நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மீதமிருந்த நுழைவு வரியைச் செலுத்தினார்

நடிகர் விஜய் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு மீதமுள்ள நுழைவு வரியை செலுத்தி விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வாரத்திக்கு முன்னரே இந்த வரி செலுத்தப்பட்டுள்ளதாக விஜய் தரப்பு பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை நடிகர் விஜய் வாங்கினார். கார் வாங்கும்போதே இறக்குமதி வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த 'கோஸ்ட்' காரின் விலை 2012-ல் 2.25 கோடி ரூபாய். இதனை சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்த போது காருக்கான நுழைவு வரி செலுத்த வேண்டும் எனவும் அதன் பின்பே காரை பதிவு செய்து பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், காரின் விலையை விட இறக்குமதி வரி, சாலை வரி மற்றும் இன்ன பிற விஷயங்கள் என சேர்த்தால் வரி காரின் விலையை விட அதிகமாக இருந்ததால் (கிட்டத்தட்ட 6 கோடிக்கும் மேல்) நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதே ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்.

விஜய் காருக்கு வரி விலக்கு கேட்டதன் பின்னணி

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மதிப்பில் ஏற்கனவே 20% இறக்குமதி வரி செலுத்திவிட்டதால் நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் வழக்கை தள்ளுபடி செய்ததுடன் வரிவிலக்குக்கு தடை கேட்டதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வரியையும் கட்ட சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக நீதிக்காக பாடுபடுவாதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. அதுமட்டுமல்லாமல், வரி செலுத்துவது என்பது நன்கொடை அல்ல நாட்டு குடிமக்கள் அனைவரது கட்டாய பங்களிப்பு என அந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி அப்போது தெரிவித்திருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

பின்னர் நடிகர் விஜய்க்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. காருக்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரியை ஒரு வாரத்திற்குள் செலுத்தவும் ஜூலை மாத இறுதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார். நடிகர் விஜய் தரப்பு காருக்கான நுழைவு வரியைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் ஆனால், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நீக்குவதோடு, நீதிமன்றத்தை அணுகியதற்காக நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தெரிவித்த கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வாதிடப்பட்டது.

மேலும், வணிக வரித்துறையினர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டால் அதனை 7-10 நாட்களுக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதன்படி 2012-ல் ஏற்கனவே 20 சதவீதம் செலுத்தப்பட்ட வரி போக தற்போது மீதமுள்ள வரியை விஜய் தரப்பு தற்போது செலுத்தியிருக்கிறது.

அரசுத் தரப்பில் வாதிடும்போது, அபராதத்தைத் திரும்பப் பெறுவது, கருத்துகளைத் திரும்பப் பெறுவது ஆகியவை தொடர்பாக தாங்கள் எதையும் தெரிவிக்க முடியாது என்றும் விஜய் இன்னும் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்பதை மட்டும் கணக்கிட்டுத் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது.

விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார்

2012-ல் பிரிட்டனில் தயாரான சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸை இறக்குமதி செய்தார் நடிகர் விஜய். இதையடுத்து அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தும்படி வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவை எதிர்த்தும், வரி வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் விஜய். மேலும் அந்த மனுவில் இந்த காருக்கு வரி செலுத்தாத காரணத்தால் வட்டார போக்குவரத்து அலுவலத்தில் பதிவு செய்ய முடியாமலும், காரை பயன்படுத்த முடியாமலும் உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

வெளிநாட்டு சொகுசு காரை பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்வதற்காக காரின் மொத்த விலையில் 20% செலுத்தப்பட்ட நிலையில் இங்கு நுழைவு வரி என்பது வசூலிக்க தடை வேண்டும் என்பதே இதன் விஜய் தரப்பு மனுவில் விடுத்திருந்த கோரிக்கை.

கார் பிரியரான நடிகர் விஜயிடம் வின்டேஜ் மற்றும் பிஎம்டபுள்யூ கார்கள், மினிகூப்பர், டொயோட்டா இன்னோவா, ஆடி ஏ8 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வகை கார்கள் உள்ளன. இதில் ரோல்ஸ் ராய்ஸ் காரின் குறைந்தபட்ச விலை ரூ. 5 கோடியும் அதிகபட்ச விலை ரூ. 9.50 கோடி ஆகவும் உள்ளது.

மற்ற கார்களை போல அல்லாமல், ரோல்ஸ் ராய்ஸ் கார் தயாரிக்கவே குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இதற்கு காரணம் இதன் பெரும்பாலான வேலைகள் மனித உழைப்பில் செய்யப்படுவதுதான். மேலும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பிரியர்களுக்கு ஏற்றாற்போலவே அவர்கள் விரும்பும் வண்ணம், காரின் உள்ளே வசதிகள் போன்றவை பிரத்யேக கவனத்துடன் செய்து கொடுக்கப்படும்.

இதில் நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் விலை 2012-ல் சுமார் 3.5 கோடி ரூபாய். இது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்1 வகையை சார்ந்தது. லிட்டருக்கு ஐந்து முதல் எட்டு கிலோ மீட்டர் வரை அந்த கார் மைலேஜ் கொடுக்கக் கூடியது. இதன் அதிகபட்ச வேகம் 250 கிலோமீட்டர் ஆகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :