நடிகை சித்ரா மரண வழக்கு: கணவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த சித்ரா சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில், அவரது கணவர் ஹேமந்த் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
சின்னத்திரைக் கலைஞரான சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி தனியார் ஹோட்டல் அறை ஒன்றில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது கணவர் ஹேம்நாத் என்பவரும் சித்ராவும் ஒன்றாகத் தங்கியிருந்த நிலையில், தன்னை அறையிலிருந்து வெளியேற்றி விட்டு, சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக ஹேம்நாத் கூறினார்.
ஆனால், தங்கள் மகளின் மரணத்திற்குக் காரணம் ஹேம்நாத்தான் என அவரது தாயார் விஜயா குற்றம்சாட்டியிருக்கிறார். அதன் பேரில் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
பின்னர் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று ஹேம்நாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் காவல்துறை மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று கூறியது.
இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை நீதிபதி சதீஷ் குமார் முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது சித்ராவின் தந்தையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேம்நாத் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார். ஆனால், தனக்கும் சித்ராவின் மரணத்திற்கும் தொடர்பில்லை என ஹேம்நாத் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஹேம்நாத் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்ய முடியாது எனத் தீர்ப்பளித்தார்.
பின்னணி
மருந்தகம் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டுள்ள ஹேம்நாத்தும் சித்ராவும் ஒன்றாகப் பழகிவந்த நிலையில், இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணத்தை முறைப்படி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்த இரு வீட்டாரும் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், சென்னையை அடுத்த பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள திரைப்பட நகரில் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வந்த சித்ரா, தினமும் கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்க விரும்பினார்.
அதனால் நசரத்பேட்டையில் உள்ள விடுதியில் ஹேமந்துடன் தங்க அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சித்ராவுக்கு நிதிப்பிரச்னை இருந்ததாகவும், தங்களின் திருமணத்தை மிகப்பெரிய அளவில் நடத்த அவர் திட்டமிட்டதால் பணப் பிரச்னை இருந்ததாக காவல்துறையினரிடம் ஹேமந்த் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், சித்ரா இறந்த நாளுக்கு முன்தினம் படப்பிடிப்பு தளத்துக்கே சென்று சித்ராவுடன் ஹேமந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக படப்பிடிப்பு தளத்தில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













