You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கடைசி விவசாயி': "விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொள்ள காரணம் இதுதான்"- இயக்குநர் மணிகண்டன்
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
'காக்கா முட்டை' மூலமாக எளியவர்களின் கதையை அழகியலாக அறிமுகப்படுத்தி முதல் படத்திலேயே 'தேசிய விருது' பெற்றவர் இயக்குநர் மணிகண்டன். 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' என அடுத்தடுத்து படங்களை கொடுத்தவர் இப்போது நீண்ட காத்திருப்புக்கு பிறகு 'கடைசி விவசாயி' படத்தோடு களம் இறங்குகிறார்.
பிபிசி தமிழுக்காக அவருடனான நேர்காணலில் இருந்து,
தமிழ் சினிமாவில் 2015ல் 'காக்கா முட்டை' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானீர்கள். அடுத்தடுத்து படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் போது 'கடைசி விவசாயி' படம் இரண்டு வருடங்களுக்கு பின்பு வெளியாகிறது. இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது? கற்று கொண்ட விஷயங்கள் என்னென்ன?
"ஒவ்வொரு படங்களுமே எனக்கு ஒவ்வொரு விதமான படிப்பினைதான். ஒவ்வொரு புது விஷயங்களை கற்று கொண்டு இருக்கிறேன். அதுக்கேற்ப வெளியே சினிமா துறையும் டிஜிட்டல், ஓடிடி என வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் இரண்டு வருடங்கள் வேலை பார்த்திருக்கிறேன். அதனால் 'கடைசி விவசாயி' படம் எனக்கு மிக பெரிய அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதுவும் இல்லாமல் கதை ஆரம்பிக்கும் போதே இவ்வளவு நாட்கள் ஆகும் என தெரிந்தே இருந்தது.
அதனால்தான் இந்த கதையை ஆரம்பிக்கும் போதே இரண்டு மூன்று படங்கள் தள்ளிப்போய் ஆரம்பித்தோம். இதில் கொரோனா முடக்க காலமும் சேர்ந்து விட்டது. இதுவும் பட தாமதத்திற்கு காரணம்".
தமிழ் சினிமாவில் நிறைய விவசாயம் சார்ந்த கதைகள் அது பேசக்கூடிய பிரச்னை தொடர்பான படங்கள் வந்துள்ளன. அதுபோல இல்லாமல் 'கடைசி விவசாயி' கதையை எங்கிருந்து பிடித்தீர்கள்?
"விவசாயம் சார்ந்து வெளி வந்த மற்ற படங்களை நான் பார்க்கவில்லை. அந்த படங்களுக்கும் 'கடைசி விவசாயி' படத்திற்குமான வித்தியாசம் என்னவாக இருக்கிறது என படம் பார்ப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்.
ஒரு வயதான தாத்தாவை செய்யாத குற்றத்திற்காக கைது செய்து பின்பு அவரை விடுதலை செய்து விடுவார்கள் என்று ஒரு செய்தி பார்த்தேன். அந்த சம்பவத்தை கேள்விப்படும்போது இந்த கதைக்கான ஐடியா வந்தது. மேலும் மயில் எனும் தேசிய பறவைக்கான அக்கறை இவற்றை எல்லாம் சேர்த்து இந்த கதையை படமாக்கினோம்.
இதில் வழக்கமான விவசாய பிரச்னைகள் எல்லாம் காட்டவில்லை. விவசாயிகளுடைய வாழ்வியலை காட்டி இருக்கிறோம். படம் பார்க்கும் போது விவசாயம் சார்ந்த பிரச்னைகள் இருப்பது போல தெரியும். ஆனால் நீங்கள் வழக்கமாக சினிமாவில் எதிர்பார்ப்பது போல அதை காட்ட வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இல்லை.
அதே போல, இந்த விவசாயிகள் வாழ்க்கையை உலகத்திற்கு அறிமுகப்படுத்த தேவையும் இல்லை. ஏனெனில், இந்த சமூக அமைப்பு உருவாவதற்கு முன்பிருந்தே அவர்கள் இயங்கி கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் இயக்கத்தில் தான் இந்த சமூக அமைப்பே உருவாகி இருக்கிறது என்பேன்.
இந்த கொரோனா காலத்தில் கூட உலகம் வழக்கமான பல விஷயங்களில் தடை பட்ட போது கூட விவசாயிகள் இயங்கி கொண்டேதான் இருந்தார்கள். இயங்கிதான் ஆக வேண்டும். எல்லாம் முடங்கி இருந்தது. ஆனால் நாம் சாப்பிட்டு கொண்டுதானே இருந்தோம். அதனால் விவசாயிகளுக்கு எந்த தடையும் கிடையாது. அதனால்தான் அவர்களை இந்த உலகத்திற்கு புதிதாக அறிமுக படுத்த தேவையில்லை என்கிறேன். அவர்கள் இயக்கத்தில் தான் நாம் சாப்பிடுகிறோம். படம் செய்கிறோம். சத்தமில்லாமல் ஒரு கூட்டம் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. அவர்களையும் நாம் கவனிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். அவர்கள் இயக்கம் நின்றால்தான் உலகம் ஸ்தம்பிக்கிறது".
கதையில் 'நல்லாண்டி' கதாப்பாத்திரம் தாண்டி விஜய்சேதுபதியின் 'ராமையா' கதாப்பாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு ரசிகர்களிடையே பார்க்க முடிந்தது. உண்மையில் அந்த கதாப்பாதிரத்தின் கரு தோன்றியது எப்படி?
"இந்த கதையில் விஜய் சேதுபதி 'ராமையா' கதாபாத்திரம் பிடித்து போய்தான் நடிக்க வந்தார். இந்த கதாபாத்திரம் போலவே அவருக்கும் தத்துவங்கள், முருக வழிபாடு இவற்றில் எல்லாம் ஆர்வம் உண்டு. அதனாலேயே அவர் ஆர்வமாக நடிக்க வந்தார்.
எழுத்தாளர் குருநாதன் 'ராமையா' எனும் ஒருவரை பற்றி சொன்னார். அவர் சொன்ன அந்த கதாபாத்திரம் முருக பக்தர் கிடையாது. ஆனால் ஊருக்குள் இப்படியான இயல்புடைய ஒருவரை பற்றி சொன்னார். அவர் எங்காவது பக்கத்து ஊருக்கு நடந்து போய் முதலமைச்சரை பார்த்தேன் என்பது போன்று பல கதைகள் சொல்வார். இதை கேட்கும் போது எனக்கு ஆர்வமாக இருந்தது.
இப்படி ராமையா உண்மையிலேயே முதலமைச்சரை பார்த்தால் எப்படி இருக்கும் என நினைத்து உருவாக்கியதுதான் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம்".
ஒளிப்பதிவாளராக சினிமாவுக்குள் வந்து பின்பு இயக்குநர் ஆனீர்கள். நீங்களே இயக்கி ஒளிப்பதிவு செய்வதில் உள்ள பலம் என்னவென்று நினைக்கிறீர்கள்?
"'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை' என என்னுடைய இரண்டு படங்களிலும் நான் தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். இப்போது 'கடைசி விவசாயி' படத்திலும். கதையை எழுதியவரே ஒளிப்பதிவு செய்யும் போது அந்த கதைக்கு இன்னும் கூடுதல் பலம் என்றே நினைக்கிறேன்.
மேலும் பெரிய நடிகர்கள் நடிக்கும் கதை, கதைக்கான தேதிகள் குறைவாக உள்ள படங்கள் உதாரணமாக 'ஆண்டவன் கட்டளை' மாதிரியான படங்கள் வரும் போது வேறு ஒரு ஒளிப்பதிவாளர் செய்யும் போது தான் எனக்கு எளிதாக இருக்கும். மனதுக்கு நெருக்கமான கதைகள் என்றால் நானே செய்வேன் என்பது மாதிரி இல்லை. நடைமுறை வேலையை பொருத்து அது மாறுபடும். இந்த படத்தில் பெரிய நடிகர்களாக நடிக்க வைத்திருந்தால் அவர்களுடைய நாட்கள் குறைவாக இருக்கும். அந்த சூழ்நிலையில் நான் ஒளிப்பதிவும் செய்து கொண்டு, இயக்கத்திலும் ஈடுபடுவது கடினமாக இருந்திருக்கும். நீங்கள் ஒளிப்பதிவுக்கு ஒரு 15 நிமிடங்களுக்கு மேல் எடுத்தாலே ஒரு லட்சம் ஆகிவிடும். அதனால் அப்போது வேறு ஒளிப்பதிவாளர்கள் வைத்து கொள்வது எளிது.
ஆனால், இந்த கதையில் அது தேவைப்படவில்லை. கால்ஷீட் பிரச்னைகள் இருக்கக்கூடிய நடிகர்கள் இல்லை. அதனால் எனக்கு எழுத்து, ஒளிப்பதிவு என 'காக்கா முட்டை'யிலும் 'கடைசி விவசாயி'லும் செய்ய முடிந்தது".
'காக்காமுட்டை', இப்போது 'கடைசி விவசாயி' என புதுமுகங்களை நடிக்க வைப்பதில் ஏதும் சிரமங்கள் இருந்ததா?
"சிரமங்கள் என்றால் கேமராவுக்கு அவர்களை பழக்குவதில் சிரமம் இருந்தது. முப்பது நாற்பது நபர்கள் கூடி இருக்கும் போது அவர்களுக்கு அதெல்லாம் புதிதாக இருந்தது. ஆனால், ஒரு முறை அவர்களுக்கு பழக்கப்படுத்திய பின்பு அவர்கள் எளிதாக நடித்தார்கள்.
ஒரு கதாபாத்திரத்திற்கு தெரிந்த நடிகர்களை போடும் போது அவர்களுடைய பிம்பமும் கதாப்பாத்திரத்தோடு சேர்ந்து போகும். ஆனால், புதுமுக நடிகர்கள் எனும் போது அந்த கதாப்பாத்திரமும் சேர்ந்தே போகும். அதனால், புதுமுகங்களை நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுவேன்".
கதையின் நாயகனான 'நல்லாண்டி' தாத்தாவை எப்படி கண்டறிந்தீர்கள்?
"அவருக்கு 86 வயது. அதிகம் படங்கள் எல்லாம் பார்க்காதவர். சினிமா டிவி என பழகாதவர். முதலில் அவரை உட்கார வைத்து புகைப்படம் எடுப்பதே சிரமமாகவே இருந்தது. முன்பெல்லாம் புகைப்படம் எடுத்தால் நேராக நிமிர்ந்து கைகளை தொடை மீது வைத்து அசையாமல் அமர்வார்கள் தெரியுமா? அது மட்டும்தான் அவருக்கு தெரியும்.
அதனால் உடனே அவரிடம் கதையையும் கதாபாத்திரத்தையும் திணிக்காமல் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள அந்த ஊருக்கு வருவதும் போவதுமாய் இருந்து அவருடன் பேசி பழகி வேறு விஷயங்கள் எல்லாம் கூட கலந்துரையாடி இருப்போம். அவரை வைத்துதான் படம் எடுக்க போகிறேன் என்றே அவருக்கு தெரியாது. நான் வேறு எதோ ஒரு டாக்குமெண்ட்ரி எடுக்கிறேன் என்று நினைத்து அவர் எனக்கு உதவிகளை செய்து கொண்டிருந்தார்.
பிறகுதான் அவரிடம் படம் செய்ய போகிறேன் என்று சொன்னேன். அப்போது கூட அங்கு ஊர் மக்கள் எல்லாம் விஜய்சேதுபதிதான் கதாநாயகன் என்று நினைத்தார்கள். கதையில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களில் பலருக்கும் அவர்கள் கதாப்பாத்திர முக்கியத்துவம் அப்போது படமாக்கும் போது தெரியாது. தாத்தாவுக்குமே காட்சி, வசனம் மட்டும்தான் தெரியும். கதை தெரியாது.
இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்துதான் அடுத்த கதைகளையும் முடிவு செய்ய வேண்டும்".
பிற செய்திகள்:
- சசிகலா, இளவரசி மீதான லஞ்ச வழக்கு: கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா வெளியிட்ட முக்கிய தகவல்
- நரேந்திர மோதி: "எது கூட்டாட்சி தெரியுமா?" - பொங்கிய பிரதமர் - ராகுல் என்ன சொன்னார்?
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கொங்கு மண்டலத்தில் கள நிலவரம் என்ன?
- ஹிஜாப் சர்ச்சை: வன்முறையால் கல்லூரிகள் முடக்கம் - முஸ்லிம் பெண்களுக்கு மலாலா ஆதரவு
- உலகில் முதல் முறை: தண்டுவடம் துண்டான பின்னும் எழுந்து நடக்கும் மனிதர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்