You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆரியர்கள், திராவிடர்கள், சிந்துவெளி நாகரிகம்: இந்திய முற்கால வரலாற்றை திருத்தி எழுதும் மரபணு ஆய்வு
- எழுதியவர், டோனி ஜோசப்
- பதவி, எழுத்தாளர்
(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.)
பழங்கால மரபணு ஆராய்ச்சியின் முடிவு ஒன்று இந்திய முற்கால வரலாற்றில் ஒரு புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது. இந்து தேசியவாத கருத்தியலை அந்த முடிவு மறுத்தளிக்கிறது என்று எழுதுகிறார் டோனி ஜோசப்.
இந்தியர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்து இந்து நிலப்பரப்பில் குடிபுகுந்தார்கள்? என்பது ஒரு பெருங்கேள்வியாக இருக்கிறது.
கடந்து சில ஆண்டுகளாக இது தொடர்பான வாதங்கள் உஷ்ணமடைந்து வருகின்றன.
வலதுசாரி கருத்தியல்
"இந்திய நாகரிகம் என்பது ஆரியர்களால் உருவாக்கப்பட்டது. கால்நடை மேய்க்கும், குதிரை ஓட்டும் அந்த நாடோடி இனக்குழு இந்திய நாகரிகத்தை கட்டி எழுப்பியது. அவர்கள்தான் வேதங்களை எழுதினர்." - இது ஆரியர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் வலதுசாரிகளின் நம்பிக்கை.
தங்கள் பிறப்பிடம் இந்தியாதான் என்பது ஆரியர்கள் வாதம். இங்கிருந்தே ஆசியா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு பரவினோம். இப்போது இந்தியா மற்றும் ஐரோப்பாவில் பேசப்படும் இந்தோ - ஐரோப்பிய மொழிகளை உருவாக்கியது தாங்கள்தான் என்கிறார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மத்திய ஐரோப்பாவை சேர்ந்த இனவரவியலாளர்கள் மற்றும் ஹிட்லர், ஆரிய இனம் மேலான இனம் என்று கருதினார்கள். நார்டிக் மரபை சேர்ந்த இனம் அது என்றார்கள்.
நான் (டோனி ஜோஷப்) இந்த கட்டுரையில் இந்து வலதுசாரிகள் போலவோ அல்லது ஹிட்லர் போலவோ, இனத்தை சுட்ட அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. இந்தோ - ஐரோப்பிய மொழிகளை பேசுபவர்களை குறிப்பிடவே அந்த பதத்தை பயன்படுத்தி உள்ளேன்.
ஆரியர்களின் வருகை
இந்தியாவின் முந்தைய நாகரிகம், அதாவது வடமேற்கில் இருந்த சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தபின் ஆரியர்கள் இந்த பகுதிக்கு வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த சிந்துவெளி நாகரிகமானது, எகிப்திய மற்றும் மெசோபோடாமிய நாகரிக காலகட்டத்தை சேர்ந்தது.
ஆனால், ஹரப்பன் (சிந்துவெளி) நாகரிகமும் ஆரிய நாகரிகம்தான், வேத நாகரிகம்தான் என்கிறார்கள் இந்து வலதுசாரிகள்.
இந்த இரண்டு குழுக்களுக்குமிடையே கருத்து மோதல்கள் அதிகரித்தப்படியே வருகிறது. குறிப்பாக 2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபின் இரண்டு தரப்பிற்கு இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்த பழமையான மரபணு ஆராய்ச்சியின் முடிவானது மக்கள் எங்கிருந்து எங்கு குடிபுகுந்தார்கள் என்ற விவகாரத்தில் புரிதலை வழங்குகிறது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் ஆய்வு முடிவானது 2018 மார்ச்சில் வெளியானது. அவருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, , வரலாறு, தொல்லியல், மானுடவியல், மரபணுவில் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றினார்கள்.
அந்த ஆய்வானது கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது.
முதல் குடிப்பெயர்வானது தென்மேற்கு இரான் பகுதியில் உள்ள ஜக்ரோஸிலிருந்து நடந்திருக்கிறது. அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள்.
சிந்துவெளி நாகரிகம்
இந்த குடிபெயர்வானது 7000 மற்றும் 3000 ஆண்டுகளுக்கு (இயேசு பிறப்பதற்கு முன்பு) இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது.
இந்த கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள்.
இரண்டாவது குடிபெயர்வு கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அதாவது ஆரியர்கள் வந்திருக்கிறார்கள். இது இன்றைய கஜகஸ்தான் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான அவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும், வேத பண்பாட்டையும் உருவாக்கியது அவர்களே.
பீட்சாவும், இந்தியர்களும்
எனது புத்தகத்தில் எழுதியது போல, இந்த மக்களை புரிந்து கொள்ள நமக்கு பீட்சாவுடம் ஒப்பிடுவது உதவதலாம்.
இந்திய மக்களை ஒரு பீட்சாவாக கருதிக் கொள்ளுங்கள். முதல்முதலாக இந்த நிலபரப்பிற்கு வந்தவர்கள் பீட்சாவின் அடிபாகத்தை உருவாக்கினார்கள். அந்த அடிபாகமானது சில இடங்களில் மெல்லிதாகவும், சில இடங்களில் தடிமனாகவும் இருந்தது.
இதன் மேல்தான் பீட்சாவின் பிற பகுதிகள் அமைக்கப்பட்டன. அதாவது இந்திய மக்களின் மரபணுவை சோதனை செய்தால், அது 50 முதல் 65 சதவீதம் முதல் முதலாக இந்தியாவிற்குள் குடிப்புகுந்த மரபணுவை ஒத்து இருக்கிறது.
பீட்சாவின் மேற்பகுதியில் உள்ள சாஸை போன்றவர்கள் ஹரப்பன் (சிந்து சமவெளி) நாகரிக மக்கள். அதன்மீது உள்ள வெண்ணெய்தான் பிற்காலத்தில் இந்தியாவிற்குள் குடிபுகுந்த ஆரியர்கள், திபெத்தோ-பர்மன் மக்கள் மற்றும் ஆஸ்ட்ரோ-ஆசிய மக்கள்.
இந்து வலதுசாரிகள்
இந்து வலதுசாரிகளுக்கு இந்த தகவலானது சுவையற்ற ஒன்று.
அவர்கள் பள்ளி பாடப் புத்தகத்தின் உள்ளடக்கத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆரியர்கள் வெளியிலிருந்து குடிபெயரவில்லை என்கிறார்கள்.
ஆரியர்கள் வருகை கோட்பாட்டை முன் வைக்கும் முன்னணி வரலாற்று ஆய்வாளர்களை ட்வீட்டரில் அவர்கள் தாக்குகிறார்கள்.
இந்திய ஆளும் வர்க்கமும் வேத பண்பாட்டை விதந்தோதுவதாகவே உள்ளது. இந்திய மனிதவள இணை அமைச்சர் சத்தியபால் சிங், "வேத கல்விதான் நம் குழந்தைகளுக்கு சிறந்தது" என்ற தொனியில் பேசி இருந்தார்.
பல்வேறுதரப்பட்ட மக்கள் குழு கலப்பது தங்களின் இன தூய்மைக்கு ஊறு விளைப்பதாக கருதுகிறார்கள்.
ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதற்கு மற்றொரு காரணம், அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று கூறும் முகலாயர்கள் போல அவர்களும் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பது போலாகிவிடும் என்பதுதான்.
சரஸ்வதி நாகரிகம்
வெறும் தத்துவ விவாதங்களாக மட்டும் முன்னெடுப்பதை இந்து வலதுசாரிகள் விரும்பவில்லை.
ஹரியானாவை ஆளும் பா.ஜ. க அரசு ஹரப்பன் நாகரிகத்தை சரஸ்வதி ஆறு நாகரிகமென பெயர் மாற்ற கோரி இருக்கிறது. வேதத்தில் சரஸ்வதி ஆறு என்ற ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளதே அதற்கு காரணம்.
இந்தப் புதிய ஆய்வின் முடிவுகள் இந்திய வலதுசாரிகளுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இதன் முடிவுகளும், இதில் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரங்களும் பொய் என்று பேராசிரியர் டேவிட் ரெய்ச்-ஐ தாக்கும் ட்விட்டர் பதிவு ஒன்றில் கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி.
எது என்னவாக இருந்தாலும், இந்திய மக்கள் தங்கள் நாகரிகத்தை பல இனம் மற்றும் வரலாற்றிலிருந்து உருவாக்கினார்கள் என்பதே நிஜம். இந்திய நாகரிகத்தின் செழுமையின் உச்சம், அது எல்லாவற்றையுன் உள்ளடக்கிய போதுதான் நிகழ்ந்தது.
அதாவது இந்திய மரபியல் அடிப்படையின் மையமாக 'வேற்றுமையில் ஒற்றுமையே' இருந்துள்ளது என்பதே உண்மை.
Early Indians: The Story of Our Ancestors and Where We Came From நூலின் ஆசிரியர் டோனி ஜோசப்.
பிற செய்திகள்:
- இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த 'ரகசிய வானொலி நிலையம்'
- 'விரைவில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து, காஷ்மீரில் தேர்தல்' - நரேந்திர மோதியின் சுதந்திர தின உரையின் முக்கிய தகவல்கள்
- பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதா?
- "மதுக்கடைக்கு அனுமதி வழங்கிய அரசு, சதுர்த்தி விழாவுக்கு தடைவிதிப்பது ஏன்?" - எச்.ராஜா கேள்வி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: