"இலங்கை ராணுவ முகாமில் பாலியல் வன்கொடுமை" - பாதிக்கப்பட்ட பெண்ணும் சர்வதேச அமைப்புகளும் கூறுவது என்ன?

    • எழுதியவர், ஆர்.யசிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

(எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன)

"இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் வெறுமனே சாதாரண குற்றங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. மாறாக, அவை வேண்டுமென்றே, திட்டமிட்டு பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும்" என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

ஆனால், ராணுவம் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கின்றோம் என, ராணுவ ஊடகப்பேச்சாளர் வருண கமகே தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, ராணுவம் இத்தகைய குற்றங்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை என, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கூறுவது என்ன?

"இறுதிக்கட்ட போரின்போது ராணுவத்தில் சரணடைந்த பின்னரே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். ராணுவத்தினரால் நேரடியாக பாலியல் கொடுமைக்கு உள்ளாகிய நான் பின்னர் எனது சமூகத்தினாலும் ஓரங்கட்டப்பட்ட ஒருவராக நடத்தப்பட்ட போது அந்த வேதனையில் பல தடவைகள் தற்கொலை செய்துகொள்ள முயன்றேன் " என, இறுதிக்கட்ட போரின் பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான முன்னாள் போராளி ஒருவர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் போராட்ட அமைப்புடன் இணைந்து மருத்துவ போராளியாக செயற்பட்ட பெண்ணொருவர் பிபிசி தமிழுக்கு வழங்கிய பேட்டியில் இந்த விடயங்களை பகிர்ந்துகொண்டார். அக்காலகட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இந்த வேதனையான சம்பவத்தால் பல ஆண்டுகள் நான் மீள முடியாத அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்" என்றார்.

ராணுவத்தினரால் நேரடியாக பாலியல் கொடுமைக்கு உள்ளானதாக குற்றச்சாட்டும் அவர், தமது சமூகத்தினாலும் ஓரங்கட்டப்பட்ட ஒருவராக நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

உயர்தரம் படிக்கும்போது வடக்கு கிழக்கில் அப்போது நிகழ்ந்த போர்க்கால சூழ்நிலைகள் காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மருத்துவ போராளியாக இணைந்துகொண்டதாக தெரிவித்தார். நேரடியாக போராட்ட களத்தில் இருக்காவிட்டாலும் போராளிகளுக்கு மருத்துவ உதவிகளை செய்து தன்னை ஒரு மருத்துவ போராளியாக மாற்றிக்கொண்டதாக கூறுகிறார் அவர். பின்னர் இறுதிக்கட்ட போர் முடிவில் ராணுவத்திடம் சரணடைந்தபோது பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்ததாக தெரிவித்த அவர், வாழ்நாளில் முகங்கொடுக்க முடியாத வேதனையான நாட்களை ராணுவ முகாமில் கடத்தியதாகவும் கூறினார்.

"புனர்வாழ்வின் பின்னர் வெளியில் வந்தபோதும் பல்வேறு இன்னல்களை சந்தித்தேன், பின்னர் உறவினரின் உதவியுடன் லண்டனுக்கு வந்த பின்னர் நீண்ட நாட்களாக இந்த மன வேதனையுடன் காலத்தை கடத்திய நிலையில், இப்போது எனக்கான வாழ்க்கையை வாழ ஆசைப்படுகின்றேன்" என கூறினார்.

"வடக்கு-கிழக்கில் திட்டமிட்டே பாலியல் வன்கொடுமைகள்" - ஐ.நா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளது.

"அக்காலகட்டத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள் வெறுமனே சாதாரண குற்றங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. மாறாக, அவை வேண்டுமென்றே, திட்டமிட்டு பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும். இந்த நடவடிக்கைகள் போர்க்குற்றங்கள் அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாக அடையாளப்படுத்தப்படக்கூடியவையாகும்" என அதில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், இவை அந்தந்த நபர்களின் ஊடாக தகவல்களைத் சேகரிப்பதற்கும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்குவதற்கும், பரவலான அச்ச மற்றும் அவமான உணர்வை அந்த சமூகத்திடையே வேரூன்றச் செய்வதற்குமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான வன்முறை சம்பவங்கள் கட்டமைப்பு ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், மோதலினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அதனூடாக வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டன எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

"இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான பதிவுகள் நீண்டகாலமாகப் பேணப்பட்டாலும், இலங்கை அரசாங்கங்கள் மோதலின் போதான பாலியல் வன்முறைகள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தவறியிருப்பதுடன், வன்முறைகளின் தீவிரத்தன்மையைக் குறைத்துக்கூறி அல்லது மறுத்து வந்திருக்கின்றன." எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகம் இதுபற்றி தீவிர கரிசனையை வெளிப்படுத்தி, நம்பத்தகுந்த பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி வந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் நீதியை அணுகுவதற்கான வாய்ப்பு தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது எனவும் அவ்வறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், "மோதலின் போதான பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டனைகளில் இருந்து விடுபடும் போக்கு இந்த ஆட்சியிலும் தொடர்வதுடன், இந்த விவகாரங்களில் இன்னமும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் எட்டப்படவில்லை. இந்த மீறல்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களில் பெரும் எண்ணிக்கையானோருக்கு நீதி மறுக்கப்பட்டிருப்பதுடன், அத்தகைய மீறல்களுக்கு இடமளித்த கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் இன்னமும் தொடர்கின்றன" எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளது.

மிக மோசமான பாலியல் வன்முறை சம்பவங்கள் தற்போது வரை கவனத்தில்கொள்ளப்படாமலும், பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமலும் இருப்பதானது பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களைப் பெரிதும் நலிவடையச் செய்திருக்கிறது என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

போர்க்கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அதன் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தவறியிருப்பது பாலியல் வன்முறைகளிலிருந்து நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதில் அரசுகள் அடைந்திருக்கும் தோல்வியையும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதையுமே பிரதிபலிக்கின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

"அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக, 'கடந்த காலங்களில் அரச படையினர் மற்றும் ஏனைய தரப்பினரால் பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன' என்ற விடயத்தை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, பொறுப்புக்கூறலை இலக்காகக்கொண்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மோதல்கால பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டோர் முகங்கொடுத்துவரும் துன்பத்தைப் புரிந்துகொண்டு, அவர்களை மேலும் மன உளைச்சலுக்குள் தள்ளுவதைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் வாழும் இடங்களில் நிறுவப்பட்டுள்ள யுத்த வெற்றிச்சின்னங்களை அகற்ற வேண்டும்" என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

"குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம்"

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் ஜெரெமி லோரன்ஸ், "யுத்த காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல், அந்த உண்மையை அங்கீகரித்தல் மற்றும் இழப்பீடு வழங்கல் என்பன உறுதி செய்யப்படாமையானது, இந்த மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தை உருவாக்கியுள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.

2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டு வரப்பட்ட மோதலினால் பாதிக்கப்பட்ட பலர் தற்போதும் நாற்பட்ட உடலியல் உபாதைகள், உளவியல் தாக்கங்கள், தற்கொலை எண்ணங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், பல்வேறு சர்வதேச சட்டங்கள் மற்றும் பிரகடனங்களின்படி மோதல்களின் போதான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கும், அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை வழங்குவதற்குமான சட்டக்கடப்பாடு இலங்கைக்கு இருக்கிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

"தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட அநீதி"

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை, மோதல் கால பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கான நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு விடுக்கும் தெளிவான அழைப்பாக அமைய வேண்டும் என, சர்வதேச மன்னிப்புச்சபையும் வலியுறுத்தியுள்ளது.

மோதலின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதற்கான தூண்டுதலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார், சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங்.

"தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வேண்டுமென்றே, பரந்துபட்டளவில், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை என்ற யாவரும் அறிந்த உண்மை இவ்வறிக்கையில் மீளுறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இவற்றில் சில சம்பவங்களை போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாக வகைப்படுத்த முடியும்" எனவும் ஸ்மிரிதி சிங் தெரிவித்துள்ளார்.

"நம்பகமான சர்வதேச பொறுப்புக்கூறல் அவசியம்"

இந்நிலையில், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (ITJP) வெளியிட்டுள்ள அறிக்கையிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் போர்க்கால சூழலில் பாதிக்கப்பட்ட பின்னர் அகதிகளாக லண்டனில் வசிக்கும் தமிழர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுக்கு அமைய சில தகவல்களை வெளியிட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிர்தப்பிய தமிழர்களுடன் இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட கலந்தாய்வுகளின் முடிவுகளே இந்த அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு ஆய்வு செய்கிறது. அத்துடன் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களில் பலர், போர் முடிந்த பிறகு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், முழுமையான உளவியல் மற்றும் மருத்துவ ஆதரவு, பாதுகாப்பான குடியிருப்பு, சமூகத்தில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள், சட்ட ரீதியான தீர்வுகள், குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது போன்றவை இதில் அடங்குவதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

இலங்கையில் இருந்தபோதும் அல்லது வெளிநாட்டில் அகதியாக வாழ்ந்தபோதும், பயம், அவமானம், தனிமை ஆகியவை தங்கள் வாழ்க்கையை ஆட்கொண்டதாக சாட்சியமளித்த நபர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடி வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வன்முறைகள் தமிழர்களின் தனித்துவம், கலாசாரம், மனநிலை ஆகியவற்றை அழிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

தன் உடலில் உள்ள காயங்களைப் பற்றி குழந்தை கேட்டபோது என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை என ஒரு தந்தை வேதனையுடன் பகிர்ந்தார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "இந்த கலந்தாய்வில் கலந்துகொண்ட பிறகு, பாலியல் வன்முறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தேன். இது மிக முக்கியமான உண்மை," என ஒருவர் கூறியுள்ளார் என பல சாட்சியங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகமான சர்வதேச பொறுப்புக்கூறல் அமைப்புகள், முழுமையான இழப்பீட்டு திட்டங்கள், நீடித்த மனநல ஆதரவு ஆகியவை அவசியம் என வலியுறுத்தியுள்ளது.

"தொடர் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகின்றனர்"

இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கையில், "இலங்கையில் யுத்த காலத்தில் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றமையும், அம்மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை ஊடாக மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுளார்.

மேலும், " மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமல் இருப்பது ஒருபுறமிருக்க குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இதனை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப்புதைகுழி பற்றியும், அதற்கு அப்பாலும் பல உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள போதிலும், அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு, உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு அரசாங்கம் இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று தெரிவித்தார் அம்பிகா.

"யுத்த காலத்தில் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்கள் அதன் நீட்சியாக தற்போதுவரை பல்வேறு உளவியல் தாக்கங்களுக்கு முகங்கொடுத்துவருவதாகவும், அம்மீறல்கள் பற்றி முறைப்பாடு அளிப்பவர்கள் காவல்துறை மற்றும் ராணுவத்தினரின் தொடர் கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு இலக்காவதாகவும்" அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் 'இப்புதிய அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறது என்பது பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் அரசாங்கம் உண்மையாகவே ஒரு நியாயமான தன்முனைப்பைக் கொண்டிருக்குமாயின், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகள் இலங்கைக்கு வருவதற்கும், இங்கு அவர்களது பணியை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்பட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

"இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையில் பாரப்படுத்தப்போகிறோமா?"

'இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மிக மோசமான அட்டூழியங்கள் இடம்பெற்றதாக நாம் கூறியபோது, அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனப் பலரும் மறுத்துவந்தார்கள். ஆனால், இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின் மூலம் நாம் கூறிய அனைத்து விடயங்களும் உண்மை என்பது உறுதியாகின்றது,' என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் பல்வேறு தரப்பினரால் மறுக்கப்பட்டுவந்த பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மீறல்கள் உண்மையிலேயே நிகழ்ந்திருக்கின்றன என்ற உண்மை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை மூலம் நிரூபணமாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியதுடன், இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேவேளை, "இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போகிறோம்? இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்தப் போகிறோமா? அப்படி என்றால் அதனை எவ்வாறு செய்வது என்பன தொடர்பில் ஆராய வேண்டும்" எனவும் லீலாதேவி குறிப்பிட்டார்.

'ராணுவம் ஒருபோதும் குற்றங்களில் ஈடுபடவில்லை' - ஜெனரல் சவேந்திர சில்வா

தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தின் போது, 53ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக செயற்பட்டிருந்தவரும் முன்னாள் ராணுவத் தளபதியும், பின்னர் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக கடமையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

"இலங்கையில் மிக நீண்டகாலமாக நிலவிய யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததில் இருந்தே இலங்கை அரசாங்கம் மீதும், ராணுவம் மீதும் தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவது புதிதல்ல. இலங்கை ராணுவம் மீதான போர் குற்றச்சாட்டுகள் இன்னமும் நீங்கவில்லை என தெரிவித்த அவர், ராணுவம் ஒருபோதும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்றார்.

புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்காகவும், வேறு சில செயற்பாடுகளுக்காகவும் தொடர்ச்சியாக முன்வைக்கும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை கண்டித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். அதேபோல், ராணுவம் மீது களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக இவ்வாறான பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதை தான் முழுமையாக நிராகரிக்கின்றேன் என்றும் எப்போதும் தான் ராணுவத்தின் பக்கம் நின்று குரல் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

"குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கின்றோம்" - ராணுவ ஊடகப்பேச்சாளர்

ராணுவம் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கின்றோம் என, ராணுவ ஊடகப்பேச்சாளர் வருண கமகே தெரிவித்துள்ளார்.

"இதுவொரு பாரதூரமான குற்றச்சாட்டாகும், ஆனால் எந்தவித அடிப்படையும் இல்லாத முழுக்க முழுக்க போலியாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றே நாம் கூறுவோம். முதலில் இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது" என்றார் ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலகட்டத்தில் ராணுவத்தினால் திட்டமிடப்பட்டு இவ்வாறான பாலியல் கொடுமைகள் இடம்பெற்றதாக எந்தவித வழக்கு விசாரணைகளும் இதுவரை இடம்பெறவில்லை என்றார்.

"சர்வதேச நாடுகளில் உள்ள புலம்பெயர் அமைப்புகளின் நோக்கங்களுக்காக தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன, அவற்றை நாம் கருத்தில் கொள்ளப்போவதில்லை, அதேநேரம் இலங்கைக்குள் தற்போது அமைதியான சூழல் காணப்படுகின்ற நிலையில் அதனை குழப்பவும் நாம் இடமளிக்க மாட்டோம்" என தெரிவித்த ராணுவ பேச்சாளர் வருண கமகே இவ்வாறான திட்டமிடப்பட்ட செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.

முக்கிய குறிப்பு

தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை உருவாகுமேயானால், உடனடியாக தொடர்புகொள்ளும் தொலைபேசி இலக்கங்கள் இலங்கையில் தற்போதும் நடைமுறையில் உள்ளன.

707 308 308, 1333, 1926 போன்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக, தமது மனநிலையை சரி செய்துகொள்ள முடியும்.

இந்த இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக தற்கொலைகளை தடுக்க முயற்சி செய்ய முடியும்.

இந்தியாவில் உதவியை நாடுபவர்கள்

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு