவேளைக்குப் பின்னர் போலீஸ் விசாரிக்கும் காட்சியில் விக்ரம், ஆனந்தராஜ் கூட்டணியின் நடிப்பு தியேட்டர் முழுவதையும் கரவொலி எழுப்ப வைக்கிறது.

இயக்குநருக்கு அட்வைஸ்!

'அந்நியன்' படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ் ஏட்டிக்குப் போட்டியாக நடித்த அந்தக் காட்சி போல இந்தக் காட்சியில் விக்ரம், ஆனந்தராஜ் ரசிக்க வைத்துள்ளார்கள். படத்தின் முக்கியமான சஸ்பென்ஸ் இரண்டு வேடங்களில் விக்ரம் நடித்திருப்பது. இரண்டு விக்ரம் வந்த பிறகு காட்சிகளில் தெளிவில்லாத ஒரு குழப்பம் இருக்கிறது. அது கிளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. சாமானிய ரசிகர்களுக்கும் படத்தைப் புரியும் விதத்தில் கொடுக்க இயக்குநர் முயற்சித்திருக்க வேண்டும்.

விக்ரமை ஒருதலையாக காதலிப்பவராக ஸ்ரீநிதி ஷெட்டி. வழக்கமான மசாலா பட கதாநாயகிக்குரிய வேடம்தான். ஆராய்ச்சி மாணவியாக மீனாட்சி கோவிந்தராஜன் ஸ்ரீநிதியை விட அதிகக் காட்சிகளில் வருகிறார். இன்டர்போல் அதிகாரியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், சிறப்பான அறிமுகம். அவருக்கு இது முதல் படம் என்று சொன்னால் ஆச்சரியம்தான். ஹிந்திப் படங்களிலும் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வரலாம்.

கணிதம், அறிவியல், பலவித தோற்றங்கள், ஆள் மாறாட்டம், கார்ப்பரேட் அரசியல் என பல விஷயங்களை ஒரே படத்தில் சொல்லி ஓவர் டோஸாகக் கொடுத்ததுதான் குழப்பத்திற்குக் காரணம்" என்கிறது தினமலர் நாளிதழ்.

அஜய் ஞானமுத்து, விக்ரம், ஏ.ஆர். ரஹ்மான் என மிகப் பெரிய ஸ்டார்கள் இந்தப் படத்தில் ஒன்றிணைந்திருந்தாலும் ஊடகங்களில் வந்த விமர்சனங்களை வைத்து பார்க்கும்போது, படத்தின் சில அம்சங்கள் சிறப்பாக இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், லாஜிக் மீறல்கள், படத்தின் நீளம், திரைக்கதையில் உள்ள குழப்பங்கள் ஆகியவை படத்தின் பலவீனங்களாக அமைந்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :