You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லதா மங்கேஷ்கர் உடல் மீது ஷாரூக் கான் துப்பினாரா? சமூக ஊடகங்களில் வைரலாகும் புகைப்படம் - என்ன நடந்தது?
இந்திய திரையுலகில் புகழ்பெற்ற முதுபெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதிச்சடங்கின்போது, தமது மத வழக்கப்படி பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் பிரார்த்தனை (துஆ) செய்த செயலை, சிலர் சர்ச்சையாக பதிவிட்டு வருவதால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷாரூக் கானின் இந்த செயல், இந்தியாவின் மதசார்பின்மையை நிரூபிப்பதாக ஒரு சிலர் வரவேற்ற அதே சமயம், வேறு சிலர் ஷாரூக்கின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
லலதா மங்கேஷ்கர் பிப்ரவரி 6ஆம் தேதி காலமானார். அவருடைய மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.
மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த இறுதிச்சடங்கில், பிரதமர் மோதி, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியார், முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திரை பிரபலங்கள் ஷாரூக் கான், ஜாவேத் அக்தார், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ஷாரூக்கான் தனது மேலாளர் பூஜா தட்லானியுடன் லதா மங்கேஷ்கரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். அப்போது, ஷாரூக்கான் தன் மத வழக்கமான 'துஆ' எனப்படும் பிரார்த்தனையில் ஈடுபட்டார். பின்னர், லதா மங்கேஷ்கர் சிதையின் கால்களை தொட்டு வணங்கினார். அவரது செயல் சமூக ஊடகங்களில் வைரலாகும் அளவுக்கு அங்கு என்ன நடந்தது?
லதா மங்கேஷ்கரின் இறுதிச்சடங்குக்கு முன்னதாக, ஷாரூக்கான் அஞ்சலி செலுத்தியபோது தமது இஸ்லாமிய மத வழக்கத்தின்படி 'துஆ' செய்தார். அவருக்கு அருகே இருந்த அவரது மேலாளர் பூஜா தட்லானி தமது இரு கைகளை கூப்பி வேண்டிக் கொண்டார்.
இந்த புகைப்படம் சிறிது நேரத்திலேயே ட்விட்டரில் டிரெண்டானது. அப்போது, இந்து மதத்தை சேர்ந்த ஒருவரும் (பூஜா தட்லானி), முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவரும் (ஷாரூக்கான்) தங்கள் மத வழக்கங்களின்படி, இந்தியாவின் முக்கியமான பாடகிக்கு அஞ்சலி செலுத்தியது, இந்தியாவின் மதசார்பின்மையை நிரூபிப்பதாக, நெட்டிசன்கள் பலரும் பாராட்டினர். மத நல்லிணக்கத்தின் உதாரணமாக, இந்த புகைப்படம் இருப்பதாக பலரும் பாராட்டினர்.
ஆனால், ஷாரூக் கானின் செயலுக்கு சிறிது நேரத்திலேயே எதிர்ப்பும் கிளம்பியது.
ஷாரூக் கான் 'துஆ' செய்தபோது, தன் முக கவசத்தை கழற்றி, காற்றில் ஊதியதை குறிப்பிட்டு, லதா மங்கேஷ்கரின் சிதை அருகே, எச்சில் உமிழ்ந்ததாகக் கூறி பலரும் ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்து மதப்படி நடைபெற்ற இறுதிச்சடங்கில், இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனை செய்ததையும் சிலர் விமர்சித்து இடுகைகளை பதிவிட்டனர்.
ஷாரூக் கானுக்கு எதிரான பிரசாரத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, ஹரியாணா பாஜகவின் மாநில பொறுப்பாளர் அருண் யாதவ் தன் ட்விட்டர் பக்கத்தில், ஷாரூக் கான் அஞ்சலி செலுத்தியுள்ள வீடியோவை பகிர்ந்து, அவர் "எச்சில் உமிழ்ந்தாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஷாரூக்கானுக்கு எதிராக அருண் யாதவ் வெறுப்பு பிரசாரம் செய்வதாக குறிப்பிட்டு சிலர் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.
சிவசேனை காட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, "சிலர் பிரார்த்தனைக்கும் இரக்கத்திற்கும் தகுதியற்றவர்கள், மனதின் விஷத்தை நீக்க அவர்களுக்கு மருந்து மட்டுமே தேவை" என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'தி வயர்' இணையதளத்தின் ஆசிரியரான சித்தார்த் வரதராஜன், "இந்த கொடூரமான ட்வீட் பாஜக நிர்வாகியிடமிருந்து வந்திருக்கிறது. எந்த கும்பல் சமூகத்தில் அசுத்தத்தையும் விஷத்தையும் பரப்புகிறது என்பதில் சந்தேகம் வேண்டாம். அருண் யாதவ் 'துவா' பற்றி அறியாதவராக இருந்தால், ஷாரூக் கான் எச்சில் உமிழ்ந்தார் என கூறுவதற்கு முன்பு யாரிடமாவது கேட்டிருக்கலாம்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஷாரூக் கான் காற்றில் ஊதினாரே தவிர, எச்சில் உமிழவில்லை என ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் ஷாரூக்கானுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதியின் தொகுதியில் மீண்டும் பாஜக வெற்றி பெறுமா? - கள நிலவரம்
- கிரிப்டோகரன்சியை திருடி ஏவுகணை திட்டத்திற்கு நிதி சேகரித்த வட கொரியா
- மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா?
- குடும்பக் கட்டுப்பாட்டுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை: செலவுகளை ஏற்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
- IND vs WI: 1000ஆவது போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய அணி: முக்கிய தகவல்கள்
- பாடகர் லதா மங்கேஷ்கர் மரணம்; இந்தியாவில் 2 நாள் தேசிய துக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்