You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தனுஷுக்கு 48 மணி நேர கெடு - சொகுசு கார் வரி வழக்கில் என்ன தீர்ப்பு?
ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்குரிய 50 சதவீத வரியை 48 மணி நேரத்துக்குள் செலுத்துமாறு நடிகர் தனுஷுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து நிலுவை வரியான ரூ. 30.33 லட்சத்தை தனுஷ் செலுத்த வேண்டும்.
முன்னதாக, தமது சொகுசு காருக்கு வரி விலக்கு அளிக்க உத்தரவிடக் கோரி நடிகர் தனுஷ் தொடர்ந்திருந்த வழக்கை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் இன்று பிற்பகலில் நீதிபதி அளித்த தீர்ப்பில், நிலுவை வரியை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று காலையில் விசாரணை வழக்கு விசாரணை துவங்கியதும் தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிலுவையில் உள்ள வரியைக் கட்டிவிட தனுஷ் தயாராக இருப்பதாகவும் அதற்கு திங்கட்கிழமை வரை அவகாசம் தருமாறும் கேட்டுக் கொண்டார்.
அப்போது நீதிபதி அவரிடம் சில கேள்விகளை சரமாரியாக எழுப்பினார்.
"நீங்கள் தாக்கல் செய்த மனுவில் தனுஷ் என்ன பணியில் இருக்கிறார் என்பதைக் குறிப்பிடவில்லையே... ஏன்? பணியையோ தொழிலையோ குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா?" என்றார் நீதிபதி.
"சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். ஐம்பது ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட வரி செலுத்தும்போது நீங்கள் ஏன் செலுத்தக் கூடாது?
பால்காரர் ஜிஎஸ்டி கட்ட முடியவில்லை என நீதிமன்றத்தை நாடுகிறாரா?
மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையைப் பயன்படுத்தும்போது, அதற்கு வரி செலுத்த வேண்டியதுதானே என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள். ஆனால், செலுத்த வேண்டிய வரியைச் செலுத்துங்கள். தனுஷ் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை வணிக வரித்துறை கணக்கீடு செய்து பகல் 2.15 மணிக்குள் கூற வேண்டும். அந்த விவரத்தை தெரிவிக்க வணிக வரி கணக்கீட்டாளர் ஆஜராக வேண்டும்," என்று கூறிய நீதிபதி வழக்கின் தீர்ப்பை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்குக் கோரியபோது இதே நீதிபதிதான் விஜய்யை சரிமாரியாக விமர்சித்து, ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார். அந்த வழக்கில் அபராதம் செலுத்த இடைக் காலத் தடை விதித்திருக்கிறது உயர் நீதிமன்றம்.
2015ஆம் ஆண்டில் நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கினார். அந்தக் காருக்கு 60.66 லட்சம் நுழைவு வரியாக விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் தனுஷ். இதை விசாரித்த நீதிமன்றம், 50 சதவீத வரியைச் செலுத்தி காரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்து கொள்ளலாம் என்றும் வழக்கின் தீர்ப்பு வரும்போது மீதி தொகையை செலுத்துவதா அல்லது விலக்கு கிடைக்குமா என்பதை தீர்மானிக்கலாம் என்று கூறியிருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்