You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிக்பாஸ் அல்டிமேட்: சிலம்பரசனின் புதிய அவதாரம், வெளியேறும் வனிதா - என்ன நடக்கிறது?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் வெளியேறிய பிறகு அந்த இடத்தில் நடிகர் சிம்பு வருகிறார் எனவும் தனிப்பட்ட காரணங்களால் வனிதாவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார் எனவும் தெரிய வந்துள்ளது. என்ன நடக்கிறது பிக்பாஸ் அல்டிமேட்டில்?
தொலைக்காட்சி உலகில் பிரபலமாகியிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம் ஐந்து சீசன்களை முடித்திருக்கிறது. இதன் ஓடிடி வடிவமாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 24*7 என நேரலையாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.
24 மணி நேரமும் நேரலையாக பார்க்க விரும்பாதவர்களுக்கு என வெட்டப்பட்ட காட்சிகளுடன் கூடிய பகுதி தினமும் இரவு ஒன்பது மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் ஒளிபரப்பாகிறது.
தமிழில் பிக்பாஸ் ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியும் அதை தொகுத்து வழங்குவதும் தனக்கு பிடித்தமானது என்று குறிப்பிட்ட கமல்ஹாசன் பிக்பாஸ் ஓடிடி வடிவமாக வரும் போது அதன் அடுத்த கட்டத்தில் தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கப் போவதாக சொன்னார்.
திடீரென விலகிய கமல்
கிட்டத்தட்ட 60 நாட்கள் நடக்கும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. நான்கு வாரங்கள் நெருங்கும் நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
'விக்ரம்' படப்பிடிப்பு தேதிகள் ஒதுக்குவதில் பிரச்னை மற்றும் தன்னால் மற்ற கலைஞர்களின் வேலையும் பாதிக்கப்படுகிறது என்பதால் இந்த முடிவு எடுத்ததாகவும் பிக்பாஸ்ஸின் ஆறாவது சீசனில் நிச்சயம் சந்திப்போம் எனவும் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரத்தோடு நிகழ்ச்சியை விட்டு விலகினார்.
கமல் இடத்தில் இனி யார்?
இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகும் அடுத்த பிரபலம் யார் என்ற கேள்வி பிக்பாஸ் ரசிகர்களிடையே இருந்தது.
ஏற்கெனவே, கடந்த ஐந்தாவது சீசனில் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த ஒரு வாரம் மட்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அதனால், அவரே மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது எனவும், ரம்யா கிருஷ்ணன் இல்லை என்றாலும் நடிகை ஷ்ருதி ஹாசன், விஜய் சேதுபதி, சரத் குமார் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது என பலரது பரவலாக கூறப்பட்டன.
இந்த நிலையில்தான் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் சிலம்பரசன் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இது குறித்து விஜய் டிவி தரப்பில் இருந்தோ டிஸ்னி + ஹாட்ஸ்டார் தரப்பில் இருந்தோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகரான சிலம்பரசன், பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து ஐந்தாவது சீசன் வரை தொடர்ந்து கவனித்து வருபவர்.
ஒவ்வொரு சீசன் முடிந்ததும் தனக்கு பிடித்தமான போட்டியாளர்களை அழைத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சிம்பு.
இதனால், பிக்பாஸ் தொகுப்பாளராக சிலம்பரசன் வருவது தயாரிப்பு தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டால் சிலம்பரசன் நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா:
இன்னொரு பக்கம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறி இருப்பதாக புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவராக வனிதா இருந்த நிலையில் அவர் எல்லோரையும் தன்னுடைய இஷ்டத்திற்கு இருக்க வைக்கிறார், சிறிய பிரச்னைகளை கூட பெரிதாக்குகிறார், தலைவராக அவர் சரியாக நடந்து கொள்ளவில்லை என கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களுமே வனிதா தலைவராக குறைந்த மதிப்பெண்களையே கொடுத்தனர்.
இதனால், வனிதா 'தன்னிடம் யாரும் நட்பாக இல்லை' என்றும் நிகழ்ச்சியில் தான் கார்னர் செய்யப்படுவதாகவும் வீட்டிற்கு போக வேண்டும் எனவும் நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே புலம்பினார்.
வனிதாவின் புலம்பலை கேட்டு அவருக்கு ஆறுதல் சொல்வதற்காக பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தொலைபேசி மூலம் அவரது மகள் பேசினார்.
மேலும் இந்த வாரம் 'சாத்தான் vs தேவதை' என லக்சுரி பட்ஜெட்டிற்கான டாஸ்க் ஆரம்பித்து இருக்கிறது.
இதிலும் வழக்கம் போல வனிதாவிற்கும் நிரூப், தாமரை உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களுக்கும் விவாதம் ஆரம்பித்து இருக்கிறது.
என்ன காரணம்?
'கமல் சாருக்காகவே இவ்வளவு நாட்களாக நிகழ்ச்சியில் இருக்கேன்' என சொல்லி வந்த வனிதா கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் வரலாம் என ஊகிக்கப்பட்ட வேளையில், நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாயின.
இதற்கு முன்பு கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக ரம்யா கிருஷ்ணனும், போட்டியாளராக வனிதாவும் கலந்து கொண்ட போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு நிகழ்ச்சியை விட்டு வனிதா வெளியேறினார்.
ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் இந்த முன்னோட்ட காணொளியில் தன்னுடைய மன நலன் மற்றும் உடல்நலனை கருத்தில் கொண்டு இனிமேலும் நிகழ்ச்சியில் இருப்பது தனக்கு 'ரிஸ்க்' என்று வனிதா பேசியுள்ளார்.
இதனால் வனிதாவை பிக்பாஸ்ஸும் வெளியே அனுப்பி வைப்பதாக அந்த காணொளியில் இடம்பெறும் காட்சி முடிகிறது. இனி அடுத்தடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்