நடிகை சித்ரா மரணம்: கணவர், மாமனாரிடம் பல மணி நேரம் விசாரணை

நடிகை சித்ரா

பட மூலாதாரம், Instagram chithuvj

தமிழ் சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் மற்றும் மாமனாரிடம் காவல்துறையினர் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை ரஸ மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

நடிகை சித்ராவின் சடலம், கடந்த புதன்கிழமை அதிகாலையில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

அந்த விடுதி அறையில் நடிகை சித்ராவும் அவரது கணவர் ஹேமந்தும் தங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில், சம்பவ நாளில் நள்ளிரவுக்கு பிந்தைய நேரத்தில் அறைக்கு வந்த சித்ரா, தான் குளிக்கப்போவதாகக் கூறி ஹேமந்தை வெளியே இருக்கக் கூறியதாகவும் அதன் பிறகு வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால், மாற்றுச் சாவியை வாங்கி அறையை திறந்தபோது அவர் தூக்கிட்ட நிலையில் இருந்ததாகவும் ஹேமந்த் காவல்துறை விசாரணையில் கூறினார்.

அவரது கன்னத்தில் நகக்கீறல்கள் இருந்ததால் அவரது மரணம் தொடர்பாக காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், சித்ராவின் தந்தை காமராஜ், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் தனது மகளின் மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்குமாறு புகார் அளித்தார்.

சித்ரா, ஹேமந்த் இடையே பதிவுத் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்ததாக தெரிய வந்ததையடுத்து, விதிகளின்படி அவரது மரணம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் சித்ராவின் கணவர், அவரது மாமனார் உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, சித்ராவின் உடலை கைப்பற்றி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல் கூராய்வுக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதில், அவரது மரணத்துக்கு காரணம் தற்கொலைதான் என்றும் கன்னத்தில் இருந்த கீறல்கள் சித்ராவின் நக கீரல்கள்தான் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

நடிகை சித்ரா

பட மூலாதாரம், Instagra chithuvj

இந்த நிலையில், சித்ராவின் செல்பேசியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர் கடைசியாக இரவில் அவரது தாயுடன் பேசியதை கண்டுபிடித்தனர். ஆனால், அவரது செல்பேசிக்கு வந்த குறுந்தகவல்கள், வாட்ஸ்அப் தகவல்கள் அழிக்கப்பட்டிருந்ததால் அதன் விவரங்களை திரட்ட சைபர் பிரிவு காவல்துறையின் உதவி நாடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்திடம் அதிகாரிகள் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர். ஹேமந்தின் மாமனார், சித்ரா கடைசியாக நடித்த படப்பதிவு தளத்தில் இருந்த ஊழியர்கள் ஆகியோரிடமும் இந்த விசாரணை தனித்தனியாக நடந்தது.

மருந்தகம் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டுள்ள ஹேமந்த், சித்ராவுடன் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு அவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தை முறைப்படி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்த இரு வீட்டாரும் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், சென்னையை அடுத்த பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள திரைப்பட நகரில் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வந்த சித்ரா, தினமும் கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்க விரும்பினார். அதனால் நசரத்பேட்டையில் உள்ள விடுதியில் ஹேமந்துடன் தங்க அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சித்ராவுக்கு நிதிப்பிரச்னை இருந்ததாகவும், தங்களின் திருமணத்தை மிகப்பெரிய அளவில் நடத்த அவர் திட்டமிட்டதால் பணப்பிரச்னை இருந்ததாக காவல்துறையினரிடம் ஹேமந்த் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், சம்பவ நாளுக்கு முன்தினம் படப்பிடிப்பு தளத்துக்கே சென்று சித்ராவுடன் ஹேமந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக படப்பிடிப்பு தளத்தில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக ஹேமந்திடம் நடத்திய விசாரணையில் முரண்பட்ட தகவல்கள் வெளிவந்ததால் அவரிடம் வெள்ளிக்கிழமை துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி விசாரணை நடத்தினார்.

நடிகை சித்ரா

பட மூலாதாரம், Instagram chithuvj

சித்ராவின் செல்பேசியில் உள்ள தகவல்கள் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, சித்ராவுடன் கடைசியாக பேசிய அவரது தாயார் விஜயாவிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதன் பிறகே, சித்ரா ஏன் தற்கொலை செய்து கொண்டார், அவரை தற்கொலைக்கு தூண்டியதற்கான காரணங்கள் என்ன என்பது தெரிய வரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: