அன்புச் செழியன்: கோலிவுட்டின் சக்திவாய்ந்த நபராக உருவானது எப்படி? அவரின் பின்புலம் என்ன?

- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சினிமா ஃபைனான்சியரான 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புச் செழியன் தொடர்பான சுமார் 40 இடங்களில் இரண்டாவது முறையாக வருமான வரித் துறை சோதனைகளை நடத்தியிருக்கிறது. தமிழ்த் திரையுலகின் ஃபைனான்சியர்களின் மிக சக்தி வாய்ந்த நபராக அன்புச்செழியன் பார்க்கப்படுகிறார். அவருடைய பின்புலம் என்ன?
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தாலுகாவில் உள்ள பம்மனேந்தல் கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் அன்புச்செழியன். வறண்ட பூமி ஆன ராமநாதபுரத்தில் போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தினால் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்த அன்புச் செழியன் தனது ஊரைச் சார்ந்த சிலர் ஒரு சில அரசியல்வாதிகளின் ஆதரவோடு மதுரையில் லாபகரமாக வட்டித் தொழில் செய்துவந்ததைப் பார்த்தார்.
இதையடுத்து, தன்னிடம் இருந்த ஒரு சில ஆயிரங்களோடு கடந்த 1997ஆம் ஆண்டு மதுரைக்கு வந்து சிறு வியாபாரிகளுக்கு முதலில் வட்டிக்கு பணம் கொடுக்க தொடங்கினார். சிறிய முதலீட்டிலேயே குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்க ஆரம்பித்தது. அப்போது ஒரு சிலர் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் கொடுத்து அதிக லாபம் பெறுவதைக் கண்டார். அவர்களது வட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அன்புச்செழியன் 2000வது ஆண்டில் திரைப்படத்துறையில் ஃபைனான்சியராக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஃபைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களிடம் நிதியுதவியைப் பெற பல கட்டுப்பாடுகள் இருந்தன. பல தருணங்களில் பணத்தை ரொக்கமாகத் தராமல், வங்கியில் செலுத்துவோம் என்றும் கூறிவந்தனர். ஆனால், அன்புச்செழியனிடம் பணம் எளிதில் கிடைத்தது. கேட்டவுடன் ரொக்கமாகவும் கடன்களைத் தந்துவந்துள்ளார்.
இதனால், தமிழ் சினிமாவில் இருந்த தயாரிப்பாளர்கள், வட மாநில ஃபைனான்சியர்களுக்குப் பதிலாக அன்புச்செழியனை நாடத்துவங்கினர். 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஆளும்கட்சியினரின் ஆதரவும் கிடைத்ததால், மிக வேகமாக வளரத் துவங்கினார். இவருக்குத் துணையாக அவருடைய சகோதரர் அழகரும் இணைந்து செயல்பட்டார். தயாரிப்பாளர்களுக்கு பணத்தைக் கொடுக்கும்போது அன்புச்செழியன் பெரிதாக கேள்விகள் கேட்கமாட்டார், மிக மரியாதையாக நடந்துகொள்வார் என்றாலும், கொடுத்த பணம் திரும்பவராவிட்டால், அவருடைய கடுமையான முகத்தை பார்க்க நேரிடும்.
ஆரம்ப காலத்தில் தான் கடன் கொடுத்த தொகைக்கு குறைந்த வட்டியே பெற்றுவந்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டியைத் தராவிட்டால் வட்டியின் அளவும் மடங்கும் வேகமாக அதிகரிக்கும் என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத, அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்.
"தமிழ்நாட்டில் தற்போது எந்த படம் வெளியாக வேண்டும் என்றாலும் அதில் அன்புச்செழியன் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். இன்று பல கோடிகளை தமிழ் திரையுலகில் முதலீடு செய்திருக்கிறார் அவர். இந்தப் பணத்தில் அவரது சொந்தப் பணம் மட்டுமல்லாது, தொழிலதிபர்கள், ஒரு சில அரசியல் புள்ளிகளின் பணமும் இருக்கிறது. ஆகவே, அரசியல் புள்ளிகளும் அவருக்கு அரணாக இருப்பார்கள். ஒரு கட்சியோடு நெருக்கமாக இருந்தாலும், எந்தக் கட்சியையும் பகைத்துக்கொள்ள மாட்டார்" என்கிறார் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஒருவர்.
அதே நேரத்தில் இவரால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களும் உண்டு. உதாரணமாக சுந்தரா ட்ராவல்ஸ் படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் என்பவர் வாங்கிய 20 லட்ச ரூபாய் கடனுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை எழுதி கொடுக்க வேண்டியிருந்தது. இது தொடர்பாக தங்கராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் அன்புச்செழியன் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இயக்குனர் லிங்குசாமியிடம் அவர் தயாரித்த 'ரஜினி முருகன்' படத்தின் லாபம் முழுவதையும் எழுதி வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல, இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக்குமாரின் தற்கொலைக்கும் அன்புச் செழியனே காரணம் எனக் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அன்புச் செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் தொடர்ச்சியான நடவடிக்கை இல்லை என்பதுபோக, அரசியலில் உயர் மட்டங்களில் இருப்பவர்களோடு தொடர்ந்து நல்லுறவைப் பேணுவது இவரை சக்தி வாய்ந்த நபராகவே நீடிக்கச் செய்கிறது.
கடந்த 2015ஆம் ஆண்டிலும் 2020ஆம் ஆண்டிலும் பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினா் சோதனை செய்தனா். 2020ஆம் ஆண்டு நடந்த சோதனையில் கணக்கில் வராத தொகையாக சுமார் 65 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில்தான் இப்போது மீண்டும் வருமான வரி சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஃபைனான்ஸ் செய்வதுபோக, கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் ஆண்டவன் கட்டளை, வெள்ளைக்கார துரை, தங்கமகன், மருது உள்ளிட்ட படங்களையும் அன்புச் செழியன் தயாரித்துள்ளார். உத்தமவில்லன், விக்ரம் உள்ளிட்ட பல்வேறு பிரபல படங்களின் தயாரிப்புகளுக்கு கடனுதவி செய்துள்ளார்.
இவர் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரினை தொடர்ந்து சென்னை, மதுரை மாவட்டங்களில் அன்புசெழியன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் தற்போது மூன்றாம் நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் அன்புச்செழியன், அவரது மகள் சுஷ்மிதா, இளைய சகோதரர் அழகர் ஆகியோர் தொடர்புடைய வீடுகள், தெற்குமாசி வீதியில் உள்ள அலுவலகம், செல்லூரில் உள்ள திரையரங்கம், மீனாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள ஓட்டல் என சுமார் 30 இடங்களில் 50 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













