No Time To Die திரை விமர்சனம்

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர்கள்: டேனியல் க்ரெய்க், ராமி மாலெக், லியா செய்து, லஸானா லிஞ்ச், பென் விஷா, நவோமி ஹாரிஸ், ஜெஃப்ரி ரைட், கிரிஸ்டோப் வால்ட்ஸ், ரால்ஃப் ஃபியென்னஸ்; இசை: ஹான்ஸ் ஜிம்மெர்; இயக்கம்: கேரி ஜோஜி ஃபுகுனகா.

டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் கடைசித் திரைப்படம். டேனியல் க்ரெய்க் முதன்முதலில் Casino Royale படத்தில் ஜேம்ஸாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டபோது, பலரும் 'அது ஒரு பொருத்தமற்ற தேர்வு' என விமர்சித்தார்கள். ஆனால், ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் மிகப் பொருத்தமாக இருந்தவர்களில் ஒருவர் என்ற சிறப்புடன் விலகிச் செல்கிறார் டேனியல் க்ரெய்க்.

ஜேம்ஸ் பாண்ட் வரிசை படங்களில் முந்தைய இரண்டு படங்களான Skyfall, Spectre ஆகிய படங்களை ஸாம் மெண்டஸ் இயக்கியிருந்தார். ஆனால், அந்தப் படங்கள் வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்ததால், அதிதீவிர ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள்கூட பெரிதாக உற்சாகமடையவில்லை. இந்தப் படத்தை கேரி ஜோஜி ஃபுகுனகா இயக்கியிருக்கிறார்.

இத்தாலியின் மதேராவில் ஜேம்ஸ் பாண்ட் தனது காதலி மெடலினுடன் (Spectreல் பாண்டிற்கு உதவும் பாத்திரத்தில் வருவார்) இருக்கும்போது, திடீரென ஸ்பெக்டர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவரைத் தாக்குகிறார்கள். தான் இருக்குமிடத்தை மெடலின் காட்டிக் கொடுத்ததால்தான் அந்தத் தாக்குதல் நடந்ததாகக் கருதும் பாண்ட் அவரைப் பிரிகிறார். இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு, எம்ஐ6ன் ஆய்வகத்தில் 'புரொஜெக்ட் ஹெர்குலிஸ்' என்ற திட்டத்தை செயல்படுத்திவரும் அப்ருஷேவ் என்ற விஞ்ஞானி கடத்தப்படுகிறார். அந்தத் தருணத்தில் ஓய்வில் இருக்கும் ஜேம்ஸ் பாண்டை சிஐஏ தொடர்பு கொண்டு, அந்த விஞ்ஞானியை மீட்க உதவ முடியுமா எனக் கேட்கிறது.

அதே நாளில் எம்ஐ6ன் புதிய உளவாளி நோமியும் ஜேம்ஸை தொடர்பு கொண்டு பிரிட்டனுக்கு உதவும்படி கேட்கிறார். இதற்காக உளவுத் துறையின் தலைவரை பாண்ட் சந்திக்கும்போதுதான், இந்த 'புராஜெக்ட் ஹெர்குலிஸ்' என்பதே உளவுத் துறையின் திட்டம் என்பது பாண்டிற்குத் தெரிகிறது.

இதுபோக, ஜேம்ஸ் பாண்ட், ஸ்பெக்டர், மெடலின், புராஜெக்ட் ஹெர்குலிஸ் ஆகிய எல்லாவற்றுடனும் தொடர்புடைய பயங்கர வில்லன் வேறு இருக்கிறான்.

'புராஜெக்ட் ஹெர்குலிஸ்' என்றால் என்ன, விஞ்ஞானி அப்ருஷைவை கடத்தி, என்ன திட்டத்தைத் தீட்டியிருக்கிறார்கள், இதில் ஸ்பெக்டர் அமைப்புக்கு என்ன தொடர்பு, ஜேம்ஸின் முன்னாள் காதலி இதில் எப்படி சம்பந்தப்படுகிறார், வில்லனின் நோக்கமென்ன, புராஜெக்ட் ஹெர்குலிஸால் வரும் ஆபத்திலிருந்து உலகத்தை காப்பாற்றுகிறாரா ஜேம்ஸ் பாண்ட் என்பதெல்லாம் மீதிக் கதை.

முந்தைய இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படங்களால் சோர்ந்து போயிருந்த ரசிகர்களுக்கு, இந்தப் படம் ஒரு பெரிய விருந்துதான். வழக்கமான துரத்தல் சாகசத்துடன் துவங்கும் படம் தீவிரமான சதி, தேடல், கொலைகளுக்குப் பிறகு, இரண்டாம் உலகப்போர் காலத்து பிரம்மாண்ட கட்டடத்தில் முடிகிறது. 70களிலும் 80களிலும் வந்த பாண்ட் படங்களை ரசித்தவர்களுக்கு, படத்தின் பிற்பகுதி பெரிதும் உற்சாகமூட்டும்.

முந்தைய படத்தின் தொடர்ச்சியாக ஸ்பெக்டர் அமைப்பு இந்தப் படத்திலும் தலைகாட்டுகிறது என்றாலும் அதனைப் பார்க்காவிட்டாலும் இந்தப் படத்தை ரசிக்க முடியும். உயிரி ஆயுதம், சென்டிமென்ட் என்று பாண்ட் படங்களைப் புதியதொரு கட்டத்திற்கு இயக்குனர் கேரி நகர்த்தியிருந்தாலும் ஜேம்ஸ் பாண்டிற்கே உரிய பல்வேறு ஆயுதங்களைக் கொண்ட கார், விசித்திரமான கடிகாரம் ஆகியவை இந்தப் படத்திலும் உண்டு.

என்னதான் பாண்ட் ரசிகர்களாக இருந்தாலும் படத்தின் இறுதியில் வரும் துப்பாக்கிச் சண்டைக் காட்சிகள் சற்று அலுப்பை ஏற்படுத்துகின்றன. மாறாக, கார் சேஸிங் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இன்னொரு அட்டகாசம், பின்னணி இசை. சூப்பர் ஹீரோ படங்களுக்கு இசையமைத்த ஹான்ஸ் ஜிம்மெர், பாண்ட் படங்களுக்கே உரிய தீம் இசையை பல்வேறு பாணிகளில் ஒலிக்கச் செய்கிறார்.

ஜேம்ஸ் பாண்ட் ஓய்வில் இருக்கும்போது புதிய 007ஆக நோமி என்ற பாத்திரம் அறிமுகமாகிறது. டேனியல் க்ரெய்கிற்கு இது கடைசி பாண்ட் படம் என்பதால், புதிய 007 ஒரு பெண்ணாக இருக்கக்கூடுமா?

No Time to Dieஐப் பொறுத்தவரை, டேனியல் க்ரெய்கிற்கு பிரியாவிடை கொடுக்க பொருத்தமான படம். ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களுக்கும் ஒரு விருந்து.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :