தி பேட்டில் அட் லேக் சாங்ஜின்: ஹாலிவுட்டை ஓரங்கட்டிய சீன 'தேசபக்தி' திரைப்படம் - வசூலில் நம்பர் 1

போஸ்டர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டே வாரத்தில் சுமார் 4500 கோடி ரூபாய் வசூலைக் குவித்திருக்கிறது "தி பேட்டில் அட் லேக் சாங்ஜின்"
    • எழுதியவர், வெயி யிப்
    • பதவி, பிபிசி செய்திகள்

சமீபத்தில் வெளியாகி உலகத்திலேயே அதிக வசூலைக் குவித்திருக்கும் திரைப்படம் எது தெரியுமா? ஜேம்ஸ் பாண்டின் "நோ டைம் டு டை" அல்லது மார்வெல்லின் ஷாங்-சி, இல்லையென்றால் "லெஜண்ட் ஆப் தி டென் ரிங்ஸ்" என நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு.

அது 1950 களின் கொரியப் போரைப் பற்றிய ஒரு சீன பரப்புரைப் படம். பெருங் குறைபாடுகள் இருந்தபோதும், அமெரிக்கப் படையினரைத் தோற்கடித்த சீனப் படையினரின் கதையை மையமாகக் கொண்ட படம் அது.

திரைப்படத்தின் பெயர் "தி பேட்டில் அட் லேக் சாங்ஜின்". வெளியான இரண்டே வாரங்களில் சுமார் 4,500 கோடி ரூபாய் வசூலைக் குவித்திருக்கிறது. ஷாங்-சி திரைப்படத்தின் உலகளாவிய வசூலான 2,800 கோடி ரூபாயை விடவும் இது மிக அதிகம். அதுவும் பாதி நாள்களிலேயே.

இது சீனாவில் இதுவரை அதிக வசூல் செய்த படமாக அமையப் போகிறது.

கொரோனா தொற்றால் திரையரங்குகளை மூடுவதும் திறப்பதுமாக இருந்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சீன திரைப்படத் துறைக்கு இந்த வெற்றி நல்ல செய்தி.

நாட்டுக்கு இது அதைவிடவும் நல்ல செய்தி. பெருந்திரளான மக்களுக்கு ஒரு பரப்புரையைக் கொண்டு சேர்ப்பது எப்படி என்ற ஒரு சூத்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக நிபுணர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் உலகின் மிகப் பெரிய திரைப்படச் சந்தையான சீனாவில் கால்பதிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஹாலிவுட்டுக்கு இதுபோன்ற உள்ளூர் படங்களின் பிரமாண்டமான வெற்றி என்பது இன்னும் பெரிய சவால்களை ஏற்படுத்தக்கூடியதாகவே அமையும்.

'திரைப்படத்தைப் பார்ப்பது தேசபக்தி'

"தி பேட்டில் அட் லேக் சாங்ஜின்" திரைப்படம் சீன அரசின் உத்தரவின்பேரில் தயாரிக்கப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவில் வர்த்தக ரீதியிலான பெரிய வெற்றியைப் பெற்ற பல தேசியவாதப் படங்களுள் ஒன்று.

ஒரு சீன ராணுவ வீரர் ஆப்பிரிக்க போர்க்களத்தில் நூற்றுக்கணக்கான மக்களை கெட்டவர்களிடமிருந்து காப்பாற்றிய கதையைக் கூறும் "உல்ஃப் வாரியர் 2" திரைப்படம் 2017-ஆம் ஆண்டில் ஒரே வாரத்தில் 1,740 கோடி ரூபாய் வசூலைக் குவித்து சாதனை படைத்தது.

கொரியப் போரின் திருப்புமுனையாக அமைந்ததாகச் சீனா கூறும் ஓர் உறைபனிக் குளிரில் நடந்த கொடூரச் சண்டையை மையப்படுத்தி லேக் சாங்ஜின் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சண்டை "அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து கொரியாவுக்கு உதவும் போர்" என்று சீனாவில் அறியப்படுகிறது.

ராணுவ வீரர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தப் படத்தைப் பார்ப்பது சீனாவில் கிட்டதட்ட ஒரு தேசபக்தி கடமை

அமெரிக்கப் படைகளுக்கு எதிரான இந்தச் சண்டையில் ஆயிரக்கணக்கான இளம் சீன வீரர்கள் இறந்தனர்.

"வீரர்களின் தியாகத்தால் நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். மோசமான வானிலையிலும் அவர்கள் வெற்றிபெற்றார்கள். அதுகுறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என விமர்சன தளமான டூபனில் ஒருவர் எழுதியிருக்கிறார்.

வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்குக்கும் இடையே பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இத்தகைய திரைப்படம் வெற்றி பெறுவது ஒன்றும் தற்செயலானது அல்ல.

"இது நிச்சயமாக அமெரிக்காவுடனான பதற்றங்களுடன் தொடர்புடையது. அந்த வகையிலேயே இது பிரபலப்படுத்தப்பட்டது" என்கிறார் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் ஸ்டேன்லி ரோசென்.

திரைப்படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணம், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அரசுத் தரப்புக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு. திரையிடப்படும் படங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் இதற்கு இருக்கிறது.

"பேட்டில் அட் லேக் சாங்ஜின்" திரைப்படத்துக்கு திரையரங்குகளில் பெரிய அளவு போட்டி எதுவும் இல்லை. உலகின் பிற பகுதிகளில் ஏற்கெனவே வெளியாகிவிட்ட "நோ டைம் டு டை" மற்றும் "டியூன்" போன்ற திரைப்படங்கள் இம்மாத இறுதியில்தான் சீனாவில் திரையிடப்பட இருக்கின்றன.

திரைப்படம் வெளியான தருணமும் உதவியாக இருந்தது. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தேசிய விடுமுறை நாள்களாக இருந்ததும், சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டைக் கொண்டாடுவதும் சாதகமாக அமைந்தன.

"இந்தப் படத்தைப் பார்ப்பது அங்கு கிட்டதட்ட ஒரு தேசபக்தி கடமை" என்று ரோசன் கூறுகிறார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கு இத்தகைய பரப்புரைத் திரைப்படங்கள் பெரும்பாலும் கட்டாயமாக்கப்படுவதாக நெதர்லாந்தின் லைடன் ஆசியா மையத்தின் இயக்குநர் ஃப்ளோரியன் ஷ்னீடர் கூறுகிறார்.

"கட்சி அமைப்புகள் அடிக்கடி கூட்டமாகப் பார்க்கும் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்கின்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சுமார் 9.5 கோடிக்கும் மேல் உறுப்பினர்களாக இருப்பதால் அதிலேயே கணிசமாக வசூல் கிடைத்துவிடுகிறது" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

படத்துக்கு ஆன்லைனில் இதுவரை வெளியாகி இருக்கும் விமர்சனங்கள் அனைத்தும் பாராட்டுக்களையே தந்திருக்கின்றன. எனினும் நிபுணர்கள் சிலர் அது உண்மையாக இருக்காது என்று கூறுகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, விமர்சித்தால் சிறைக்குப் போகவும் வாய்ப்பிருக்கிறது.

திரைப்படத்தில் காட்டப்பட்ட சீன வீரர்களை சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்ததற்காக முன்னாள் பத்திரிகையாளர் லுவோ சாங்பிங் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

"மாவீரர்களின் நற்பெயரையும் மரியாதையையும் களங்கப்படுத்திய" குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சீனாவின் பிளாக்பஸ்டர் பரப்புரை

இருப்பினும் வெகுஜன படத்தில் இருப்பதைப் போன்ற பிரமாண்ட வெற்றியின் கூறுகளை இந்தப் படத்திலும் ரசிப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

"சுமார் 1400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இந்தப் படத்தின் காட்சிகளில் காட்டப்பட்டிருக்கும் பிரமாண்டம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் போன்றவை சிறப்பாக இருக்கின்றன. மூன்று இயக்குநர்களும் சீனாவின் சிறந்த கதை சொல்லிகள் மாத்திரமல்லாமல் பிரபலமானவர்களும்கூட" என்கிறார் ரோசென்.

