You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அஜித்தின் 'வலிமை' நாளை ரிலீஸ்: உற்சாகத்தில் ரசிகர்கள்
அஜித் நடித்து பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ள வலிமை திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் தொடர்பான ஹாஷ்டாகுகள் தொடர்ந்து ட்ரெண்டிங்கிள் உள்ளன.
அஜித்தை நாயகனாக வைத்து போனிகபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கியிருக்கும் திரைப்படம் 'வலிமை'. இந்தப் படத்தில் ஹிமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, சுமித்ரா, யோகி பாபு, அச்யுத்குமார், பாவல் நவகீதன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவுசெய்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா பாடல்களை உருவாக்கியிருக்கிறார். பின்னணி இசை கோர்க்கும் பணிகளை ஜிப்ரான் செய்திருக்கிறார்.
முன்னதாக பொங்கல் தினத்தன்று இந்தப் படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பிப்ரவரி 24ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவிருக்கிறது. மதுரை போன்ற நகரங்களில் கிட்டத்தட்ட எல்லா திரையரங்குகளும் வலிமை படத்தை திரையிடுகின்றன.
இந்த வார ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கான முன் பதிவு துவங்கியது. முன்பதிவு துவங்கியபோது பல திரையரங்குகளில் பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்து டிக்கெட்களை வாங்கிச் சென்றனர்.
பல திரையரங்குகளில் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே முதல் சில காட்சிகளுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.
கொரோனாவின் மூன்றாவது அலை பரவிய பிறகு, திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் வெகுவாகக் குறைந்தது. கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பிறகும் திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.
ஆனால், வலிமை திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு, இதையெல்லாம் மாற்றிமைக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் கருதுகின்றனர்.
வலிமை படத்தை இயக்கியிருக்கும் எச். வினோத் இதற்கு முன்பாக சதுரங்க வேட்டை, தீரன்: அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். வலிமை திரைப்படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் இவரே இயக்கவிருக்கிறார்.
2019 ஆகஸ்டில் அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை படம் வெளியானது. இப்போது இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவரது அடுத்த படம் வெளியாகவுள்ளது.
இதனால் பெரும் உற்சாகமடைந்திருக்கும் அஜித் ரசிகர்கள், ட்விட்டரில் #ValimaiFDFS என்ற ஹாஷ்டாகுடன் தொடர்ந்து இடுகைகளையும் காணொளிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
- திருச்சியின் முதல் 'மாநகரத் தந்தை' ஆகப்போவது யார்? - மேயர் பதவியைக் கைப்பற்ற திமுக வியூகம்
- குரு கோல்வல்கர்: 'வெறுப்பின் தலைவனா' இந்து தேசியவாதத்தின் மாபெரும் ரசிகரா?
- கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ நியூயார்க் நகரம் மீது கொண்ட ரகசிய காதல்
- உடலுறவில் இன்பமும் பாதுகாப்பும் - உலக சுகாதார நிறுவனம் அறிக்கை
- பாகிஸ்தானை ஒதுக்கிவிட்டு செளதி அரேபியா இந்தியாவை நெருங்கி வருவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்