You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'டிஜே தில்லு' நேஹா ஷெட்டி சர்ச்சை: "நடிகைன்னா பாலியல் பண்டமா?" கொதிக்கும் பெண்ணியவாதிகள்
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் நடிகை நேஹா ஷெட்டியை சம்பந்தப்படுத்தி நடிகர் சித்துவிடம் எழுப்பியுள்ள கேள்வி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் விமலா கிருஷ்ணன் இயக்கத்தில் சித்து, நேஹா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'டிஜே தில்லு'. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் சித்து பதிலளித்து வந்த போது எதிர்பாராத விதமாக செய்தியாளர் ஒருவர் ட்ரெய்லர் காட்சியோடு நடிகை நேஹாவை தொடர்புபடுத்தி எழுப்பிய கேள்விதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
என்ன சர்ச்சை?
'டிஜே தில்லு' படத்தின் முன்னோட்ட காணொளியில் உள்ள ஒரு வசனத்தை தொடர்புபடுத்தி, அதேபோன்று நிஜத்திலும் நடந்திருக்கிறதா என்பது போன்ற அநாகரிகமான கேள்வி ஒன்றை எழுப்ப சித்து அந்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என தவிர்த்திருக்கிறார்.
ஒரு செய்தியாளர் இப்படிதான் பொதுவில் அநாகரிகமான கேள்விகளை எழுப்புவதா என கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பலரும் இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.
செய்தியாளரின் கேள்விக்கு ஒரு காணொளியை பகிர்ந்து நடிகை நேஹா ஷெட்டி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில், 'முன்னோட்ட காணொளிக்கான நிகழ்வில் இப்படி ஒரு கேள்வியை எதிர்கொண்டது துரதிருஷ்டவசமானது. இவர் மீதான மரியாதை எப்படி இருக்கும் என்பதை தான் இது போன்ற கேள்வி காட்டுகிறது. மேலும் இவரை சுற்றி அலுவலகத்திலும் வீட்டிலும் இருக்கும் பெண்களையும் எப்படி மரியாதையாக பார்க்கிறார் என்பதையும் இந்த கேள்வி எளிமையாக புரிய வைக்கிறது' எனவும் அந்த ட்வீட்டில் தெரிவித்து இருக்கிறார் நேஹா.
"படத்தில் இருப்பது போன்று நிஜத்திலும் நாங்கள் இருக்க முடியாது"
அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், திவ்ய பாரதி உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் 'பேச்சுலர்' படம் வெளியானது.
இந்த படத்தின் கதை மற்றும் இதில் இடம் பெற்றுள்ள சில வசனங்கள் காரணமாக நிஜத்திலும் அவரை தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் நிறைய கேலிகளுக்கு உள்ளானார் நடிகை திவ்ய பாரதி.
இப்படி நடிகைகளை படங்களின் கதாபாத்திரமாக மட்டுமாக பார்க்கமால் அதை வைத்து கேலி செய்வதும் இதை எதிர்கொண்ட விதம் குறித்தும் அவரிடம் பேசினோம்.
"இது போன்று கேலி செய்து தவறான கருத்துகளை பரப்புவர்களிடம் நான் சொல்ல விரும்புவது ஒன்று தான். தயவு செய்து எங்கள் வேலை தொடர்பான வாழ்வையும் எங்கள் தனிப்பட்ட வாழ்வையும் சேர்த்து வைத்து பார்க்காதீர்கள். இரண்டுமே வேறு வேறு துருவங்கள். நீங்கள் வேலைக்கு அணியும் டை மற்றும் ஷூவை உடுத்தி கொண்டே வீட்டிலும் அதே மாதிரியான நபராக இருக்க முடியாது இல்லையா? அதே போலதான் எங்களுடைய நடிப்பு துறையும். இதுவும் மற்ற துறையை போல ஒரு துறைதான்" என்றவரிடம் 'பேச்சுலர்' படம் வெளியான சமயத்தில் எதிர்கொண்ட கேலிகளை சமாளித்த விதம் குறித்து கேட்டேன்.
கேலிகளை எதிர்கொண்டது எப்படி?
"படத்தில் அதுபோன்ற காட்சிகளும் வசனங்களும் இருக்கும் போதே படம் வெளியாகும் சமயத்தில் இது போன்ற அநாகரிகமான பதிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அறிந்தே இருந்தேன். ஆனாலும், இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அந்த காட்சிகளுக்கும் அதுபோன்ற வசனங்களை நான் ஏன் அந்த சமயத்தில் பேசினேன் என கதையைப் புரிந்து கொண்டு பாராட்டியவர்களும் இருந்தார்கள் என்பதுதான்.
நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும் நல்லது கெட்டது என இரண்டு பக்கங்கள் இருந்தே தீரும். அதில் நாம் எதிர்மறை கருத்துகளுக்கு பதில் சொல்லி கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால் நாம் ஒவ்வொருவரையும் நம் செயல் மூலம் திருப்திப்படுத்தி கொண்டே இருக்க முடியாது. இதில் கவனம் செலுத்துவதை விடுத்து என் வேலையை எப்படி சிறப்பாக செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறேன்," என்கிறார் திவ்ய பாரதி.
"சமூக மனநிலையே காரணம்"
பொதுவில் இப்படி ஒரு நடிகை குறித்து அவரை தொடர்பு படுத்தி கேள்வி எழுப்பியதன் மனநிலை என்ன என்பது குறித்து எழுத்தாளர் கொற்றவையிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"இந்த மாதிரியான கேள்விகள் கேட்பதற்கு முதல் காரணம் சமூக அளவிலேயே நடிக்க வரக்கூடிய பெண் என்றாலே அவள் தனிப்பட்ட குணாதிசியம் குறித்து தவறாக எண்ணக்கூடிய ஒரு மனநிலையிலேயே பெரும்பாலானோர் இருக்கிறார்கள். முக்கியமாக அவள் ஒரு பாலியல் பண்டம் என்ற அளவிலேயே நினைக்கிறார்கள். அவளை என்ன வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், அவள் உடல் குறித்து பொதுவில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற அதிகாரத்தை சமூகம் கொடுத்திருக்கிறது. இது ஆணாதிக்க சமூகத்தின் தொடர்ச்சி என்பேன்.
அதனால் தான் முன்பெல்லாம் நடிக்க வரவேண்டும் என்றால் நிறைய யோசித்தார்கள். ஆண்கள்தான் பெண்கள் வேடம் போட்டார்கள். பின்பு எல்லாம் மாறியது. இப்படி நடிகை சற்றே கிளாமராக நடித்தால் அவர்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். இது நடிகைகளுக்கு மட்டுமே நடப்பதில்லை. பொது வெளியில் இயங்கக் கூடிய பெரும்பாலான பெண்களுக்கு இது நடக்கிறது. அவர்கள் செயல்பாடுகளை எதிர்க்க வேண்டும் என்றால் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ அல்லது உடல் குறித்தோதான் பேசுவார்கள். இது மிக மோசமான பழக்கம் என்பேன்".
"அந்த பத்திரிகையாளரை தடை செய்ய வேண்டும்"
பத்திரிகையாளர்கள்/ ஊடகம் என்று வந்தால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற அதிகாரத்தை எடுத்து கொள்கிறார்கள் என்பவர் முறைப்படுத்த வேண்டும் என்கிறார்.
"இதுவே அரசியல் ரீதியாக ஏதேனும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் அரசியல் கட்சிகளில் இருந்து அரசாங்கம் வரை உள்ளே வருவார்கள். ஆனால் இதுபோன்று பெண்களை தவறாக பேசினால் எந்தவிதமான நடவடிக்கையும் இருப்பது இல்லை.
இப்படி ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி இருக்கிறார் என்றால் உடனே என்ன செய்திருக்க வேண்டும். அவரை ஊடகத்துறையில் இருந்தே தடை செய்து கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இங்கு அவர்கள் மீது நடவடிக்கையே எடுக்க முடியாத அளவிற்கு பாதுகாக்கதான் செய்வார்கள். இதுமட்டுமல்லாமல், நீங்கள் பொதுவெளிக்கு வந்துவிட்டால் இதுபோன்றவற்றை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்று வேறு சொல்வார்கள். பொதுமக்கள் புரியாமல் பேசுகிறார்கள் என்பதற்கும் பொறுப்பான பத்திரிகை துறையில் இருப்பவர் பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதில்லையா? செய்தியாளர்கள் பிரச்னை என்றால் குரல் கொடுப்பவர்கள். இப்படி செய்தியாளர்கலே தவறாக பேசும் போது எதுவும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?
இதுபோன்ற கேள்வி எழுப்பிய அந்த ஆண் நிச்சயம் ஆணாதிக்கவாதியாகதான் இருக்க வேண்டும், அவரை சுற்றி இருக்கக்கூடிய பெண்கள் நினைத்தும் எனக்கு வருத்தமாக இருக்கிறது. மச்சம் பார்க்கும் விஷயம் ஏன் இவ்வளவு ஆபாசமாக பார்க்கப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை. அது நம் உடலில் நடக்கும் இயற்கை விஷயம்தான். இதை இவ்வளவு ஆபாசமாக தொடர்பு படுத்த வேண்டிய அவசியமே இல்லை. எனவே, இப்படி அநாகரிகமாக கேள்வி எழுப்பும் பத்திரிக்கையாளர்களை தடை செய்வதே சரி" என்கிறார் கொற்றவை.
பிற செய்திகள்:
- உத்தர பிரதேசத்தின் முசாஃபர் நகரில் நீடிக்கும் கலவர தாக்கம் - கள நிலவரம்
- பட்ஜெட் 2022: நாடு எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கிறதா?
- "அதிகரிக்கும் சிலிண்டர் விலை; விறகடுப்பில் சமைக்கும் எங்களுக்கு தீர்வு வேண்டும்" - தேர்தல் குறித்து உ.பி கிராமப் பெண்கள்
- பூமியில் நினைத்ததை விட அதிக அளவில் மர இனங்கள் - எந்த நாடு முதலிடம்?
- யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு; இலங்கை அரசின் புதிய திட்டம் என்ன?
- எளிய மக்களுக்கு பயனளிக்காத பட்ஜெட்டா இது? - ஓர் அலசல்
- நீட் தேர்வில் வெற்றி: 37 வயதில் நிறைவேறிய சிறுவயது கனவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: