அனிருத்: ரஜினியின் ஆதரவு, தனுஷ் தந்த வாய்ப்பு- வெற்றி முதல் சர்ச்சைகள் வரை - சுவாரஸ்ய தகவல்கள்! #HBDAnirudh

    • எழுதியவர், ச.ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத்தின் 31ஆம் பிறந்தநாள் இன்று. தன்னுடைய முதல் பாடலிலேயே உலக அளவில் ட்ரெண்ட் ஆனவர்.

இசையமைப்பாளராக 22 வயதில் அறிமுகமானவருக்கு இப்போது வரையும் இசை பயணத்தில் ஏறுமுகம்தான். அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

• பெரும்பாலும், தான் இசையமைத்த பாடல்களை அதிகம் கேட்கமாட்டார். தற்போதைய சூழலில் இளைஞர்களிடையே எது அதிகம் வரவேற்பை பெறுகிறது, உலக அளவில் சினிமாவில், இசையில் எந்த மாதிரியான விஷயங்களை, ட்ரெண்டை இளைஞர்கள் ரசிக்கிறார்கள் என்று தன்னை அப்டேட் செய்து கொள்வதில் கவனமாக இருப்பதாகவும் அதை தன்னுடைய வேலைக்கு பயன்படுத்தி கொள்வதாகவும் முன்பு ஒரு பேட்டியில் அனிருத் தெரிவித்தார்.

• '3' படம் மூலமாக அனிருத்தை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தவர் நடிகர் தனுஷ் என்பது அனைவருக்கும் தெரியும். லயோலா கல்லூரியில் கல்லூரி படித்து கொண்டிருந்தபோது வந்த வாய்ப்பு அது. அந்த படத்தில் அவருடைய முதல் பாடலான 'கொலைவெறி' அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்தது. அதுவும் இறுதி செய்யப்படாத ரஃப் கட் வெர்ஷன் அது. வருத்தத்தில் இருந்தவரை தேற்றிய தனுஷ், மேக்கிங் வீடியோவாக தனுஷ், ஷ்ருதி இருக்க, அனிருத் இசையமைப்பது போன்ற வீடியோவை அடுத்த நாள் யூடியூப்பில் வெளியிட்டார்கள். இதனை ரஜினிகாந்த் வெளியிட கமல்ஹாசன் பெற்று கொண்டார். முதல் ஆல்பம் வெளியாகும் என காத்திருந்தவருக்கு யூடியூப்பில் முதல் பாடல் வெளியானது அந்த சமயத்தில் வருத்தமாகதான் இருந்திருக்கிறது. ஆனால், பாடல் உலகம் முழுவதும் வெற்றி அடைந்தது.

• இது குறித்து பின்னாளில் அனிருத்திடம் கேட்டபோது, 'முதலில் வருத்தமாகதான் இருந்தது. ஆனால், அப்போதுதான் யூடியூப், சமூக வலைதளங்கள் இளைஞர்களிடையே கவனம் பெற்று வளர ஆரம்பித்த சமயம். ஒரே நாளில் இசைத்தட்டு வெளியிட நேரம் இல்லாததால் யூடியூப்பில் வெளியிட்டோம். பிறகு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போது அது வருத்தமாக இருந்தாலும், என் இசையை பலரிடம் கொண்டு போய் சேர்த்தது அதுதான்' என்றார் நெகிழ்ச்சியாக.

• நடிகர் விஜயுடன் முதன் முதலில் அனிருத் இணைந்த படம் 'கத்தி'. 'என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?' என இயக்குநர் முருகதாஸிடம் அனிருத் கேட்டபோது, 'நான் குடியிருக்கும் பகுதியில் குழந்தைகள், 'எதிர் நீச்சல்' பட பாட்டை குழுவாக பாடி கொண்டிருந்தார்கள். தியேட்டரில் இசையமைப்பாளர் என உன் பெயர் வரும்போது ரசிகர்கள் கை தட்டினார்கள். அதில் இருந்தே, உன் இசையில் ஏதோ இருக்கிறது என புரிந்தது. அதனால்தான் உன்னை இந்த படத்தில் தேர்ந்தெடுத்தேன்' என்றார் ஏ. ஆர். முருகதாஸ்.

• காதல் குறித்து கேட்டபோது, 'பொதுவாக என்னுடைய நாளையே பகலிலோ மாலையிலோதான் தொடங்குவேன். காலைதான் உறங்க செல்வேன். மேலும், ஒருவருடன் காதல் எனும்போது அவர்களுக்கான நேரம் தரவேண்டும். இதுபோன்று நிறைய இருக்கிறது. அதற்கான தகுதிகள் என்னிடம் குறைவாகவே இருக்கின்றன. அந்த பிரச்சனைகள் தவிர, என்னுடைய வேலையில் கவனம் செலுத்துவது நன்றாகவே இருக்கிறது' என்றார்.

• 90களில் பிறந்தவர் என்பதால், பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் என்பார். இசையமைப்பாளர் ஆனதும் இளையராஜா, எம்.எஸ்.வி. பாடல்களையும் அவர்களது முந்தைய பணிகளையும் தொடர்ந்து கவனித்து வருவதாக சொல்வார்.

• பாடகராக இதுவரை 130க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். இதில் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடியதும் தன் இசையில் பாடிய பாடல்களும் அடக்கம்.

• இசையமைப்பாளர், பாடகர் என வலம் வந்தவருக்கு சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்தன. ஆனால், தனக்கு நடிக்க வராது என மறுத்தவர் இப்போது வரை விளம்பர படங்கள், தனிப்பாடல்கள் என இதில் மட்டும் முகம் காட்டி வருகிறார்.

• பிடித்த நடிகைகளாக சுஷ்மிதா சென் மற்றும் இலியானாவை குறிப்பிடுவார்.

• நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் வெளியானது, சிம்புவுடைய பீப் பாடல் சர்ச்சை என பிரச்சனைகள் வந்தபோது அது குறித்து விளக்கம் எதுவும் அப்போது சொல்லவில்லை. பின்னாளில் இது குறித்து கேட்டபோது, 'தனிப்பட்ட முறையில் புகைப்படம் வெளியானபோது வருத்தமாகதான் இருந்தது. ஆனால், பிரச்சனைகள் எல்லாம் இரண்டு நாட்களுக்குதான். பின்பு மக்களுக்கு அடுத்த விஷயங்கள் மீது கவனம் சென்றுவிடும்' என்றார்.

• இவரது அப்பா ரவி ராகவேந்திரா ஒரு பிரபல நடிகர். 80களில் வெளிவந்த 'ஆனந்த கண்ணீர்', 'காதல் பரிசு' உள்ளிட்ட படங்களிலும், நாடகங்களிலும் நடித்திருக்கிறார். அம்மா லக்‌ஷ்மி ஒரு பரதநாட்டிய கலைஞர். அனிருத் அம்மாவின் செல்லம்.

• அனிருத் இசைக்குழுவில் அவருடன் பள்ளிக்காலங்களில் இருந்த இசை நண்பர்கள், கல்லூரி காலத்தில் இசைக் குழுவில் இருந்தவர்கள்தான் இப்போது வரையும் இருக்கிறார்கள்.

• பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தீவிரமான ரசிகர். தனது இசையில் அவரை பாட வைக்க வேண்டும் என ஆசைப்பட்டவருக்கு அந்த வாய்ப்பு 'தர்பார்' படத்தில் அமைந்தது.

• சினிமாவில் முதல் பாடலான 'கொலவெறி'யில் இருந்து இப்போது வெளியான 'டாக்டர்' படத்தின் 'செல்லம்மா' வரை அனிருத் பாடல்கள் பல உலக அளவில் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளன.

• 'டாக்டர்' படத்திற்கு பிறகு, 'டான்', 'பீஸ்ட்', 'இந்தியன்2', 'விக்ரம்', 'திருச்சிற்றம்பலம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என கிட்டத்தட்ட முன்னணி கதாநாயகர்களது எதிர்ப்பார்க்கப்பட்ட படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

• பாடகராக கிட்டத்தட்ட தற்போதுள்ள அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருக்கிறார் அனிருத். 'நான் இசையமைப்பாளராக இருப்பதால் மற்றவர்களின் இசையில் பாடக்கூடாது என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. நான் முதலில் பாடகரே கிடையாது. அப்படி இருந்தும் என்னை கூப்பிடுகிறார்கள் என்றால் அதற்கு உண்மையாக நான் இருக்க வேண்டும். மேலும், அவர்களுடன் வேலை செய்யும் போது அவர்களின் எனர்ஜியும் எனக்கு கிடைக்கிறது' என்கிறார் சிரித்து கொண்டே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :