You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்கன் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் - 30 பேர் பலி, 90 பேர் காயம்
ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா பிரிவினர் தொழுகையில் ஈடுபடும் பீபி ஃபாத்திமா மசூதியில் ஏற்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 90க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அங்கிருந்து வரும் படங்களில் சிதைந்த ஜன்னல் பாகங்கள் மற்றும் உடல்கள் தரையில் கிடப்பதை பார்க்க முடிகிறது. உள்ளூர் செய்தியாளரை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த தாக்குதலில் மூன்று தற்கொலை குண்டுதாரிகள் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.
மூவரில் ஒருவர் தமது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை மசூதிக்கு வெளியிலும் மற்ற இருவர் அதே நேரத்தில் உள்ளேயும் வெடிக்கச் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
மசூதிக்குள் தொழுகையை நிறைவு செய்த சமயத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்ததாக ஏஎஃபிபி செய்தி முகமையிடம் பேசிய அகமதுல்லா என்பவர் தெரிவித்தார்.
இரண்டு, மூன்று வெடிச்சம்பவங்கள் கேட்ட உடனேயே நாங்கள் தூக்கி வீசப்பட்டோம். பலர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுடன் சரிந்தனர் என்று அவர் கூறினார்.
வாரத்தில் எப்போது வெள்ளிக்கிழமையன்றி மசூதியில் தொழுகைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதுபோலவே இன்றும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். சம்பவ பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட 15 அவசரஊர்திகள் வரவழைக்கப்பட்டிருந்தன என்று ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த பகுதியை தாலிபன் வீரர்கள் சுற்றிவளைத்து தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை காப்பாற்ற ரத்த தானம் செய்யுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. காயம் அடைந்த வழிபாட்டாளர்கள் மிர்வைஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக உள்ளூர் மருத்துவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பிபிசி நிருபர் சிக்கர்ந்தர் கெர்மானி, இஸ்லாமி அரசு என தங்களைஅழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவின் உள்ளூர் கிளையான ஐஎஸ்-கே இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பதாகக் கூறப்படுகிறது என்று கூறுகிறார்.
இந்த ட்விட்டில் பதிவில் பகிரப்பட்டுள்ள காணொளியை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை.
நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அரசு தரப்பிலும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.
இரண்டாவது தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டூஸ் மாகாணத்தில் ஒரு ஷியா மசூதியை தற்கொலை குண்டுதாரி இலக்கு வைத்ததில் கிட்டத்தட்ட ஐம்பது பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு கந்தஹாரில் ஷியா மசூதி அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. முழு விவரங்களுக்கு தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
பிற செய்திகள்:
- உலகளவில் கணவர்களை காட்டிலும் மனைவிகள் குறைவாக பணம் ஈட்டுவது ஏன்? - வெளியான ஆய்வு
- கடைசி ஓவரில் கைமாறிய வெற்றி: கோப்பையை தவறவிட்ட டெல்லி அணி; சென்னையுடன் மோதும் கொல்கத்தா அணி
- எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்க இந்திய ரயில்வே செய்யும் செலவு எத்தனை கோடி?
- மேனகா காந்தி தொடர்ந்த சாதாரண வழக்கு, இந்தியாவில் ஒரு முக்கிய வழக்கானது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்