பிக்பாஸ் 5: கமல் நிகழ்ச்சியில் தாக்குப் பிடிக்குமா புதிய வரவுகள்? முக்கிய ஹைலைட்ஸ்

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தனது ஐந்தாவது சீசனை தொடங்கியிருக்கிறது. கமல்ஹாசனே ஐந்தாவது சீசனையும் தொகுத்து வழங்க, 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்பது இந்த சீசனின் 'டேக் லைன்'. இந்த முறை வீடு எப்படி இருக்கிறது? என்னென்ன நிகழ்ச்சியில் மாற்றங்கள்? யார் போட்டியாளர்கள் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் வீடு எப்படி வடிவமைத்து இருக்கிறார்கள், என்ன மாதிரியான கான்செப்ட்டில் இருக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கும். இந்த சீசனிலும் முதலில் பிக்பாஸ் வீட்டை சுற்றி காண்பித்து நிகழ்ச்சியை தொடங்கினார் கமல்ஹாசன்.

முந்தைய நான்காவது சீசன் தமிழர் பண்பாட்டை அடிப்படையாக கொண்டு உள்ளே பல தீம்கள், ஓவியங்கள் என வண்ணமயமாக அசத்தி இருந்தார்கள்.

இந்த முறை பிக்பாஸ் குழு வீட்டை வடிவமைக்க கையில் எடுத்திருப்பது 'பஞ்சபூதங்கள்' கான்செப்ட். ஐந்தாவது சீசன் என்பதால் இந்த கான்செப்ட் என்பதையும் கமல் குறிப்பிட்டார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போதே ஐந்தாவது சீசன் என்பதை குறிக்கும் வகையில் '5' என்ற எண்ணோடு நுழைவாயில் வரவேற்கிறது.

இந்த சீசனிலும் நீச்சல் குளம் இல்லை. அதற்கு பதிலாக அந்த இடத்தில் ஜெயில் அமைத்து இருக்கிறார்கள். மேலும், ஒட்டுமொத்த பிக்பாஸ் தமிழ் சீசன்களிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர் போட்டியாளராக உள்ளே நுழைகிறார். அவருக்காகவே பிங்க் நிற படுக்கை, நாற்காலி அமைத்து இருப்பதாக சொல்கிறார்கள். இந்த முறை போட்டியாளர்கள் பிக்பாஸ்ஸிடம் தனியாக பேசும் 'Confession' அறையையும் வெளிச்சமாக இருக்கைக்கு பின்னால் இறக்கைகளோடு அமைத்து இருக்கிறார்கள்.

அதிக அளவில் பச்சை நிறமும், ஐந்தாவது சீசன் என்பதை குறிக்கும் வகையில் 5 என்ற எண் வீடு முழுவதும் அதிகம் பார்க்க முடிகிறது. அதேபோல, கடந்த சீசன் தாமதமாக தொடங்கப்பட்டதால் சென்னை மழையில் பிக்பாஸ் வீடும் போட்டியாளர்கள் மாட்டி கொண்டார்கள். போட்டியாளர்கள் பாதுகாப்பாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு, வீட்டிற்குள் நுழைந்த நீரும் அப்புறப்படுத்தப்பட்ட பின்புதான் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியது. இந்த சீசனும் தாமதாக தொடங்கியிருப்பதால், போன முறை போல மழை வெள்ள பிரச்னைகளை சமாளிக்கும் வகையில் வடிநீர் தொட்டி முன்னெச்சரிக்கையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சீசனில் கொரோனா தொற்று பயம் காரணமாக வீடியோ வாயிலாக பார்வையாளர்கள் இருந்தார்கள். இந்த முறை குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களோடு சமூக இடைவெளியோடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

போட்டியாளர்கள் யார் யார்?

வழக்கமாக பிக்பாஸ்ஸில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த முறை 18 போட்டியாளர்கள். நடுத்தர வயதை சேர்ந்தவர்கள், பாடகர்கள், வெளிநாட்டில் இருக்கும் மாடல்கள், விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்கள், மற்ற முன்னணி தொலைக்காட்சி சேனலில் இருக்கும் பிரபலமான நபர் என பிக்பாஸ் போட்டியாளர்களின் தேர்வே கலவையாக சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வகையில் இந்த சீசனிலும் மேலே சொன்ன தனது வழக்கமான தேர்வையே பின்பற்றி இருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி குழு.

'கானா' பாடகி இசைவாணி

அந்த வகையில், இந்த சீசனில் சென்னையை சேர்ந்த 25 வயதான கானா இசைப்பாடகியான இசைவாணி, முதல் போட்டியாளராக உள்ளே நுழைகிறார். இவரது பாடலோடுதான் போட்டியாளர்கள் அறிமுகம் தொடங்கியது. இயக்குநர் ரஞ்சித்தின் 'The Casteless Collective' இசைக்குழுவை சேர்ந்தவர் இசைவாணி.

சாதி ஒழிப்பு குறித்து கானா பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்தவர். கடந்த வருடம் பிபிசியின் 'BBC 100 Women Awards'-ல் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராஜு ஜெயமோகன்

அடுத்த போட்டியாளர், உதவி இயக்குநர், பல குரல் கலைஞர், சின்னத்திரை நடிகர் ராஜு ஜெயமோகன்.

இவர் கடந்த நான்கு சீசன்களாக பிக்பாஸ் போட்டியாளராக வர முயற்சி செய்திருக்கிறார். இந்த சீசனில் அது வசமாகி இருக்கிறது. விஜய் டிவியில் 'சரவணன் மீனாட்சி', 'நாம் இருவர் நமக்கு இருவர்' உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமானார். மேலும் 'நட்புனா என்னான்னு தெரியுமா?' உள்ளிட்ட சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

ஆடை வடிவமைப்பாளர், மாடல் மதுமிதா

கடந்த முறை போட்டியாளர்கள் உள்ளே நுழையும் போது செடி கொடுத்து அனுப்பினார்கள். அதை அவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் வரை அது அவர்கள் பொறுப்பு. இந்த முறை அப்படி இல்லாமல், சாக்லேட், இனிப்பு அடங்கிய கண்ணாடி கூஜாவை கொடுத்து அனுப்பினார்கள்.

மூன்றாவதாக இலங்கையில் பிறந்து தற்போது ஜெர்மனியில் வசித்து வரும் மாடலும், ஆடை வடிவமைப்பாளருமான மதுமிதாவும் போட்டியாளராக உள்ளார்.

யூடியூபர் அபிஷேக் ராஜா

அடுத்து சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர், அபிஷேக் ராஜாவையும் தேர்வு செய்துள்ளது பிக்பாஸ் குழு.

மாடல் நமீதா

பிக்பாஸ் சீசனிலே முதல் முறையாக என குறிப்பிடாமல் இது ஒரு முக்கிய நிகழ்வாக பார்ப்பதாக மூன்றாம் பாலினத்தவரான நமீதாவை அடுத்த போட்டியாளராக அறிமுகபடுத்தினார் கமல்ஹாசன்.

சென்னையை சேர்ந்தவரான நமீதா, தற்போது மாடலிங் செய்து வருகிறார்.

தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே:

விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான தொகுப்பாளர் பிரியங்கா இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுடன் சேர்ந்து தொகுத்து வழங்க வேண்டும் என்ற தனது ஆசையை பிரியங்கா மேடையில் நிறைவேற்றிக் கொண்டார். தனது கலகலப்பான பேச்சுக்கு போ் போன பிரியங்கா, பிக்பாஸ் வீட்டிற்குள் அதே கலகலப்பை எடுத்து வருவாரா அல்லது அவரது இன்னொரு முகம் வெளிப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நடிகர் அபிநய்

அடுத்த போட்டியாளர், 'முக்கியமான அறிமுகம் எனக்கு' என ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரன் அபிநயை அறிமுகப்படுத்தினார் கமல்.

தனது முதல் படத்தில் ஜெமினி கணேசன் - சாவித்ரியை சந்தித்தது, அவர்களுக்கு பிள்ளையாக போக வேண்டும் என வீட்டில் கேட்டது என பழைய நினைவுகளை நெகிழ்ச்சியாக மேடையில் பகிர்ந்து கொண்டார் கமல். விவசாயத்தில் ஆர்வம் கொண்ட அபிநய் 'இராமானுஜம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பவனி ரெட்டி:

இந்த முறை போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மைக்கில் அவர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டு இருந்தது. அடுத்த போட்டியாளர் சின்னத்திரை நடிகை பவனி ரெட்டி.

இவரும் விஜய் டிவியின் முகங்களில் ஒன்று. 'சின்னத்தம்பி' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு

ஒவ்வொரு சீசனிலும் நாட்டுப்புற பாடகர் ஒருவர் நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெறுவார்கள். அந்த வரிசையில் இந்த சீசனில்.இடம் பெற்றிருப்பவர் பாடகி சின்னப்பொண்ணு.

தனிப்பாடல்கள், சினிமா பாடல்கள் என இவர் பாடிய பல பாடல்கள் பிரபலம். பிக்பாஸ் மேடை மூலம் நாட்டுப்புற கலைக்கும், கலைஞர்களுக்கும் மேலும் வெளிச்சம் கிடைக்கும் என்பதை எதிர்ப்பார்த்து வந்ததாக கூறினார் சின்னப்பொண்ணு.

மாடல் நாடியா சங்க்

மலேசியாவை சேர்ந்த மாடலான நாடியா சங்க் அடுத்த போட்டியாளர்.

இவர் டிக்டாக் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானவர்.

நடிகர் வருண்

இந்த முறை அதிகம் பிரபலமில்லாத பல முகங்களை போட்டியாளர்களாக தேர்வு செய்திருக்கிறது பிக்பாஸ் குழு. அந்த வகையில் அடுத்த போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் நடிகர் வருண்.

'பப்பி', கெளதம் மேனனின் 'ஜோஷ்வா' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொகுப்பாளர், நடிகர் இமான்

தனது தனித்துவமான பேச்சு வழக்குக்கு புகழ் பெற்றவர் தொகுப்பாளரும், நடிகருமான இமான் அண்ணாச்சி.

குழந்தைகள் நிகழ்ச்சி மூலம் இவர் பிரபலமானவர்.

மாடல் சுருதி

அடுத்த போட்டியாளரும் மாடல்தான். சென்னையை சேர்ந்த சுருதி மாடலிங் என்ற முகம் மட்டும் இல்லாமல் கூடைப்பந்தாட்ட வீராங்கனை, பொறியாளர் என்ற மற்ற முகங்களும் உண்டு.

சமீபத்தில் கடவுள் போல அலங்காரம் செய்து இவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

மாடல் அக்‌ஷரா ரெட்டி

சுருதியை அடுத்து வந்தார் அக்‌ஷரா. இவரும் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு கன்னட படத்திலும் நடித்துள்ளாராம்.

சுருதி, அக்‌ஷரா இருவரையும் மேடையில் அடுத்தடுத்து அழைத்து ஒரே சமயத்தில் வீட்டிற்குள் அனுப்பினார் கமல்.

தமிழ் ராப் பாடகி, ஐக்கி பெர்ரி

இசைவாணி, சின்னப்பொண்ணை தொடர்ந்து அடுத்த இசை வரவு ஐக்கி பெர்ரி. தஞ்சையை சேர்ந்த ஐக்கி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் மருத்துவரும் கூட.

நாடகக்கலைஞர், தாமரை செல்வி

நாடகக்கலைஞர் தாமரை செல்வி சிறிய நாடகம் மூலம் மேடையில் அறிமுகமானார். 22 வருடங்களாக மேடை நாடகத்தில் இவர் இருக்கிறார்.

'மருதநாயகம்' படம் எடுக்க முக்கிய காரணமே ஒரு நாட்டுப்பாடல்தான் என நாட்டுப்புற கலை, பாடல் குறித்து பேசினார் கமல்.

நடிகர் சிபி சரண்

சமீபத்தில் 'மாஸ்டர்' படத்தில் நடித்தவரான சிபி அடுத்த போட்டியாளராக வந்தார்.

தொழிலதிபர் நிரூப்

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் நிரூப் 18-வது போட்டியாளராக அறிமுகமானார்.

படங்களில் நடிக்க வேண்டும் என்பது விருப்பம் எனவும் அதற்கான சரியான தளமாக பிக்பாஸ் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஐந்தாவது சீசனில் நிறைய புதுமுகங்கள். யார் யார் எப்படி, சூழ்நிலை எப்படி மாற்றுகிறது, பிக்பாஸ் விளையாட்டில் தாக்கு பிடித்து இறுதியில் யார் வெற்றியாளர் என்பதை எல்லாம் இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :