எண்ணித்துணிக - திரைப்பட விமர்சனம்

பட மூலாதாரம், @RainofarrowsENT
நடிகர்கள்: ஜெய், அதுல்யா ரவி, சாம் சுரேஷ், வம்சி கிருஷ்ணா; இசை: சாம் சி.எஸ். இயக்குநர்: வெற்றிச்செல்வன்.
இந்த வாரம் எட்டுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், ஜெய், அதுல்யா ரவி ஆகியோர் நடித்த எண்ணித்துணிக படத்தின் விமர்சனம் ஊடகங்களில் தற்போது வெளியாகி வருகிறது.
2000 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை கொள்ளையடிப்பதைப் பற்றிய கதை என்கிறது தினமலர் நாளிதழின் விமர்சனம்.
"ஜெய் - அதுல்யா ரவி காதலர்கள். நகை வாங்குவதற்காக அதுல்யா அமைச்சரின் பினாமி கடை ஒன்றுக்குச் செல்கிறார். அந்த சமயம் அங்கு வரும் முகமூடிக் கொள்ளையர்கள், 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தைக் கொள்ளையடிப்பதோடு அதுல்யா உள்ளிட்ட சிலரையும் கொன்றுவிடுகிறார்கள். தன் காதலியைக் கொன்றவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார் ஜெய். அந்தக் கொள்ளையர்களை அவர் கண்டுபிடித்தாரா, பழிவாங்கினாரா என்பது மீதிக் கதை" என அந்தக் கதையை விவரிக்கிறது தினமலர்.
படத்தின் ஆரம்பம் வைரக் கொள்ளையில் ஆரம்பித்தாலும் அதற்குப் பிறகு காதல் படமாக மாறிவிடுகிறது. ஜெய் - அதுல்யா இடையிலான காதலைப் பற்றிச் சொல்ல அதிக நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் என்ற விமர்சனத்தையும் தினமலர் முன்வைத்திருக்கிறது.

ஏதோ சொல்ல வர்றாங்க.....
படத்தின் முதல் பாதியை ஒப்பிடும்போது இரண்டாம் பாதி சற்று ஆறுதல் என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம். "ஏதோ சொல்ல வருகிறார்கள் என ஆர்வத்தோடு அமர்ந்திருக்கும் ஆடியன்ஸுக்கு காதல் காட்சி என கூறி வரும் ஃப்ளாஷ்பேக் சோதனை. அதையொட்டி நீளும் காதல் பாடலும், சில காமெடிகளும் வேதனை. இதெல்லாம் முடிந்து படத்தின் மையக்கருவை நோக்கி படம் நகரும்போது சுவாரஸ்யமில்லாத விசாரணைக் காட்சிகளால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகு படத்தின் திரைக்கதை வேகமெடுக்க தொடங்குகிறது." என்கிறது இந்து தமிழ் திசை.
ஜெய் தனது வழக்கமான நடிப்பை பதிவு செய்திருப்பதாகவும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணாவின் நடிப்பு பார்வையாளர்களை ஈர்ப்பதாகவும் அதுல்யா காதல் காட்சிகளுக்காகவும், டூயட் பாடலுக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த விமர்சனம் கூறுகிறது.

டிவி சீரியல் மாதிரியே நடிக்குறாங்க
இந்தப் படம் ஒரு அரைவேக்காட்டுத்தனமான முயற்சி என கடுமையாக விமர்சித்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.
"ஒரு தீவிரமான ஆக்ஷன் த்ரில்லருக்கான கதை இருந்தாலும்கூட, நமக்குக் கிடைப்பதென்னவோ திறமையற்ற திரைக்கதை, வெகு சாதாரணமான படமாக்கத்துடன் கூடிய அரைவேக்காட்டுத்தனமான முயற்சிதான். படமாக்கமே மிகவும் அமெச்சூர்த்தனமாக இருக்கிறது. காட்சிகளை விறுவிறுப்பாக தொடர்ந்து அசைந்துகொண்டேயிருக்கும் கேமரா, திடீரென ஜூம் செல்வது போன்றவற்றையே நம்பியிருக்கிறார் இயக்குநர்.
படத்தில் நடித்திருப்பவர்கள் டிவி சீரியல்களில் நடிப்பதைப் போல நடித்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் தீவிரமே இல்லை. கதையில் நடக்கும் சம்பவங்கள் நம்மிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. சில திருப்பங்கள் மட்டுமே நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. மொத்தமாகப் பார்க்கும்போது, படத்தின் டைட்டிலே நமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையோ என்று தோன்றுகிறது" என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













