நடிகர் சிம்ஹா பேட்டி: 'மகான் படத்தில் என்னைப் பார்த்து விக்ரம் ஆச்சரியப்பட்டார்'

    • எழுதியவர், ச. ஆனந்தப் பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

'சூது கவ்வும்' பகலவன், 'நேரம்' வட்டி ராஜா, 'ஜிகிர்தண்டா' அசால்ட் சேது என தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் 'செம்மையா வாழ்ந்தான்டா' என ரசிகர்களை ரசிக்க வைத்த நடிகர் சிம்ஹா இப்போது கார்த்திக் சுப்பராஜ்ஜின் 'மகான்' படத்தில் சத்யவானாக வந்திருக்கிறார்.

பிபிசி தமிழுக்காக அவருடனான நேர்காணலில் இருந்து,

'மகான்' திரைப்படத்தில் மகான், சத்யவான். தாதா என ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. உங்களுடைய சத்யவான் கதாப்பாத்திரத்திற்கு நீங்கள் முதலில் தேர்வாக இல்லாத போது சத்யவானாக மாறிய கதையை சொல்லுங்கள்?

"'மகான்' படத்தில் முதலில் நான் நடிப்பதாகவே இல்லை. 'ராக்கி' கதாப்பாத்திரம் குறித்தும் என்னிடம் இயக்குநர் சொல்லி இருந்தார். ஆனால், சத்யவான் கதாப்பாத்திரம் நடிப்பது யார் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. நானும் சில நடிகர்களது பெயர்களை தேர்வாக சொன்னேன். அப்பொழுது திடீரென ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு கார்த்திக் சுப்பராஜ் தொலைபேசியில் அழைத்து அலுவலகத்திற்கு என்னை வர சொன்னார்.

அப்போது, 'மகான்' படப்பிடிப்பு நெருங்கி கொண்டிருந்த சமயம். 'சத்யவான் கதாப்பாத்திரம் நீயே நடிக்கிறாயா?' என கேட்டார். 'நான் நடிப்பது சரி. அதில் நீ உறுதியாக இருக்கிறாயா?' என கேட்டேன். அவரும் ஒத்து கொண்டார்.

பிறகு, சத்யவான் கதாப்பாத்திரத்தின் வயதிற்கு ஏற்றது போல தலை முடி நிறத்தை மாற்றுவது, வழுக்கை போன்ற விஷயங்களை கவனத்தில் வைத்தோம். ஏனெனில், படத்தில் என்னுடைய அறிமுகம் 40 வயதில் இருந்து தான் தொடங்கும். 40ல் இருந்து தொடங்கி 70 வயது வரை இருக்கும். ஆனால், முதலில் என்ன தான் மேக்கப் போட்டாலும், சிகையலங்காரம் செய்தாலும் என்னுடைய நிஜ வயதிற்கு செயற்கையாக இருக்கும் என கார்த்திக் சுப்பராஜ்ஜிடம் நான் சொல்ல அவர் உடனே எனக்கு மொட்டை அடித்து விட்டார். பிறகு படம் முடிந்து வெளிவரவே கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது.

அந்த சமயத்தில் எல்லாம் மற்ற படங்களுடைய கமிட்மெண்ட்ஸ் பார்த்து கொள் என கார்த்திக் சொல்லி இருந்தார். அப்படி இருந்தால்தான் சத்யவான் கதாப்பாத்திரத்திற்கும் சரியாக வரும் என தோன்றியது. அதனால், நானும் என்னுடைய அடுத்தடுத்த படங்களுடைய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் இதற்காக பேசி அந்த படங்களை தள்ளி வைத்தேன். படத்தில் நான் நடித்த 70 நாட்களும் மொட்டை தான்" என சிரிக்கிறார்.

'ஜிகிர்தண்டா' படத்தின் 'அசால்ட்' சேது கதாப்பாத்திரத்திற்காக நிஜ கேங்க்ஸ்டரை சந்தித்ததாக முன்பு ஒரு பேட்டியில் சொல்லி இருந்தீர்கள். இதுபோல, 'மகான்' சத்யவானுக்காக அதுபோல எதுவும் பயிற்சி எடுத்தீர்களா? ஏனெனில் இதில் ஒரு இளைஞனுக்கு அப்பா, சத்யவான் கதாப்பாத்திரத்தையும் ஏற்க வேண்டும்?

"இந்த படம் குறித்தான நிறைய சித்தாந்தங்கள் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்ஜிடம் இருந்தது. 'ஜிகர்தண்டா' சமயத்தில் ஏன் அது போல செய்தேன் என்றால் மதுரை மக்களுடைய பேச்சு வழக்கு, அங்கு பழக்க வழக்கங்கள், உண்மையாக அங்கு கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது போன்ற விஷயங்கள் இருந்தது. அதனால் அங்கு நிறைய நபர்களை சந்தித்து அவர்களுடைய உடல் மொழி போன்றவற்றை கற்று கொண்டேன்.

சினிமாக்களில் வழக்கமாக காட்டப்படுவது போல ரெளடி, கேங்ஸ்டர் என்றால் அடாவடியாக, உடலை திடாகாத்திரமாக வைத்திருப்பார்களா என்றால் நிஜத்தில் நான் சந்தித்தவரை அப்படி அவர்கள் இல்லை. மிகவும் எளிமையானவர்களாக இருந்தார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவர்களை அப்படி மாற்றுகிறது. ஆனால், அந்த கதைகள் எல்லாம் கேட்கும் போது மிகையாக இருக்கும்.

'மகான்' படத்தில் சத்யவானை பொருத்த வரை, அவனுடைய தோற்றம், செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதில் தான் அதிக கவனம் இருந்தது. சத்யவான் அதிக பதட்டமாக இருப்பவனாக வைத்து கொள்ளலாம் என்று கார்த்திக் சொன்னார். இப்படி 40ல் இருந்து 70 வயது வரை வயதுக்கேற்ப ஒவ்வொரு விஷயங்களாக பார்த்து பார்த்து செய்தோம்".

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உங்களுடைய நண்பர். இவருடைய 'மெர்க்குரி', 'ஜகமே தந்திரம்' படங்களை தவிர்த்து கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் நடித்து இருக்கிறீர்கள். 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சி காலத்தில் இருந்தே தொடரும் இந்த நட்பு என்பதையும் தாண்டி படங்களில் அவருடன் என்ன மாதிரியான கலந்துரையாடல் இருக்கும்?

"இயக்குநர் என்பதை தாண்டி கார்த்திக் சுப்பராஜ் என்னுடைய நெருங்கிய நண்பர். எதுவாக இருந்தாலும் அவரிடம் நான் பகிர்ந்து கொள்வேன். ஆனால், வேலை என்று வந்துவிட்டால் அதை எல்லாம் அவர் பார்க்க மாட்டார். நட்பு வேறு வேலை வேறு என்பதில் தெளிவாக இருப்பார். வேலைக்கு ஏற்ற திறமை இருக்கிறதா; அதை சரியாக செய்கிறோமோ என்ற எண்ணம் மட்டும் தான் அவருக்கு இருக்கும். வேலை என்றால் வேலைதான் என்ற அதே எண்ணம்தான் எனக்கும் இருக்கும்.

மற்றபடி கதையில் அவர் என்ன சொல்கிறாரோ அதை பிரதிபலிப்பேன்".

'மகான்' படத்தில் உங்களுக்கும் நடிகர் விக்ரமுக்கும் இடையிலான நட்பை திரையில் பார்த்தோம். திரைக்குப் பின்னால் உங்கள் இருவருடைய நட்பு எப்படி இருந்தது?

"'சாமி 2' படத்தில் இருந்தே விக்ரம் எனக்கு பழக்கம் என்பதால் அந்த நட்பு இங்கும் உதவியது படப்பிடிப்பு தளத்தில் அவரை போல நடனம் ஆடி ஜாலியாக நடித்து காட்டுவேன். 'சாமி', 'பிதாமகன்' ஆகிய படங்களில் அவரது நடனத்தை எல்லாம் ஆடி காட்டுவேன். படப்பிடிப்பு முடிந்ததும் திரைக்கு பின்னால் ரகளையாக தான் இருக்கும். முதலில் அவருக்கு நான் தான் சத்யவான் கதாப்பாத்திரம் நடிக்க போகிறேன் என தெரியாது. சத்யவானுக்கான டெஸ்ட் மேக்கப் எல்லாம் போட்ட பிறகுதான் அவர் என்னை பார்த்து 'நீதான் இந்த கதாப்பாத்திரம் நடிக்க போறியா?' என கேட்டு விக்ரம் ஆச்சரியமானார்".

நீங்கள் நடித்துள்ள பகலவன், வட்டி ராஜா, அசால்ட் சேது, சத்யவான் இந்த மாதிரியான கதாப்பாத்திரங்களில் நடிப்பு என்பதை தாண்டி எந்த ஒரு விஷயம் உங்களை இந்த கதாப்பாத்திரங்கள் தேர்ந்தெடுக்க உந்தியது?

"அந்த கதாப்பாத்திரங்களின் மனநிலை தான். பகலவன், வட்டி ராஜா, சத்யவான் என ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் தன்மை, மனநிலை வேறு வேறு. அதை இயக்குநர்கள் எப்படி வடிவமைக்கிறார்கள் என்பதை பொறுத்துதான். இயக்குநர்கள் தந்துள்ள அந்த கதாப்பாத்திரத்திற்கு நாம் சரியாக பொருந்தி போகிறோமோ, அதை நாம் எப்படி சிறப்பாக வெளிப்படுத்துகிறோம் என்பதை தான் பார்க்க வேண்டும்".

பொதுவாக கதை கேட்கும் போது உங்களுடைய கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்களா இல்லை கதை உங்களை திருப்தி படுத்தினால் போதுமா?

"இதற்கு முன்பு கதை நன்றாக இருக்கிறது அதில் நடித்தால் போதும் என்ற மனநிலை இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. நிறைய படங்கள் நடிப்பதில்லை எனும் போது ஒரு படம் செய்தாலும் அதில் நம்முடைய கதாப்பாத்திரம் சிறப்பானதாக இருக்க வேண்டும், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். முன்பு செய்த தவற்றை மீண்டும் செய்ய கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்".

எதிர்மறை கதாப்பாத்திரங்கள் ஏற்று நிறைய படங்களில் நடித்துள்ளீர்கள். இதன் மீது என்றாவது சலிப்பு வந்திருக்கிறதா?

"நிச்சயமாக இல்லை. ஏனெனில் எதிர்மறை கதாப்பாத்திரங்களுக்கான களம் பெரிது. அசால்ட் சேது கதாப்பாத்திரம் கூட எதிர்மறை என்று சொல்ல மாட்டேன். சூழ்நிலையும், கலையும் அவனை எப்படி கடைசியாக மாற்றுகிறது என்பது தான். இப்படி ஒவ்வொரு கதாப்பாத்திரமும் இருக்கும். இதில் சலிப்புத்தன்மை வருமா என்று கேட்டால் நிச்சயம் இருக்காது. ஏனெனில் சத்யவான் போல இன்னொரு கதாப்பாத்திரம் மீண்டும் எனக்கு கிடைக்குமா என்றால் தெரியாது. இதுபோல, சவாலானதாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்".

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் தீவிர விசிறி நீங்கள். ரஜினியுடன் 'பேட்ட', இப்போ கமல்ஹாசனுடன் 'இந்தியன்2' படங்கள் நடித்துள்ளீர்கள். இவர்களிடம் நீங்கள் கற்று கொண்ட விஷயங்கள் என்னென்ன?

"ஒன்று, இரண்டு என்றில்லை நிறைய விஷயங்கள் கற்று கொண்டேன். ரஜினி கமல் இரண்டு பேருமே நடிப்பில் பல்கலைக் கழகங்கள். 'பேட்ட' ஆரம்பிக்கும் போது கார்த்திக் சுப்பராஜ்ஜிடம் ஒன்றே ஒன்றுதான் சொன்னேன். ரஜினி சாருடன் ஒரே ஒரு ஃப்ரேமிலாவது வந்து விட வேண்டும் என கேட்டேன். பிறகுதான் அவர் இடைவேளை வரை ரஜினிகாந்த்துடன் நடிக்கும்படி என்னுடைய கதாப்பாத்திரத்தை கொண்டு வந்தார்.

அதே போல, இயக்குநர் ஷங்கர் தரப்பில் இருந்து 'இந்தியன் 2' படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது எல்லாம் கனவு போல இருந்தது. அது போன்ற தமிழ் சினிமாவின் முக்கிய படத்தில் நடிப்பது மகிழ்ச்சி".

பல நடிகர்களுடன் இணைந்து நடித்து உள்ளீர்கள். எந்த ஒரு நடிகருடன் இணைந்து நடித்தே ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது?

"அப்படி குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை. திறமை மிக்க நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை இருக்கிறது".

அடுத்தடுத்த படங்கள் என்ன?

"'வசந்த முல்லை' இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் வெளியாகி விடும். 'வல்லவனுக்கு வல்லவன்' திரைப்படமும் தயாராக இருக்கிறது. இது தவிர தமிழில் மேலும் இரண்டு படங்களுக்கு பேச்சு வார்த்தை நடக்கிறது. தெலுங்கில் சிரஞ்சீவி அவர்களுடன் ஒரு படம் நடித்து வருகிறேன்".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: