'ஜெய்பீம்' இயக்குநர் ஞானவேல் பேட்டி: 'பிரகாஷ்ராஜ் அறைந்த காட்சி சர்ச்சையை வியாபார தந்திரம் என பாராட்டினார்கள்'

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் என பலரது நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. படம் நல்ல வரவேற்பை பெற்ற அதே சமயம் பல விவாதங்களையும் ஏற்படுத்தியது.

கதையின் தன்மை, படத்தின் நோக்கம், விவாதங்களுக்கான பதில் என பலவற்றை 'ஜெய்பீம்' இயக்குநர் த.ச. ஞானவேல் பிபிசி தமிழுடன் கலந்துரையாடினார். அதில் இருந்து..

'ஜெய் பீம்' படத்திற்கு இப்போது கிடைக்கும் வரவேற்பு எதிர்ப்பார்த்ததுதானா?

"'ஜெய்பீம்' என தலைப்பு தேர்ந்தெடுத்த போதே அதில் சாதகம், பாதகம் இரண்டுமே உண்டு. சாதகம் என்றால், இதை மாற்றத்திற்கான முழக்கமாக இதை வரவேற்கலாம். மேலும், இந்த தலைப்புக்கென ஓர்அடையாளம் இருக்கிறதில்லையா? அதற்குள்ளே படத்தை சுருக்கி பார்ப்பதும் நிச்சயம் நிகழும். ஆனால், ஒட்டுமொத்தமாக பார்த்தால், நான் எதிர்ப்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கதையின் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், படம் பார்த்த பின்பு நிறைய இளைஞர்கள் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள். ஒரு விஷயத்தை நீங்கள் உரக்க பேசுகிறீர்கள் என்றால் அதற்குரிய எதிர்ப்பு வரத்தான் செய்யும். விளைவுகளை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், அதனால், மாற்றத்திற்கான விஷயங்களையோ, உரையாடல்களையோ வரவேற்க இந்த தமிழ்ச் சமூகம் ஏற்கனவே தயாராகதான் உள்ளது".

படத்தின் முதல் காட்சியிலேயே சாதி குறித்து வெளிப்படையாக பேசிய காட்சியை வைத்திருந்தீர்கள். இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இதுபோன்று அதிகம் வெளிவராத போது, இந்த ஆரம்ப காட்சிக்கான தூண்டுதல் எது?

"நான் கள ஆய்வு செய்தபோது, கிடைத்த விஷயம்தான் இந்தக் காட்சி. மனித உரிமை ஆணையத்தின் எஸ்.சி/எஸ்.டி கமிஷனிற்கு அந்த இடத்தில் கள ஆய்வு செய்தவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் காவல்துறையால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்களில் எப்படி அவர்களை பிடித்து போனார்கள் என்பது இருந்தது. அதுதான், இந்த ஒரு காட்சியை வைக்க வேண்டும் என்பதற்கான தூண்டுதல். உண்மையாக ஒரு விஷயம் நடந்து பழங்குடிகள் பாதிக்கபடும்போது, அதை நாம் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை".

'ஜெய்பீம்' படத்தின் கதை உண்மை சம்பவம் அடிப்படையிலானது. உண்மைக்கு நெருக்கமாக இதை காட்சிப்படுத்துவதில் என்ன மாதிரியான சவால்கள் இருந்தது?

"சவால்கள் என்றால் இருவேறு எதிர்திசைகள் இதில் இருக்கின்றன. ஒன்று, இது எளிமையான நிலப்பரப்பில் வாழ்கின்ற பழங்குடி மக்களின் வாழ்க்கை., வழக்கமாக, பழங்குடிகள் என்றால் மலைமேல்தான் வாழ்வார்கள். ஆனால், சமவெளி பகுதியில் வாழக்கூடிய பழங்குடிகள் குறித்த பார்வையே நமக்கு கிடையாது. அதனால், அந்த வாழ்க்கை குறித்து பேசுவதற்கான தேவை இருந்தது. அதையும் நான் செய்தேன். நான் முன்பு கல்வி தளத்தில் வேலை செய்துள்ளதால் இருளர் மாணவர்கள் பிரச்னைகள் என்ன என்பதை நான் கண்கூடாகப் பார்த்துள்ளேன்.

கிராமப்புற மாணவர்களுக்கு பள்ளிக்கூடமே ஊரில் இருந்து தள்ளி இருக்கும். பழங்குடி மக்கள் கிராமத்தில் இருந்தே தள்ளி இருப்பார்கள். இதில் வேலை செய்யக்கூடிய பேராசிரியர் கல்யாணி உள்ளிட்ட பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் நண்பர்கள் எல்லாருமே எனக்கு நல்ல பழக்கம்.

எனவே, கல்வி சார்ந்து அதிகம் கவனம் செலுத்திய எனக்கு பழங்குடியினர் வாழ்வியல் சார்ந்த விஷயங்களை படத்திற்காக கவனம் செலுத்த வேண்டி வந்தது.

இந்த கதைக்களம் லாக்கப் மற்றும் நீதிமன்றம் சார்ந்தது. இதில் இவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதுதான். இந்த வழக்கு குறித்து சந்துரு அவர்கள்தான் எனக்கு சொன்னார். எனவே, படம் ஆரம்பித்து அரைமணி நேரத்திற்கு பிறகு இதை வழக்கறிஞர் பார்வையில், நீதிமன்ற கோணத்தில் எடுத்து சென்றோம்.

இங்கு படத்தில் இருளர் என்பது பழங்குடிகளின் ஒரு குறியீடாகத்தான் அமைத்தேன். பழங்குடிகள் வாழ்க்கையில் உள்ள சவால்கள், இதில் சட்டம் சார்ந்து சந்துரு எதிர்கொண்ட நெருக்கடிகளையும் ஒப்பிட்டு பார்த்தால் நாம் படம் எடுப்பது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது. இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் எளிதாக ஆவணப்படம் என்ற எல்லைக்குள் வந்துவிடும். அது இல்லாமல், கலை நேர்த்தியோடு இருக்க வேண்டும் என்ற சவாலை நான் எடுத்துக் கொண்டேன்".

சாத்தான் குளம் சம்பவத்தின் லாக்கப் மரணமும், 'ஜெய்பீம்' கதையும் ஒரு புள்ளியில் இணைவதை எப்படி பார்க்கறீர்கள்?

"இரண்டு கோணங்கள் இதில் முக்கியம். இப்போதும் இது தொடர்கிறது என்பது எதார்த்தமானது. அந்த சம்பவங்கள் குறித்த செய்தி வந்தபோதுமே கூட படக்குழுவில், 'நாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அது 30 வருடங்களுக்கு முன்னால், நடந்தது என நினைத்து கொண்டிருந்தோம். ஆனால், அது இப்போதும் நடக்கிறது பாருங்கள்' என ஆச்சரியமாக பேசினோம். அது ஆச்சரியம் கூட இல்லை. மிக அவமானப்பட வேண்டிய விஷயம். ஒரு நாகரிக சமூகம், சக மனிதனை அதிகாரத்தின் பிடியின் கீழ் இப்படி நடத்துகிறது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். இது ஒரு கோணம்.

அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்து எப்படி நீ கேள்வி கேட்கலாம் என்பதுதான் சாத்தான்குளம் சம்பவம். ஆனால், 'ஜெய்பீம்' அப்படி இல்லை. திட்டமிட்டு அவர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்கள் மீது இந்த பொய்வழக்கு போடுதல் என்பது அவர்களை கேட்க யாருமே இல்லை, உங்களுக்கு எதாவது நடந்தால் யாருமே கேட்க முன்வரமாட்டார்கள்.

அதை நான் எவ்வளவு வலுவாக திரைக்குள் சொல்ல முடியுமோ அதை சொல்லி இருக்கிறேன். அது நிறைய பேருக்கு புரிந்திருக்கிறது. சில பேருக்கு அது சரியாக சென்று சேரவில்லை. இதற்கு பிறகு என்ன என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். இது ஒருவருக்கு மட்டுமே நடக்கும் விஷயம் இல்லை.

சாத்தான் குளம், பெலிக்ஸ் விஷயம் அவர் இறந்ததால் மீடியா வெளிச்சத்திற்கு வந்தது. ஒருவேளை அவர், லாக்கப்பில் இறக்கவில்லை என்றால் வாழ்நாள் முழுக்க அவர் மிகப்பெரிய துயரமான ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து இருப்பார்கள். அந்த வலியும், மன பாதிப்பும் அவர்கள் சீக்கிரம் மீண்டு எழுவதற்கான வாய்ப்பை தரவே தராது. இறப்பு மட்டும்தான் இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்தது. அதனால்தான் சொல்கிறேன், ஒருவேளை அவர் இறக்கவில்லை என்றால் வாழ்வில் அது சிறையில் இருந்ததை விட மிகப்பெரிய தண்டனையாக அது இருந்திருக்கும்.

'ஜெய்பீம்'-க்காக நான் சந்தித்த நிறையபேர் இறக்கவில்லை. ஆனால், அவர்களால் நடக்க முடியாது, வேலைக்குப் போக முடியாது. உடல் உழைப்பை தவிர எதுவுமே அவர்களுக்கு மூலதனம் கிடையாது. எது அவர்களுக்கு வாழ்வியல் ஆதாரமோ அந்த உழைப்பை அவர்களால் செலுத்தவே முடியாது. இந்த மாதிரியான விஷயங்கள் இங்கு பேசப்படவே இல்லை, கவனிக்கப்படவே இல்லை.

இதில் இருந்து இந்த படம் அடுத்த தளத்திற்கு நகர வேண்டும் என்றால் இது பொய் வழக்கு குறித்தான உரையாடலை தொடங்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படியான உரையாடல் இன்னும் பெரிதாக துவங்கவில்லை.

'ஜெய்பீம்' படத்தின் முதல் காட்சியை நான் போராடி வைத்ததற்கான காரணம் என்னவென்றால், அவர்கள் எதுவுமே செய்யவில்லை. ஆனால், அவர்கள் மீது ஒரு வழக்கு போடப்படும். ஏன் அவர்கள் மேல் வழக்கு போட வேண்டும்? இதுபோல மற்ற ஆதிக்க சாதியினர் மீது வழக்கு ஏன் நிகழாது? இந்த கேள்விகளுக்கான பதில்தான் இந்த படம் என நினைக்கிறேன்".

கதை கேட்டு நடிகர் சூர்யா தயாரிப்பதற்கும் நடிப்பதற்கும் ஒப்பு கொண்டார். முதலில் சந்துரு கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு உங்கள் தேர்வு யாராக இருந்தது?

"தேர்வு குறித்து முதலில் நான் யோசிக்கவே இல்லை. ஏனெனில் அது சவாலான ஒரு விஷயம். இந்த கதாப்பாத்திரத்தை பிரபலமான ஒரு நடிகர் செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் விருப்பமாக இருந்தது. ஆனால், அதை அவரிடம் கேட்க முடியவில்லை. ஏனெனில் இதில் வழக்கமான பாடல், சண்டை, ஜோடி என எதுவுமே இல்லை. அவருடைய ரசிகர்களுக்கான எதிர்பார்ப்பு என ஒன்று இருக்கும். அதை மனதில் வைத்து வழக்கமான பொழுதுபோக்கை கொடுத்தால் படத்தின் தன்மை போய்விடும். இந்த மாதிரியான நெருக்கடிகள் எல்லாம் இருந்தது. சூர்யா என்று இல்லை எந்த ஒரு பிரபலமான நடிகரிடமும் சென்று, 'இதுபோல நான் ஒன்று செய்கிறேன், நீங்கள் நடிக்கிறீர்கள?' என கேட்பது கடினமான விஷயம்.

ஒருவேளை, இது நடக்காமல் போயிருந்தால் பல கதவுகளை தட்ட வேண்டியதாக இருந்திருக்கும். இந்த மாதிரியான ஒரு தீவிரமான கதையை எப்படி ஏற்று கொள்வார்கள் என்ற எண்ணம் இருந்தது. கதை சொல்லும்போதே நான் 'ஜெய்பீம்' என்ற தலைப்புதான் முதலில் வைத்திருந்தேன். அப்படி இருக்கும்போது, இந்த கதையை எத்தனை தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்வார்கள் என்பது தெரியாது. ஆனால், தயாரிப்பு நிலையில் ஐந்து நிமிடங்களில் கதை ஓக்கே ஆனது. பொதுவாக இதுபோன்ற கதைகளுக்கு, ஸ்கிரிப்ட் எடுத்து கொண்டு நான்கைந்து வருடம் அலைந்தேன் என்ற கதை பெரும்பாலும் இருக்கும். அதுபோன்ற எந்த ஓர் அலைக்கழிப்புமே எனக்கு கிடையாது. நான் எதிர்ப்பார்க்காத இன்னொன்று சூர்யாவே இந்த கதாப்பாத்திரத்தை எடுத்து நடிக்கிறேன் என சொன்னது.

கதையின் தன்மையைப் புரிந்து கொண்டு இந்த கதை சொல்லப்பட வேண்டும் என்ற முனைப்பு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், நடிகராகவும் சூர்யாவுக்கு இருந்தது. இது எனக்கு மிகப்பெரிய பலமாக அமைந்ததால் என்னுடைய கதையை இன்னும் சுதந்திரமாக சொல்ல முடிந்தது".

சந்துருவிடம் முதலில் இந்த வழக்கை படமாக்க போகிறேன் என்று சொன்ன போது என்ன சொன்னார்?

"அவருக்கு என் மீது மதிப்பும், அக்கறையும் உண்டு. அவர் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற போது அவர் குறித்து ஒரு 'டாக்குமெண்ட்ரி' செய்யலாம் என அவரது துணைவியார் பாரதி வேண்டுகோள் வைத்தார். ஆனால், சந்துரு அதை மறுத்துவிட்டார். 'நான் ஓய்வு பெற்றுவிட்டேன். இந்த வேலை எல்லாம் செய்தேன் என பெருமையாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை' என்றார்.

ஆனால், பழங்குடி பெண்ணுக்கான நீதிபோராட்டம் என்பது இப்போதும் தொடர்கிறது என்பதால் இந்த கதையை சொல்லும்போது இந்த விஷயம் வெளியே போக வேண்டும் என்று சம்மதித்தார். அவரும் பேராசிரியர் கல்யாணியும் நெருக்கமான நண்பர்கள். அவர் வழக்கறிஞராக இருந்த காலத்தில் இருந்தே கல்யாணியை அவருக்கு தெரியும். கல்யாணியின் அனைத்து சட்ட போராட்டங்களையும் சந்துருதான் நடத்தினார். பேராசிரியர் கல்யாணிக்காக மட்டும் கிட்டத்தட்ட 11 வழக்குகள் நடத்தி இருக்கிறார். இந்த சட்டப் போராட்டத்தில் கல்யாணியை காவல்துறை கைது செய்யாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் சந்துரு. இதை கல்யாணி பல இடங்களில் சொல்லி இருக்கிறார்.

மக்கள் பணியாற்றும் இடத்தில் அவரை பாதுகாப்பது என்னுடைய வேலை என சந்துரு அதை எடுத்து முனைப்பாக செய்திருக்கிறார். அவருடைய அந்த பங்களிப்புதான் கல்யாணிக்கு சுதந்திரமாக மக்கள் பணியாற்றுவதற்கான ஒரு வெளியை உருவாக்கி இருக்கிறது. இதுபோல, ஒருவொருக்கொருவர் இணைந்திருந்தோம். அப்படி இருக்கும்போது இதை படமாக்கலாம் என யோசனை வந்தபோது அனைத்து தரப்பில் இருந்து அந்த ஆதரவு கிடைத்தது".

சந்துரு, ராஜாகண்ணு என முதன்மை கதாப்பாத்திரங்களுக்கு உண்மையான பெயர் இருக்கும்போது, பார்வதி பெயர் 'செங்கேணி' என தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம்?

"சந்துருவிடம் இருந்து எனக்கு வழக்கு குறித்த விசாரணை, தீர்ப்பு முதலான ஆவணங்கள் கிடைத்தது. இதையெல்லாம் படித்தபோது, குறவர் சமூகத்தை விட ஒருபடி பின்தங்கி இருக்கிற இருளர்களை இந்த கதையில் சொல்ல வேண்டும் என ஒரு படைப்பாளியாக என்னுடைய தேர்வு இருந்தது. அந்த இடத்தில், நான் முழுக்க இருளர்கள் வாழ்வியலைத்தான் சொல்ல வேண்டி இருந்தது. ஒரு பழங்குடிக்கும் இன்னொரு பழங்குடிக்கும் இடையில் நிறைய வாழ்வியல் வேறுபாடுகள் இருந்தன.

அதனால், அந்த பகுதியில் அந்த மாதிரியான பாதிப்புக்குள்ளான விஷயங்கள், பெயர்கள் தேர்வு என யோசித்தேன். 'செங்கேணி' என்பது இருளர் பெண்ணுடைய பெயர். அந்த பெயர் நல்லதொரு தமிழ்ப் பெயராகவும், தமிழ்ச் சமூகத்தின் தொன்மையை வலியுறுத்துவதாகவும் இருந்தது. அதனால், அந்த பெயரை தேர்ந்தெடுத்தேன்".

கதைக்காக நிஜத்தில் செங்கேணியான பார்வதியை நேரில் சந்தித்தீர்களா?

"இல்லை சந்திக்கவில்லை. அந்த ஊரில் விசாரித்த போது அவர் மகளோடு வேறு ஊருக்கு சென்றுவிட்டார் என சொன்னார்கள். மேலும், எனக்கு தேவைப்படவில்லை என்பதால் நான் சந்திக்கவில்லை. ஏன் எனக்கு தேவைப்படவில்லை என்றால், இருளர் எனும்போது அந்த புனைவுக்கு ஏற்றதுபோலதான் நான் செங்கேணி கதாப்பாத்திரத்தை உருவாக்க முயன்றேன். இந்த கதைக்கு வரும்போதே, பார்வதிக்கு திருமணமான பிள்ளைகள் இருந்தார்கள். இந்த வழக்கு நடக்கும்போது பார்வதிக்கு 40+ வயது இருக்கும்.

இந்த கதையை எனக்கு கலை நேர்த்தியோடு சொல்வதற்கு ஓர் இளம் தம்பதியாக இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. அதனால், அவரை சந்திப்பது இதுபோன்ற விஷயங்கள் எழுதுவதை தடுக்கும் என தோன்றியது".

1993 காலக்கட்டத்தில் நடந்ததை ஏன் 1995 மாற்றினீர்கள்?

"படைப்பு சுதந்திரம்தான் காரணம். போராட்டம் என்பதை நான் முன்வைக்கிறேன். தனியார் தொலைக்காட்சி போன்ற விஷயங்கள் 1993ல் ஆரம்பித்தாலும், 1995-ல்தான் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதற்கு முன்பு இருந்த அரசு தொலைக்காட்சி சேனல்களில் எல்லாம் இதுபோன்ற விஷயங்களை எல்லாம் நம்மால் யோசிக்கவே முடியாது. வானிலை அறிக்கை, அரசு சார்ந்த செய்திகள், பத்திரிக்கை அறிக்கைகள் என நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது.

அதை எல்லாம் உடைத்தது தனியார் தொலைக்காட்சி சேனல்களின் வரவுதான். அதனால், இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் புகுத்த அந்த காலக்கட்டம் தேவைப்பட்டது. மேலும், தமிழ்நாட்டு சூழலில் 1995, 96 காலக்கட்டத்தில்தான் அதிக லாக்கப் மரணங்கள் நடந்தன. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது 1995வது காலக்கட்டம் எனக்கு மிக வசதியாக இருந்தது".

படம் வந்து பொதுவெளியில் விவாதம் ஏற்படுத்திய அதே சமயம் இன்னொரு பக்கம் நரிக்குறவர் இனத்தை சார்ந்த பெண்மணி ஒருவர் கோயில் அன்னதானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பானதே?

"இது தற்செயல் நிகழ்வுதான். ஆனால், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் குரல் என்பது படத்தில் உள்ள 'செங்கேணி'யின் இன்னொரு குரல். ஒரு கோயிலில் நான் சமமாக உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கவில்லை என்ற அந்த குரல் எழுப்புதலை விட முக்கியம் என்னவென்றால் அமைச்சர் உட்கார்ந்து சாப்பிட்டார் இதை அடுத்த ஒரு பத்து நாட்களுக்கு மீடியா பேசிவிட்டு விட்டுவிடும், அதற்கு பிறகு எங்கள் வாழ்வில் எந்த மாற்றமும் நடக்காது என மிகவும் வெளிப்படையாக பேசுகிறார்.

அதுமட்டுமல்லாமல், எங்கள் பிள்ளைகளுக்கு கல்வி இருந்தால் மட்டும்தான் முன்னேற முடியும் என்கிறார். அதில் எனக்கு ஆழமான பிடிப்பு உண்டு. அஸ்வினியுடன் நான் ஒத்து நிற்கும் கருத்து என்னவென்றால், பழங்குடிகளுக்கு தரப்படும் எதையும் விட அவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வி என்பது முக்கியமானது. 'ஜெய்பீம்' படத்தை பார்த்த பலரும் வழக்கு முடிந்துவிட்டது, படம் முடிந்துவிட்டது என்றுதான் சொன்னார்கள். ஆனால், எனக்கு படம் முடியவில்லை. அந்த படம் எனக்கு எங்கு முடிகிறது என்றால், பிறருடைய அக்கறையினாலோ அல்லது கருணையினாலோ அவர்களுடைய நீதியை வென்றெடுக்க வேண்டும் என இருக்க கூடாது. அவர்களுடைய சொந்த முயற்சியில் அவர்களுக்கான அநீதிகளை எதிர்த்து போராடுவதுதான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும். அதற்கு கல்வி மட்டும்தான் ஒரே ஆயுதம். எப்போது அவர்கள் கல்வி பெற்று, சமமாக இந்த சமூகத்தில் நுழைகிறார்களோ அப்போதுதான் இந்த இழிவுகள் நீங்கும். அப்போதுதான் அதிகாரம் அவர்கள் மீது கைவைக்க தயங்கும். அந்த இடத்தை நோக்கி நகர்த்துவது என்பது மிக முக்கியம். அது அஸ்வினியின் குரலில் மிக உறுதியாக இருந்தது.

இதை சொல்வதற்கு அவர்களுக்கு படிப்போ, பெரிய ஆராய்ச்சியோ தேவைப்படவில்லை. அவர்களது வாழ்க்கை இதை அவர்களுக்கு தெளிவாக புரிய வைத்தது. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் மீது மதிப்பு உருவாக்கியது".

முதல்வர் ஸ்டாலின் படத்திற்கு பாராட்டுகள் தெரிவித்திருந்தாரே? சந்திப்பில் வேறு என்ன சொன்னார்?

"முதல்வர் படம் பார்த்துவிட்டு 'நன்றாக இருக்கிறது' என்பதை தாண்டி, கண்கள் கலங்கி எதுவும் அவரால் பேச முடியவில்லை. அவரது துணைவியாருக்கும் கண்கலங்கி, 'மிசா காலம் நியாபகம் வந்துவிட்டது' என அப்போதே சொன்னார்.

கிட்டத்தட்ட அதுவேதான் அவருக்கும் நியாபகம் வந்திருக்கிறது. பிறகு எழுதிய கடிதத்தில்தான் படத்தை அவர் எப்படி பார்த்தார் என்பதை உள்வாங்கினேன். அதைவிட முக்கியமான விஷயம், தீபாவளி அன்று அவர் இருளர்களை சந்தித்து பட்டா கொடுப்பது என அவர்களது தேவைகளை தீர்க்க அதிகாரிகளை முடுக்கிவிட்டார்.

அதேபோல, கமல்ஹாசன் படம் பார்த்துவிட்டு கண்கலங்கி, உண்மைக்கு நெருக்கமாக படம் இருப்பதாக சொன்னார். இந்த படம் எனக்கு சினிமாவாக தெரியவில்லை. அவர்கள் வாழ்க்கையை பக்கத்தில் போய் பார்ப்பது போல இருந்தது என்றார். 'விருமாண்டி' படத்தை நான் இப்படிதான் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். கிட்டத்தட்ட அதுபோன்ற உணர்வை எனக்கு கொடுத்தது என நெகிழ்ந்து சொன்னார்".

பிரகாஷ்ராஜ் கதாப்பாத்திரம் இந்தியில் பேசியதற்காகதான் எதிரில் இருந்தவரை அடித்தார் என ஒரு சர்ச்சை கிளம்பியதே? அந்த காட்சியின் நோக்கத்தை விளக்குங்கள்?

"சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரகாஷ்ராஜ் அதற்கான சரியான விளக்கத்தை கொடுத்திருக்கிறார். அது ஒரு கதாப்பாத்திரம். திருட்டு வழக்கோடு தொடர்பு உள்ளது. அப்போது விசாரணையில் இருவருக்கும் தெரிந்த மொழியில் உரையாடாமல், தனக்கு தெரிந்த ஒரு மொழியை மட்டும் பேசுவது என்பது அதில் இருந்து தப்பித்துக்கொள்ளும் மனநிலை அல்லது மேட்டிமைத் தன்மை என்றுதான் அதை கதாப்பாத்திரமாக எடுத்து வந்தோம்.

இந்தி பேசியதற்காக அவரை அடித்தார்கள் என்று எடுத்துகொள்வது கதையை மேலோட்டமாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான். ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும் விதம்தான் அது. இதற்கெல்லாம் எதுவுமே செய்ய முடியாது.

இதுவே, 'ஸ்கேம் 1992' இணையத்தொடரில் ஒரு விசாரணை காட்சியில் இந்தி தெரியாது என்பதற்காக தமிழர் ஒருவரை மிரட்டுவார். அதை இங்கு பிரச்சனையாக இருக்கவில்லை. கதாப்பாத்திரம் என்பதை தாண்டி, ஒரு மொழியை திணிக்கும்போது வரும் கோப உணர்வு என்பதையும் நான் மறுக்கவில்லை. மற்றபடி, இதில் எந்த உள்நோக்கமோ வெளிநோக்கமோ எதுவும் இல்லை.

சில பேர் இது நல்ல வியாபார தந்திரம் என்றெல்லாம் பாராட்டினார்கள். எனக்கு சிரிப்பாகதான் இருந்தது. நாம் ஒரு கருத்தை சொல்கிறோம். அதை வியாபாரமாக்கினால் பரவாயில்லை. வட இந்தியாவில் இந்த படம் சென்றடைந்ததற்கு காரணம் இந்த காட்சிதான் என்று சொன்னால் படம் எடுத்ததற்கான நோக்கமே போய்விடும். அந்த பாராட்டை கூட நான் ஏற்கவில்லை. நான் சொல்ல வந்த விஷயத்தின் மீது எதாவது குறுக்கீடு வந்தால் கவனிப்பேனே தவிர, யாரையும் குறிப்பிட்டு காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :