You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ் - ஊடக விமர்சனம்
நடிகர்கள்: அருண் விஜய், அழகம் பெருமாள், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன்; இயக்கம்: அறிவழகன். வெளியீடு: சோனி லைவ் ஓடிடி.
மிகப் பெரிய செலவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் உடனுக்குடன் தமிழ் ராக்கர்ஸ் போன்ற தளங்களில் வெளியாகிவருவது தயாரிப்பாளர்களுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது. அந்த சினிமா பைரஸி குறித்த வெப் சீரிஸ்தான் இந்த 'தமிழ் ராக்கர்ஸ்'. இந்தத் தொடரின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் இறங்கியிருக்கிறது ஏவிஎம் நிறுவனம். இந்தத் தொடருக்கான விமர்சனங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
மிகச் சிறப்பாக ஆராய்ச்சி செய்து இந்தத் தொடரின் கதையை உருவாக்கியுள்ளதாகக் கூறுகிறது Pinkvilla இணையதளத்தின் விமர்சனம்.
படத்தின் கதையைப் பற்றிக் கூறும்போது, 'ஆக்ஷன் ஸ்டார் ஆதித்யா நடித்து 300 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட கருடா திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது. ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாகவே, படத்தை வெளியிடுவதாக சவால் விடுகிறார்கள் தமிழ் ராக்கர்ஸ் என்ற, சட்டவிரோதமாக படங்களை வெளியிடும் இணையதளத்தினர். அதற்குள் அவர்களைப் பிடிக்க களத்தில் இறங்குகிறார் ருத்ரா (அருண் விஜய்). அவர்களைப் பிடிக்க முடிந்ததா என்பது மீதிக் கதை." என்கிறது Pinkvilla.
"இந்தத் தொடரில் திரைப்படங்களைப் பற்றிச் சொல்லும்போது எந்த அளவுக்கு யதார்த்தத்திற்கு பொருந்துமோ, அந்த அளவுக்கு நெருக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு ஹீரோவின் ரசிகர்கள் தங்களுக்குப் பிடிக்காத மற்றொரு ஹீரோவைப் பற்றி மோசமாகப் பேசுவது போன்ற காட்சிகள் இதற்கு உதாரணம்.
தயாரிப்பாளர் கவுன்சிலில் நடக்கும் விவாதங்கள், லாஜிக்கே இல்லாத மசாலா படங்களில் மேஜிக் இருப்பதாகப் பேசுவது, இந்த ஓடிடி காலகட்டத்திலும் ரசிகர்கள் பெரிய திரையில் படங்களைப் பார்க்க விரும்புவது, மோசமான விமர்சனங்கள் ரசிகர்களின் தேர்வில் ஏற்படுத்தும் தாக்கம் என தொடர்ந்து சொல்லக்கொண்டே போகலாம்.
ஆனால், ஹீரோவின் கதையை ஃப்ளாஷ் பேக்கில் சொல்லிக்கொண்டே வருவது தொடரை பின்னுக்கு இழுக்கிறது.
இருந்தபோதும் மீண்டும் பார்வையாளர்களை ஏதோ ஒரு வகையில் ஒன்றச் செய்கிறது திரைக்கதை" என்கிறது Pinkvillaவின் விமர்சனம்.
இந்தத் தொடரின் துப்பறியும் பகுதிகள் மிக மோசமாக இருப்பதாகவும் உச்சத்தை நோக்கி அவை செல்லவேயில்லையென்றும் கூறுகிறது The Hinduவின் விமர்சனம்.
"இந்தத் தொடரை அமைதியாகப் பார்க்க வேண்டுமென்றால் முதலில் வசனங்களும் பாத்திரங்களின் உதட்டசைவும் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதை விட்டுவிட வேண்டும். இந்த எட்டு எபிசோட்களிலும் உதட்டசைவும் சவுண்ட் எஃபக்ட்களும் சுத்தமாகப் பொருந்தவில்லை.
படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக தமிழ் ராக்கர்ஸில் படம் வந்துவிடும் என்று சொல்வது ஒரு டைம் - பாம் வெடித்துவிடும் என்று சொல்வதைப் போல. ஆனால், தொடரின் எந்த இடத்திலும் ஒரு நெருக்கடியையோ, சஸ்பென்ஸையோ நாம் உணர்வதில்லை. இத்தனைக்கும் இந்தக் கதையில் அதற்கான அம்சங்கள் இருக்கவே செய்கின்றன. ஆச்சரியமூட்டும் வகையில், இரண்டாவது எபிசோடிலேயே இந்த தமிழ் ராக்கர்ஸ் குழுவின் பின்னால் இருப்பது யார் என்பதைக் காட்டிவிடுகிறார்கள். அதனால், இதை யார் செய்கிறார்கள் என்ற சுவாரஸ்யம் போய்விடுகிறது. எதற்காக, ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்ற கதையும்கூட எதிர்பார்க்கும் வகையிலேயே இருக்கிறது.
தொடரிலேயே மிகப் பெரிய பிரச்னை ருத்ராவின் பாத்திரப் படைப்புதான். அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே ருத்ரா மிக கரடுமுரடான காவல்துறை அதிகாரியாக காட்டப்படுகிறார். நீதியை நிலைநாட்ட எந்த எல்லைக்கும் செல்வார் என்பதைக் காட்டுகிறார்கள். சொந்த வாழ்வில் சோகத்தை எதிர்கொண்ட காவல்துறை அதிகாரி ஒரு வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார் என்பது புதிதல்ல. அவர் என் அப்படி ஆகிறார் என்பது பின்னால் சொல்லப்படும். தமிழ் ராக்கர்ஸில் அப்படியல்ல. எல்லாவற்றையும் முதலிலேயே சொல்லிவிடுகிறார்கள்." என விமர்சித்திருக்கிறது The Hindu.
"தமிழ் ராக்கர்ஸின் திரைக்கதையைப் பார்க்கும்போது, 'யார் இதைச் செய்திருப்பார்கள்?' என்ற வகையிலான நல்லதொரு த்ரில்லராக வந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், திரையில் விரியும்போது அடுத்து என்ன நடக்கும் என்பது முன்பே தெரிந்துவிடுகிறது. சட்டவிரோத இணைய தளத்தின் தொழில்நுட்பம், திரையரங்குகளில் வேலை பார்ப்பவர்களுடனான தொடர்புகள், அவர்களுடைய வருவாய் வழிகள், அவர்களைக் காவல்துறை துரத்துவது எல்லாம் சேர்ந்து நல்லொதொரு தொடராக வந்திருக்க வேண்டியது. ஆனால், அப்படி நடக்கவில்லை.
ஏற்கெனவே எல்லோருக்கும் தெரிந்த தகவல்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிக்கொண்டே போகிறார் இயக்குனர் அறிவழகன். மிக துயரமான சம்பவம் நடக்கும்போதுகூட, அந்தப் பாத்திரங்களின் மீது நமக்கு இரக்கம் வருவதில்லை. ஏற்கனவே எல்லாவற்றையும் பார்த்ததுபோல இருப்பதுதான் இதற்குக் காரணம். படத்தில் வரும் மோதல்கள் எல்லாம் ஹீரோவுக்கு வசதியாக சீக்கிரமே முடிந்துவிடுகின்றன.
இருந்தாலும் ஒரு தயாரிப்பாளரின் நிலையை எம்.எஸ். பாஸ்கர் விவரிக்கும் கட்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால், தயாரிப்பாளர்கள் மீது இரக்கம் வர வேண்டுமென்பதற்காக அந்தக் காட்சி திணிக்கப்பட்டிருக்கிறது.
மனைவியை இழந்த துயரத்தில் இருக்கும் கணவனாக, அருண் விஜய் அந்தப் பாத்திரத்திற்கு சிறப்பாகவே பொருந்துகிறார். மிக நீளமாக எடுக்கப்பட்டுள்ள இந்தக் கதையில், அவருடைய பாத்திரம்தான் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கிறது. வாணி போஜனும் நன்றாக நடித்துள்ளார். வினோதினி, வினோத் சாகர் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களுக்கு தேவையான அளவு நடித்துள்ளனர்.
தமிழ் ராக்கர்ஸ் ஒரு வீணடிக்கப்பட்ட வாய்ப்பு" என விமர்சித்திருக்கிறது இந்தியா டுடே இணையதளம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்