You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் மனிதர்களை முந்தும் எலி - மிஸ்டர் கோக்ஸ்
பலரைப் போலவே மிஸ்டர் கோக்ஸும் கிரிப்டோகரன்சி என்ற வணிகக் கடலுக்குள் குதித்துவிட்டார், என்றாவது ஒருநாள் அது தன்னை பணக்காரர் ஆக்கிவிடும் என்ற நம்பிக்கையுடன்.
பலரைப் போலவே என்று சொன்னோம் அல்லவா, ஆனால் இரண்டு விஷயத்தில் அவர் மற்றவர்களை விட மாறுபட்டவர். ஒன்று சாதாரண மனிதர்களைப் போல அவர் குறைந்த அளவு லாபம் ஈட்டுவதில்லை. பல தொழில்முறை வர்த்தகர்கள், நிதியங்கள் போன்றவற்றை எல்லாம் அவர் தோற்கடித்துவிட்டார்.
இரண்டாவது வேறுபாடு, அவர் மனிதர் அல்லர். அவர் ஒரு எலி. வெள்ளெலி.
மிஸ்டர் கோக்ஸுக்கு அலுவலகம் உண்டு. ஆனால் அது அவரது கூண்டுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர் அலுவலகத்துக்குள் வந்துவிட்டார் என்றால் ட்விட்டரில் அவரைப் பின் தொடருவோருக்கு தகவல் வந்துவிடும். ட்விட்ச்(Twitch) தளத்தில் நேரலை தொடங்கிவிடும். மிஸ்டர் கோக்ஸ் தனது வர்த்தகத்தைத் தொடங்குவார்.
அந்த அலுவலகத்தில் ஒரு சக்கரம் இருக்கிறது. அதில் ஓடுவதன் மூலம் எந்த கிரிப்டோ கரன்சியை வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதை அவர் தேர்வு செய்கிறார். சரி, அதை வாங்க வேண்டுமா, அல்லது விற்க வேண்டுமா என்பதை எப்படித் தீர்மானிப்பது. அதற்கும் அவரது அலுவலகத்துக்குள்ளேயே வசதி இருக்கிறது.
இரண்டு சுரங்க வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று வாங்குவதற்கு, மற்றொன்று விற்பதற்கு. ஒவ்வொரு முறையும் சுரங்கப் பாதைக்குள் ஓடும்போது, அதற்கேற்ப அங்கு இணைக்கப்பட்டிருக்கும் மின்னணுக் கம்பிகள் வர்த்தககத்தை நிறைவு செய்கின்றன.
இந்த எலி முதலீட்டாளரின் பின்னாள் இருக்கும் மூளைகள், இரு ஜெர்மானிய இளைஞர்களுக்குச் சொந்தமானவை.
"இப்போதெல்லாம் எல்லாமே விலை உயர்ந்துவிட்டன. வாடகை அதிகமாகிவிட்டது, சேமிப்பது கடினமாகிவிட்டது. " என்று அவர்கள் கூறுகிறார்கள்.
"எங்கள் தலைமுறையைச் சேர்ந்த பலர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்கிறேன் என்கிறார்கள். ஆனால், எந்தப் புரிதலும் இல்லாமல், தங்களது சேமிப்பை எல்லாம் கிரிப்டோ கரன்சி சந்தையில் வீசுகிறார்கள். "
"இதுபோன்றோரின் கவனத்தை ஈர்க்க செய்ய முடிவெடுத்தோம். மனிதர்களை எங்களது வெள்ளெலி புத்திசாலித்தனமாக முடிவெடுக்கும் என்று கூறினோம்"
அதனால் திட்டமிட்டேதான் கோக்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்டது. எம்டி கோக்ஸ் என்ற நிறுவனம் ஒரு காலத்தில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய நிறுவனமாக இருந்தது. ஆனால் பல லட்சம் கிரிப்டோ கரன்சிகள் திருடப்பட்டதால் அது திவாலானது.
சரி, நமது மிஸ்டர் கோக்ஸ் வெள்ளெலி என்ன செய்திருக்கிறார் என்று பார்ப்போம்.
அவரது முதல் மாதம் கடினமாக இருந்தது. கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி அவர் தனது முதல் வர்த்தகத்தைத் தொடங்கினார். 326 யூரோக்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. முதல் மாதத்தில் 95 வர்த்தகங்களை முடித்த பிறகு அவரது மூலதனம் 7.3 சதவிகிதம் குறைந்தது. ஆனால் செப்டம்பர் 27-ஆம் தேதி கணக்குப்படி அவரது மூலதனத்தின் நிகர மதிப்பு 19.41 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
இது சாதாரணமல்ல. உலகின் முன்னணி பங்குச் சந்தை முதலீடுகளின் லாபத்தை விடவும், ஏன் முதலீட்டு வித்தகரான வாரன் பஃப்பெட்டின் பெர்க்ஸயர் ஹேத்தாவே நிறுவனத்தின் லாபத்தை விடவும் இது அதிகம்.
கிரிப்டோ கரன்சி சந்தையில்கூட பிட்காயின் போன்ற முன்னணி கரன்சிகளை மிஸ்டர் கோக்ஸ் முந்தியிருக்கிறார்.
ஆனால், மிஸ்டர் கோக்ஸ் பெயரில் இருக்கும் கோக்ஸ் கேபிடல் என்ற நிறுவனம் உண்மையான முதலீட்டு நிறுவனமல்ல. மிஸ்டர் கோக்ஸ் என்ற வெள்ளெலியைப் பயன்படுத்தும் இரு ஜெர்மானிய இளைஞர்களும் தங்களது ஒவ்வொரு ட்விட்டர் பதிவிலும் இதை வலியுறுத்திக் கூறுகிறார்கள். தங்களது முதலீட்டை ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார்கள்.
ஆயினும் தங்களைப் பற்றிய விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க அவர்கள் விரும்பவில்லை.
"கிரிப்டோ கரன்சி பற்றிய பெரும்பாலான விவாதங்கள் சர்ச்சைக்குரியவையாக மாறிவிடுகின்றன. அது நாகரிகமற்றதாகவும் இருக்கின்றன" என்று பிபிசியிடம் அவர்கள் தெரிவித்தனர்.
அதனால் தங்களது "வேடிக்கையான திட்டத்தின்" முகமாக மிஸ்டர் கோக்ஸ் இருக்கட்டும் என்று அவர்கள் முடிவெடுத்துவிட்டனர்.
கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தபோது வேடிக்கையாக இந்தத் திட்டத்தை தொடங்கியதாக அவர்கள் கூறுகின்றனர்.
அவர்களில் ஒருவர் விரிவுரையாளர் மற்றும் மாதிரிகளை வடிவமைக்கும் நிபுணர். மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான, நகைச்சுவை கலந்த தொழில்நுட்பங்களை தாம் விரும்புவதாக அவர் கூறுகிறார்.
மற்றொருவர் ஒரு புரோகிராமர். பல்கலைக்கழகத்தில் இருந்து இருவரும் நல்ல நண்பர்கள்.
எலி நினைத்தபடி செய்யும் வர்த்தகங்கள் ஆன்லைனில் பலரது ஆர்வத்தை ஈர்த்துள்ளது.
"வெள்ளெலி தனது வர்த்தகத்தைத் தொடங்கிய நாள் முதல் கிரிப்டோ கரன்சி என்றால் என்ன என்று பலரும் என்னைக் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்" என்கிறார் அவ்விருவரில் ஒருவர். "பொதுவாக மக்கள் 'பிளாக்செயின்' என்ற வார்த்தையைக் கேட்டாலே ஓடிவிடுவார்கள். . "
மிஸ்டர் கோக்ஸின் பெட்டி
மிஸ்டர் கோக்ஸின் அலுவலகம் அடங்கிய பெட்டியின் பெரும்பாலான பாகங்கள் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. சாஃப்ட்வேர் ஸ்கிரிப்ட், மைக்ரோகண்ட்ரோலர்கள், 3 டி பிரிண்டிங், லேசர் கட்டிங் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த அலுவலகம் முழுமையாக தானியங்கி முறையில் இயங்குகிறது.
இதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
"எங்கள் மனதில் பல அம்சங்கள் உள்ளன, அவை அனைத்தையும் பார்க்க மிகவும் வேடிக்கையாக இருக்கும், மேலும் மிஸ்டர் கோக்ஸ் விளையாடுவதற்கு இன்னும் அதிக இடத்தைக் கொடுக்கும்" என்று அவர்கள் கூறினர்.
ஆனால் மிஸ்டர் கோக்ஸ் ஒரு திறமையான, வெற்றிகரமான நிர்வாகியைப் போல தனது நேரத்தை வைத்திருக்கிறார்.
ஆனால் மிஸ்டர் கோக்ஸ், ஓர் உண்மையான வெற்றிகரமான நிர்வாகியைப் போல, தனது நேரத்தை வைத்திருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அவர் அலுவலகத்துக்கு வரலாம்.
அவரைப் பார்க்க விரும்புவோர் அடுத்த நேரலை வரை காத்திருக்க வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்