சிம்புவின் வெந்து தணிந்தது காடு: படத்தலைப்பில் ஏன் திடீர் மாற்றம்?

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கெளதம் மேனன் இயக்கத்தில் அடுத்து சிம்பு நடிக்க இருக்கும் படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு. 'வெந்து தணிந்தது காடு' என தலைப்பிடப்பட்டு இதன் முதல் பார்வையும் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

மீண்டும் இணையும் சிம்பு- கெளதம் மேனன்

'விண்ணைத்தாண்டி வருவாயா?', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்கு பிறகு மீண்டும் சிலம்பரசன் கெளதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைகிறது. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல் வரிகள். திரைக்கதையை எழுத்தாளர் ஜெயமோகனுடன் இணைந்து எழுதியிருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். இது சிம்புவின் 47வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010-ல் 'விண்ணைத்தாண்டி வருவாயா?', 2016-ல் 'அச்சம் என்பது மடமையடா'. தற்போது மீண்டும் ஆறு வருடங்கள் கழித்து சிம்பு-கெளதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றி கூட்டணி இணைகிறது.

இன்று பூஜையோடு படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது படக்குழு. இதன் பிறகு திருச்செந்தூர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கெளதம் மேனனின் 'காக்க காக்க' படத்தின் பாடல் ஒன்றில் இடம்பெற்ற 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்ற கவிஞர் தாமரையின் வரி இந்த படத்தின் தலைப்பாக முதலில் வைக்கப்பட்டிருந்தது.

பிறகு படத்தின் தலைப்பில் மாற்றம் என கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது. தற்போது பாரதியாரின் கவிதை வரியான 'வெந்து தணிந்தது காடு' என்பது படத்தின் தலைப்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'அசுரன்' படத்துக்கு போட்டியா 'வெந்து தணிந்தது காடு'?

தற்போது வெளியாகியிருக்கும் 'வெந்து தணிந்தது காடு' முதல் பார்வையில் உடல் மிகவும் இளைத்து அழுக்கு சட்டை லுங்கி ரப்பர் செருப்போடு கையில் நீண்ட குச்சியும் அதில் அருவாளும் இணைத்து அதை கையில் பிடித்தபடி நிற்கிறார் சிம்பு. பின்னால், படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற் போல வெந்து தணியும் நெருப்போடு காட்சியளிக்கிறது காடு.

முதல் பார்வையில் சிம்புவின் தோற்றம், படத் தலைப்பின் எழுத்து உள்ளிட்டவை 'அசுரன்' படத்தை நினைவுக்கு கொண்டு வருகின்றன என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும், நேற்று தனுஷின் 44வது படத்தின் தலைப்பு 'திருச்சிற்றம்பலம்' என அறிவித்து படப்பிடிப்பும் நேற்று தொடங்கியது.

நடிகர் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் முடித்து இந்த வருட இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அடுத்தடுத்த படங்களில் பிசியாகும் சிம்பு

கொரோனா லாக்டவுணுக்கு முன்பே 'மஹா', 'மாநாடு' உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார் நடிகர் சிம்பு. கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதமாகியது. இதனையடுத்து, சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படப்பிடிப்பும் நிறைவடைந்தது. சிம்பு மீண்டு வரும் படமாக 'ஈஸ்வரன்' பார்க்கப்பட்டாலும், அது எதிர்ப்பார்த்த அளவு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. எனவே, 'மாநாடு' மீது எதிர்ப்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியிருக்கும் 'மஹா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுத்திருக்கிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பே முடிந்து விட்டது.

வெங்கட்பிரபுவுடன் 'மாநாடு', கிருஷ்ணாவுடன் 'பத்து தல' தற்போது இயக்குநர் கெளதம் மேனனுடன் 'வெந்து தணிந்தது காடு' உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார் சிம்பு.

தலைப்பில் ஏன் திடீர் மாற்றம்?

வெந்து தணிந்தது காடு என்று படத்திற்கு ஏன் திடீர் தலைப்பு மாற்றம் என படக்குழு தரப்பில் விசாரித்தோம். "படம் குறித்தான அறிவிப்பு வெளியாகும் போது கதையின் ஒரு வரியை மட்டும் வைத்துதான் பெயர் முடிவானது. தற்போது கதை திரைக்கதையாக முழுமை பெற்றதும், 'வெந்து தணிந்தது காடு' தலைப்பு பொருத்தமாக இருந்ததால் மாற்றப்பட்டது" என்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :