You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூர்யாவின் அறிவிப்பு: 'ஜெய்பீம்' ராஜாக்கண்ணு மனைவி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்வதாக உறுதி
காவல்துறை சித்ரவதையில் உயிரிழந்த ராஜாக்கண்ணு என்ற பழங்குடி நபரின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு வெளிவந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சூர்யா, அந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறியிருக்கிறார்.
நடிகர்கள் சூர்யா, மணிகண்டன், நடிகை லிஜோமோல் என பலரது நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் 'ஜெய்பீம்' திரைப்படம் கடந்த வாரம் (நவம்பர் 2) நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
பழங்குடி மக்கள் மீது அதிகாரம் எப்படி தன் ஒடுக்குமுறையை செலுத்துகிறது, அதை அவர்கள் சட்ட போராட்டத்தின் மூலம் எபடி எதிர்கொள்கிறார்கள் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக 'ஜெய்பீம்' தயாரிக்கப்பட்டது.
இந்த படத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் பாராட்டிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் 'ஜெய்பீம்' படத்தை பாராட்டியதோடு நடிகர் சூர்யாவுக்கு கோரிக்கையுடன் கூடிய கடிதம் ஒன்றையும் அனுப்பி அதை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.
அந்த கடிதத்தில், உண்மை சம்பவத்தை நீர்த்துப் போகாமல் படமாக்கியுள்ளதாக இயக்கிநருக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.
மார்க்கிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக நடத்திய சட்டப்போராட்டம் காரணமாகவே ராஜாக்கண்ணு வழக்கில் நீதியும் நிவாரணமும் கிடைத்தது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
விமர்சனங்களை தாண்டி படத்தின் கரு மக்களிடையே போய் சேர்ந்திருப்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளவர் கடிதத்தின் இறுதியில் பொருளாதார ரீதியில் ஏழ்மை நிலையில் இருக்கும் பார்வதிக்கும் அவர்களை போன்ற ஒடுக்கபட்ட மக்களுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
பாலகிருஷ்ணனின் இந்த கோரிக்கைக்கு தற்போது நடிகர் சூர்யா தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
அதில் அவர் பகிர்ந்துள்ள கடிதத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்களிப்பை இயன்றவரையில் முதன்மைப்படுத்தி இருப்பதாக குறிப்பிடும் சூர்யா, பார்வதி அம்மாளுக்கு முதுமை காலத்தில் உதவும் வகையில், பத்து லட்சம் தொகை டெபாசிட் செய்து தருவதாக அறிவித்து இருக்கிறார்.
அதில் இருந்து வரும் வட்டி தொகையை மாதந்தோறும் பார்வதி அம்மாள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவருக்கு பின் அவரது வாரிசுகள் பெற்று கொள்ளவும் முடியும் எனவும் அதில் கூறியுள்ளார்.
மேலும், குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் இந்த அறிவிப்பிற்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, ராஜாகண்ணுவுக்கு நேர்ந்த கொடுமைகளை படத்தில் பார்த்த பிறகு அதிர்ச்சியும் வலியுயும் அடைந்ததாக கூறிய நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது மனைவி பார்வதிக்கு வீடு நிச்சயம் வழங்குவேன் என்று கூறி தமது சமூக ஊடக பக்கத்திலும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
சர்ச்சையும் சலசலப்பும்
இதேவேளை, இந்த படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையானது.
*என்ன சர்ச்சை?*
படத்தில் வரும் ஐஜி பெருமாள்சாமி என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். இதில் வழக்கு விசாரணையின் சம்பந்தப்பட்ட வட இந்தியாவை சேர்ந்த நபரிடம் விசாரிக்கும்போது அதில் இருந்து தப்பிப்பதற்காக இருவருக்கும் தெரிந்த மொழியான தமிழில் பேசாமல் அவர் இந்தியில் பேசுவார்.
அதற்கு பிரகாஷ்ராஜ் அவரை கன்னத்தில் அறைந்து தமிழில் பேச நிர்பந்திப்பார். இந்த காட்சிக்கு இந்தி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.
கதாபாத்திரத்தின் தன்மை, அவர் வழக்கை திசை திருப்பும் நோக்கில் பேசியதற்காக மட்டுமே அப்படி காட்சிப்படுத்தி இருந்தோமோ தவிர இந்தி ஆதரவாளர்களை கோபப்படுத்தும் நோக்கில் இல்லை என இந்த காட்சியின் நோக்கம் குறித்து சமீபத்தில் இயக்குநர் ஞானவேல் பிபிசி தமிழுக்கு அளித்திருந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.
மேலும், இந்த கதையில் இடம்பெறும் இன்னொரு போலீஸ் கதாப்பாத்திரத்தின் உண்மையான பெயரை அந்தோணி சாமி என்றில்லாமல் குருசாமி என மாற்றியதும் ஒரு காட்சியில் அவர் வீட்டின் நாட்காட்டியில் குறிப்பிட்ட சாதி அடையாளத்தோடு கூடிய படம் இருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியது. இதனை அடுத்து படத்தில் அந்த 'காலண்டர் காட்சி'யில் திருத்தம் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த சர்ச்சைகளுக்கு அன்புமணி சூர்யாவை நோக்கி கேள்வி எழுப்பி கடிதம் ஒன்றை தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, 'பெயர் அரசியலுக்குள் பெயரை சுருக்கி படத்தின் கருவை நீர்த்து போக செய்ய வேண்டாம்' என நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார்.
பிற செய்திகள்:
- வெள்ளத்தில் குமரி: தீவாக மாறிய கிராமம் - இன்றைய கள நிலவரம் என்ன?
- போலீஸ் என்கவுன்டரில் 26 மாவோயிஸ்டுகள் பலி: முக்கிய தலைவர் மிலிந்த் டெல்டும்டே கொல்லப்பட்டார்
- கோவை மாணவி மரண விவகாரம்: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூரில் கைது
- பிரான்சின் கடைசி ராணி கொடூரமாக கொல்லப்பட்ட வரலாறு தெரியுமா?
- எவரையும் சாராமல் 40 ஆண்டுகள் காட்டில் தனியாக வாழ்ந்த வனமகன் கென் ஸ்மித்
- கன்னியாகுமரியில் கன மழை: 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு
- அலுவல் நேரத்துக்கு பிறகு ஊழியர்களுக்கு அதிகாரிகள் மெசேஜ் அனுப்ப போர்ச்சுகலில் தடை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்