You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடன்பிறப்பே: திரை விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோதிகா, சிஜா ரோஸ், கலையரசன், ஆடுகளம் நரேன், சூரி, நிவேதிதா சதீஷ், வேல ராமமூர்த்தி, நமோ நாராயணா; இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: வேல்ராஜ்; இயக்கம்: இரா சரவணன்.
பாசமலர், கிழக்குச் சீமையிலே பாணியில் அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையிலான உறவை தங்கையின் கணவர் பிரிப்பதால் வரும் துயரத்தைச் சொல்லும் ஒரு திரைப்படம்தான் இந்த 'உடன்பிறப்பே'.
வைரவனும் (சசிகுமார்) மாதங்கியும் (ஜோதிகா) அண்ணன் - தங்கை. ஆனால், வைரவன் எதற்கெடுத்தாலும் அடி-தடி பஞ்சாயத்து என இருப்பதால், அவருடனான உறவை முறித்துக் கொள்கிறார் மாதங்கியின் கணவர் (சமுத்திரக்கனி). இதனால் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கிறார் மாதங்கி. இதற்கு நடுவில் மாதங்கியின் மகளுக்கு வைரவனின் மகனை விட்டுவிட்டு வேறொருவரை நிச்சயம் செய்கிறார்கள். அண்ணனும் தங்கையும் சேர்ந்தார்களா என்பது மீதிக் கதை.
பொதுவாக அண்ணன் - தங்கை பாசக் கதைகளில் ஏன் இவ்வளவு பாசமாக இருக்கிறார்கள், அந்தப் பாசத்திற்கு அடிப்படையாக எது அமைந்தது என்பதெல்லாம் சொல்லப்படும். அப்போதுதான் பிரிவின் துயரத்தை பார்வையாளர்கள் உணர முடியும். ஆனால், இந்தப் படத்தில் அந்த மாதிரி ஏதும் இல்லை என்பதால், படம் ஆரம்பிப்பதிலிருந்தே எந்த ஒட்டுதலும் ஏற்பட மறுக்கிறது.
மேலும், படத்தின் முதல் ஒரு மணி நேரத்தில், படம் நடக்கும் ஊர், அந்தப் பகுதியினரின் ஜாதி, அவர்கள் பழக்கவழக்கங்களைக் காட்டுவதிலேயே பெரும் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார் இயக்குனர். அதில் சுவாரஸ்யமாக ஏதும் இல்லை என்பதால் ஆயாசமாக இருக்கிறது.
படத்தின் பிற்பாதியில் மெல்லமெல்ல பிரதான கதைக்குள் புகுந்ததும், அண்ணன் - தங்கை பாசத்திலிருந்து பழிவாங்கும் த்ரில்லரைப் போல மாறுகிறது படம். பிறகு ஒரு வழியாக தங்கை கணவர் தவறை உணர, படம் முடிவுக்கு வருகிறது.
இந்தப் படத்தின் பெரிய பிரச்சனை, முதல் பாதிதான். இதில் வரும் காட்சிகள், ஜோதிகாவின் நடிப்பு, பின்னணி இசை போன்ற எல்லாமே ரசிகர்களைச் சோதிக்கின்றன. பிற்பகுதியில் சற்று எட்டிப்பிடித்தாலும், முதல் பாதியால் ஏற்பட்ட காயம் ஆறாததால் படத்தை ரசிக்கவே முடியவில்லை.
ஜோதிகாவும் சசிகுமாரும் அண்ணன் - தங்கையாக காட்டப்படுகிறார்கள். படத்தில் அப்படிக் காட்டுகிறார்களே தவிர, படம் பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு உணர்வே ஏற்படுவதில்லை. சசிகுமாராவது பல காட்சிகளில் அந்த உறவையும் உணர்ச்சியையும் காட்ட முயல்கிறார். ஜோதிகா.. ம்ஹும்.
தங்கையின் கணவராக வரும் சமுத்திரக்கனி, படத்திற்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு நடித்திருக்கிறார். நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரி, கொஞ்சம் கொஞ்சமாக குணச்சித்திர நடிகராக மாற ஆரம்பித்திருக்கிறார். நல்லதுதான்.
படத்திற்கு இசை டி. இமான். ஆச்சரியமாக இருக்கிறது. படம் முழுக்க தொலைக்காட்சி நாடகங்களில் வரும் பின்னணி இசையே ஒலிக்கிறது. ஏதாவது ஒரு காட்சியிலாவது இசை இல்லாமல் இருக்காதா என காதுகள் ஏங்குகின்றன. 'அண்ணே.. யாருண்ணே மண்ணுல உன்னாட்டம்' பாடல் மட்டும் நன்றாக இருக்கிறது.
பிற செய்திகள்:
- ஒருபாலுறவு முதல் முஸ்லிம் வரை: விதிகளை உடைத்த 5 சூப்பர் ஹீரோக்கள்
- தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்களை முழுமையாகத் திறக்க அரசு அனுமதி
- அ.தி.மு.கவை முந்திய காங்கிரஸ், வி.சி.க - கைவிட்ட கிராமப்புற வாக்குகள்
- இந்து - முஸ்லிம் பிரச்னை, விவசாயிகள் மரணம்: உ.பி தேர்தலில் எதிரொலிப்பது எது?
- கோவிட் தொற்று சந்தேகத்தால் கொல்லப்பட்ட நாய்கள்: எஜமானர் கண்ணீர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்