You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சிவகுமாரின் சபதம்': விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: ஹிப்ஹாப் தமிழா ஆதி, மாதுரி, ஆதித்யா கதிர், ஃப்ராங்க்ஸ்டர் ராகுல், இளங்கோ குமணன், விஜய் கார்த்திக்; ஒளிப்பதிவு: அர்ஜுன் ராஜா; இசை, இயக்கம்: ஹிப்ஹாப் தமிழா ஆதி.
'நான் சிரித்தால்' படத்திற்குப் பிறகு ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் படம். முதல் படமான 'மீசையை முறுக்கு'வில் செய்ததைப் போலவே, இந்தப் படத்திலும் தன்னுடைய இயக்கத்தை நம்பி களமிறங்கியிருக்கிறார் ஆதி.
காஞ்சிபுரத்தில் ஒரு நெசவாளர் குடும்பம். வாழ்ந்து கெட்ட அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிவகுமார் (ஆதி) ஊருக்குள் அடிதடியென சுற்றிக்கொண்டிருப்பதால், அவனுடைய சித்தப்பா முருகனின் (ஃப்ராங்க்ஸ்டர் ராகுல்) வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.
ஆனால், அங்கே சென்ற பிறகுதான், சித்தப்பா முருகன், ஒரு பெரிய ஜவுளி அதிபரின் வீட்டில், வீட்டோடு மாப்பிள்ளையாக மரியாதையே இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்பது தெரிகிறது. இதற்குள் அந்த வீட்டைச் சேர்ந்த ஸ்ருதியுடன் (மாதுரி) காதல் ஏற்படுகிறது.
இது பிரச்னையாகி விட, முருகன், சிவகுமார் ஆகிய இருவருமே வீட்டைவிட்டுத் துரத்தப்படுகிறார்கள். ஏற்கெனவே சிவக்குமாரின் தாத்தாவுக்கும் (இளங்கோ குமணன்) அந்த ஜவுளிக்கடை அதிபருக்கும் விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஸ்ருதி - சிவகுமாரின் காதல் நிறைவேறியதா, முருகன் தன் மாமனாரின் வீட்டிற்குத் திரும்பினாரா என்பது மீதிக் கதை.
குடும்பப் பின்னணியில் நகைச்சுவை கலந்த, ஒரு கலகலப்பான திரைப்படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் ஆதி. ஆனால், பல காரணங்களால் அந்த விருப்பம் முழுமையாக நிறைவேறவில்லை. முக்கியமான காரணம், திரைக்கதை. குறிப்பாக படத்தின் பிற்பாதியில் ஒரே விஷயம் திரும்பத் திரும்ப நடக்கிறது.
வீட்டை, விட்டுத் துரத்தப்பட்ட முருகன் என்ற பாத்திரமும் கதாநாயகனும் திரும்பத் திரும்ப ஜவுளிக்கடை அதிபரின் வீட்டிற்குச் சென்று அவமானப்படுகிறார்கள் அல்லது சவால் விட்டுத் திரும்புகிறார்கள். கடைசியாக, ஜவுளிக்கடை அதிபர் ஒரு சவால் விடுகிறார்: "உங்களையெல்லாம் என் வீட்டு வாசல்ல வந்து நிக்க வைக்கலைனா என் பெயரை மாத்திக்கிறேன்" என்கிறார்.
இடைவேளைக்குப் பிறகு, 5 நிமிடத்திற்கு ஒரு முறை கதாநாயகன், அவர் வீட்டு வாசலில்தானே போய் நிற்கிறார். இதற்கெல்லாம் ஒரு சபதம்! அதேபோல, காதாநாயனும் அவ்வப்போது ஏதோ சபதம் செய்கிறார். ஒன்றும் மனதில் பதிவதில்லை.
இந்தப் படத்தில் வரும் தாத்தா, சித்தப்பா முருகன், ஜவுளிக்கடை அதிபர் போன்றவர்கள் என்ன மாதிரியான நபர்கள் என்பது படம் நெடுக குழப்பமாகவே இருக்கிறது.
அதில் சித்தப்பா பாத்திரம் மட்டும் ஒரு கட்டத்தில் "நான் எந்த மாதிரி கேரக்டர்?" என வாய்விட்டு அழுகிறார். மற்றவர்கள் சில சமயம் டெரர் பீஸாகவும் சில நேரங்களில் காமெடி பீஸாகவும் சில நேரங்களில் மனித புனிதராகவும் இருக்கிறார்கள்.
இவ்வளவு பிரச்னையுள்ள படத்தில் ஆறுதல் அளிப்பது ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் மற்றும் ஆதித்யா கதிரின் பாத்திரங்கள்தான். குறிப்பாக, ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் பின்னியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு நீண்ட வலம்வரக்கூடிய திறமையை வைத்திருக்கிறார். மற்றவர்கள் இந்தப் படத்திற்கு என்ன தேவையோ அதை நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தின் இன்னொரு பிரச்சனை, பாடல்கள். சுமார் 6 - 7 பாடல்கள் வருகின்றன. எந்தச் சூழலில் பாடல்களை இறக்குவார்கள் என்று கணிக்கவே முடியவில்லை. திடீர் திடீரென தாக்குதல் நடக்கிறது.
ஒன்றரை மணி நேரத்தில் முடிய வேண்டிய படம் சுமார் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது. தேவையில்லாத பாடல்களை குறைத்து விட்டு, திரைக்கதையிலும் சிக்கனம் காட்டியிருந்தால் சிவகுமாரின் சபதம் நிறைவேறியிருக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்