You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீமானின் தாயார், சுப. வீரபாண்டியன், பத்திரிகையாளர்கள் குறித்து பாஜகவின் ஹெச். ராஜா சர்ச்சைப் பேச்சு
பத்திரிகையாளர்களை 'Presstitutes' என்றும் நாம் தமிழர் கட்சியின்ஒருங்கிணப்பாளர் சீமானின் தாயார் குறித்தும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.
மோகன் என்பவர் இயக்கிய 'ருத்ரதாண்டவம்' படத்தின் சிறப்புக் காட்சி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஹெச். ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி, சில இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது. அந்தச் சிறப்புக் காட்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் ஹெச். ராஜா.
ருத்ரதாண்டவம் படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக கூறிய ஹெச். ராஜா அதற்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டார்.
அப்போது செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த அவர் திடீரென ஆவேசமடைந்தார். "ஹிந்து இல்லாவிட்டால் தமிழ் எங்கிருந்து வந்தது? ஹிந்து இல்லாவிட்டால் தமிழ் ஏது?" என குரல் எழுப்பினார். மேலும், "இதுக்குதான் சொல்றேன், you all media people Presstitues. தமிழ் வேற இந்து வேறன்னு பேசக்கூடிய அளவுக்கு நீங்க வேணும்னே மதமாற்றத்திற்கு துணை போக வேண்டாம்னு நான் உங்களைக் கேட்டுக்கிறேன். Don't become addict to conversion" என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆவேசப்பட்டார்.
அப்போது ஒரு செய்தியாளர், சீமான் கூட இதே முன்வைக்கிறார் என்றதும், உடனே ஹெச். ராஜா, "Who is Seeman? (யார் சீமான்) சீமானோட அம்மா முதல்ல தமிழச்சியா? சொல்லுங்க சார், அன்னம்மா தமிழா? இல்லை. She is a malayali (அவர் ஒரு மலையாளி). அட என்னை பிஹாரிங்கிறான் ஒரு முட்டாள். அதனால், ஊடகங்களில் இனி 'தமிழ் இந்து' என்றெல்லாம் பேசாதீர்கள்" என்றார்.
அடுத்ததாக ஆரியர் வருகை குறித்து ஒரு செய்தியாளர் கூறியதும், "சுப. வீரபாண்டியனின் மூளை dust binஆ போச்சுதுன்னா, ஆரியன் இன்வேஷனா? அதுக்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கு? அதனால், Don't spread lies. சுப வீரபாண்டியனே அறிவாலயம் வாசல்ல உட்கார்ந்திருக்க பிச்சைக்காரன்" என சுப. வீரபாண்டியனையும் வசைபாடினார்.
இந்த சர்ச்சைக்குரிய பேச்சின் வீடியோவை, "Who is சீமான்? நிரூபரை வச்சு செய்த ஹெச்.ராஜா" என்று தலைப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்திருக்கிறார்.
எச். ராஜாவின் இந்தப் பேச்சுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
"செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிகையாளர்களையும் பத்திரிகை நிறுவனங்களையும் தரம் தாழ்ந்து மிகக்கீழ்தரமாக பேசியுள்ள @HRajaBJP -வை வன்மையாக கண்டிக்கிறோம். அனைத்து ஊடக நிறுவனங்களும் @HRajaBJP -வை புறக்கணிக்க வேண்டும் மற்றும் அவர்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். "
"செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிகையாளர்களையும் பத்திரிகை நிறுவனங்களையும் தரம்தாழ்ந்து மிகக்கீழ்தரமாக பேசியுள்ள எச். ராஜாவை வன்மையாக கண்டிக்கிறோம். அனைத்து ஊடக நிறுவனங்களும் எச். ராஜாவை புறக்கணிக்க வேண்டும் மற்றும் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த அமைப்பு கோரியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசுவும் இதைக் கண்டித்துள்ளார். "ஊடகவியலாளர்களை இழிவுபடுத்தும் ரவுடி எச். ராஜா எனும் என்னும் நபரை குண்டர் சட்டத்தில் தளைப்படுத்த வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் குறித்துப் பேசியதற்கு, அக்கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்வினை ஆற்றியுள்ளனர்.
"பீகாரில் இருந்து பிழைக்க வந்த ஒத்தவீட்டு ஆரியன் எச்சை ராஜா மண்ணின் மகன் சீமானை பார்த்து யாரென கேட்கிறார் வைகை ஆற்றில் ஆயிரம் ஆரியர்களை தலைகளை அறுத்துப் போட்டு ஆரியப் படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியனின் வழிவந்தவர் சீமான்," என்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் பதிவிட்டுள்ளார்.
ஆனால், ஹெச்.ராஜா ஊடகங்கள் குறித்து இதுபோல பேசுவது முதல் முறையல்ல. கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை, "ஆன்டி - இந்தியன்", "உங்கள் வரிப் பணத்தை நான் கொடுத்து விடுகிறேன். நீங்கள் மத்திய அரசு குறித்து பேசக்கூடாது" என்றெல்லாம் செய்தியாளர் சந்திப்புகளில் அவர் பேசியுள்ளார்.
பிற செய்திகள்:
- காசு போதவில்லை: கடன் வாங்கும் இந்திய அரசு - எத்தனை லட்சம் கோடி ரூபாய் தெரியுமா?
- SRH vs RR: வீணாய் போனது சஞ்சு சாம்சனின் அதிரடி; ராஜஸ்தானை வீழ்த்திய ஹைதராபாத்
- கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் மனிதர்களை முந்தும் எலி - மிஸ்டர் கோக்ஸ்
- முகச் சவரம் செய்யத் தடை: ஆப்கானிஸ்தான் சலூன்களுக்கு தாலிபன் உத்தரவு
- அசாம் துப்பாக்கிச் சூடு: 'என் மகன் நெஞ்சை துளைத்த தோட்டா' - கண்ணீரில் குடும்பங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்