இயக்குநர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இயக்குநர்கள் தண்டே லாம், சுய் ஹர்க், சென் கைகே

இயக்குநர்களில் ஒருவரான சுய், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் தற்காப்புக் கலைப் படங்களுக்கு பெயர் பெற்றவர். லாம் அதிரடி காட்சிகளுக்கு பிரபலமானவர். சென் சீன வாழ்வியலைச் சித்தரிப்பவர்.

"இது ஒரு தேசபக்தி படம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் நான் அதைப் பார்த்தபோது உண்மையிலேயே அழுதுவிட்டேன். நிஜம் போலவே உணர வைத்தது" என சமூக வலைத்தளமான வெய்போவில் ஒருவர் எழுதியிருக்கிறார்.

ஹாலிவுட்டுக்கு பெரும் தலைவலி

இந்த வெற்றி ஹாலிவுட்டை போன்ற சீனாவில் தடம்பதிக்க நினைக்கும் பிற நாடுகளின் திரைத்துறைகளுக்கு கூடுதல் சவால்களை ஏற்படுத்தக்கூடும்.

வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு ஒதுக்கீடு முறையைப் பின்பற்றுகிறது சீனா. ஓராண்டில் 34 வெளிநாட்டுத் திரைப்படங்கள்தான் சீனாவுக்குள் வர முடியும்.

இதை மீறுவதற்கு குறுக்குவழிகள் உள்ளன. அதாவது சீன நிறுவனங்களுடன் சேர்ந்து ஹாலிவுட் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டால் அது இந்த ஒதுக்கீடு வரம்புக்குள் வராது.

சீன திரைப்படச் சந்தையைப் பிடிப்பதற்காக தங்களது திரைப்படங்களில் திருத்தங்களைச் செய்யும் பணியையும் ஹாலிவுட் முதலாளிகள் செய்து வருகிறார்கள். நடிகர்கள், உள்ளடக்கம், வசனம், கதைக்கரு என அனைத்தையும் சீனாவைக் கவரும் வகையில் தேர்வு செய்கின்றனர் என ஒரு அறிக்கை கூறுகிறது.

ஆனாலும் அது பாக்ஸ் ஆஃபிஸில் வசூலைக் குவிப்பதற்கு உத்தரவாதம் இல்லை. பல கூட்டுத் தயாரிப்புகள் படுதோல்வி அடைந்திருக்கின்றன.

திரையரங்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிற நாட்டுத் திரைப்படங்களுக்கு சீனாவில் ஒதுக்கீடு முறை இருக்கிறது

பிரபலமான சீன இயக்குர் ஷாங் யிமோவின் அதீதப் புனைவுத் திரைப்படமான தி கிரேட் வால் (2016) திரைப்படும் அமெரிக்காவிலும் சீனாவிலும் கடுமையான விமர்சனத்தைச் சந்தித்தது.

இத்தகைய சவால்கள் இருந்தபோதும், வெளிநாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒருபோதும் முயற்சியைக் கைவிட்டுவிட மாட்டார்கள் என நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தார்.

சீனாவுக்கும் ஹாலிவுட்டுக்கும் ஒன்றுக்கொன்று தேவை என அவர்கள் கூறுகிறார்கள்.

"கொரோனாவுக்குப் பிறகு உலகின் நம்பர் 1 திரைப்படச் சந்தையாக இருக்க சீனா விரும்புகிறது. அதற்கு ஹாலிவுட் பிளாக்பஸ்டர்கள் தேவை. குறிப்பாக விலை அதிகமாக இருக்கும் ஐமேக்ஸ் மற்றும் 3டி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் மூலம் அமெரிக்கச் சந்தையை முந்த முடியும்" என்கிறார் ரோசென்

"சீனப் படங்களின் தயாரிப்பு மதிப்புகள் தொடர்ந்து மேம்படும்போது, ​​ஹாலிவுட்டின் தேவை குறைந்துவிடக்கூடும். ஆனால் சீனாவால் சொல்ல முடியாத உலகளாவிய கதைகளை ஹாலிவுட்டால்தான் சொல்ல முடியும்"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :