You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Money Heist சீசன் 5: இறுதி சீசனில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?
- எழுதியவர், ச ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
நெட்ஃபிளிக்ஸ்ஸில் அடுத்த மாதம் 'மணி ஹெய்ஸ்ட்' இணையத்தொடரின் இறுதி சீசனின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் க்ரைம் ட்ராமா தொடராக தொலைக்காட்சியில் வெளிவந்து பின் நெட்ஃபிளிக்ஸ் வழி ரசிகர்களை 'பெல்லா சவ்' பாட வைத்தது 'மணி ஹெய்ஸ்ட்'.
ஸ்பெயின் நாட்டில் கொள்ளையடிக்கும் கும்பலாக களமிறங்கும் நாயகக் கூட்டத்துக்கும் காவல்துறைக்குமான அதிரடி காட்சிகள், 90 டிகிரி நறுக் திருப்பங்கள், காதல், சோகம், துரோகம், ஏமாற்றம் என நவரசங்களும் நிரம்பி வழியும் தொடரிது. இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளன.
முதல் இரண்டு சீசன்கள் ராய்ல் மின்ட் ஆஃப் ஸ்பெயின் என்கிற யூரோ கரன்ஸியை அச்சடிக்கும் இடத்தைச் சுற்றியும், அடுத்த இரு பாகங்கள் பேங்க் ஆஃப் ஸ்பெயின் என்கிற ஸ்பெயின் நாட்டு அரசின் தங்கத்தை வைத்திருக்கும் இடத்தை அச்சாணியாகக் கொண்டு சுழலும்.
நான்காவது சீசனில் பேங்க் ஆஃப் ஸ்பெயினை மீட்கும் நடவடிக்கை குழுவில் உள்ள கர்பிணி காவல்துறை அதிகாரி அலீசியாவின் சில எதிர்பாரா நடவடிக்கை எப்படி அரசுக்கு நெருக்கடியாக மாறுகிறது, பேங்க் ஆஃப் ஸ்பெயினில் சிக்கி இருக்கும் கொள்ளையர்களின் அடுத்த திட்டம் என்ன? என்கிற பதபதைப்புடனேயே தொடரும் போட்டு முடித்துவிட்டார்கள்.
ஐந்தாவது சீசன் அந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு விடை கொடுக்கும் என ரசிகர்கள் கூட்டம் செல்போன் திரை மேல் விழிவைத்துக் காத்திருக்கிறார்கள்.
கடந்த கொரோனா பொதுமுடக்க காலத்தில் பலரது Binge Watchlist-ல் இந்த தொடர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் இறுதி சீசனுக்கான முதல் பாகத்தின் முன்னோட்டம் இன்று இரவு வெளியாக இருக்கும் நிலையில் தொடர் குறித்தான சில சுவாரஸ்ய விஷயங்கள் இங்கே பார்க்கலாம்.
•'மணி ஹெய்ஸ்ட்' இணையத்தொடருக்கு முதன்முதலாக இயக்குநர் மற்றும் தயாரிப்பு தரப்பில் வைக்கப்பட்ட பெயர் 'Hopeless'. 'Hopeless' என்கிற பெயர் நம்பிக்கை தருவதாக இல்லை என நெட்ஃபிலிக்ஸ் தரப்பு கூறிய பிறகே 'மணி ஹெய்ஸ்ட்' என மாற்றப்பட்டு இருக்கிறது
•'மணி ஹெய்ஸ்ட்' இதுவரை நான்கு சீசன்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ஒட்டு மொத்த கதையுமே கதையின் நாயகனான, புரொஃபசர் (அல்வாரோ மார்டே) அணியில் இருக்கும் டோக்கியோவின் பார்வையில் அவள் சொல்லும் கதையாகவே விரியும். ஆனால் முதன் முதலில், புரொஃபசர் கதாப்பாத்திரம் கதையை விவரிப்பது போல அமைக்கப்பட்டிருந்தது. பிறகு மாஸ்கோ பார்வையில் கதை நகர்த்த முயற்சி செய்து, கடைசியில் டோக்கியோ (உர்சுலா கோர்பெரோ) குரல் வழி கதை விரியத் தொடங்கியது.
•இந்த தொடரில் புரொஃபசர் அணியில் இருக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திரத்திற்கும் 'டோக்கியோ, நைரோபி, மாஸ்கோ, ரியோ…' என நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதன்படி முதலில் புரொஃபசர் கதாப்பாத்திரத்திற்கும் 'வாட்டிகன்' என பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஆனால், அது தொடரில் நேரடியாக பயன்படுத்தப்படவில்லை.
•கடந்த மூன்று & நான்காவது சீசனில் நீருக்கடியில் இருக்கும் தங்கக்கட்டிகள் எடுப்பது போன்ற ஒரு காட்சிகள் வருமல்லவா? அதில் காட்டப்பட்டிருக்கும் தங்க கட்டிகள் உண்மையில் பஞ்சில் செய்திருக்கிறார்கள். நீரில் இருந்ததால், அவை அனைத்தும் பெரிதாகி விட காட்சி எடுத்து முடித்ததும் அதை கிராஃபிக்ஸ் மூலமாக தங்க கட்டிகளாக மாற்றியமைத்திருக்கிறார்கள்.
•அதேபோல, இந்த தொடரில் குறிப்பிடத்தகுந்த இன்னொரு விஷயம் 'பெல்ல சாவ்' பாடல். இந்த பாடல், இரண்டாம் உலக போரின் போது இத்தாலியில் அதிகாரவர்க்கத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பாடப்பட்டது. இந்த பாடல் அந்த போராட்டத்தில் பங்கு பெற்ற கிளர்ச்சியாளர்களின் வெற்றியை குறிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
இந்த தொடரிலும் புரொஃபசரும் அவரது அணியும் தங்களை அரசுக்கு எதிரானவர்களாக, மக்கள் பக்கம் இருந்து புரட்சிகரமான வசனங்கள் பேசுபவர்களாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். இதுவே இந்த பாடல் பயன்படுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம். உன மடினா... மி சொனால் சாடோ... ஓ பெல்லா சாவ் பெல்லா சவ்... சவ் சவ்...
•தன்னை விட வயதில் குறைவான ரியோவை (மிகுல் ஹெரென்) காதலோடு கொஞ்சுவது, பின்னணி இசை போல கதை சொல்வது, சிக்கலான தருணங்களில் தன் அணிக்காக முன்னுக்கு வந்து நிற்பது... என கதையின் நாடி நரம்பில் ஊறி இருக்கும் உர்சுலா கதாபாத்திரத்திற்கு தான் முதன் முதலில் 'டோக்கியோ' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த தொடரின் இயக்குநர் அணிந்திருந்த டீ-ஷர்ட்டில் 'டோக்கியோ' என அச்சிடப்பட்டிருக்க அதை பார்த்தே அந்த கதாப்பாத்திரத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.
பிறகு தான் மற்ற கதாப்பாத்திரங்களுக்கும் மற்ற நகரங்களின் பெயர்களை கொடுத்திருக்கிறார்கள். டோக்கியோ கதாப்பாத்திரம், 1994-ல் 'லியோன்: தி புரொஃபஷனல்' என்ற படத்தில் வரும் 'மெட்டில்டா' கதாப்பாத்திரத்தின் சாயலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
•இந்த தொடரில் புரொஃபசர் கண்ணாடியை சரி செய்யும் விதம், டென்வரின் வித்தியாசமான சிரிப்பு என ஒவ்வொரு கதாப்பாத்திரத்திரத்தின் தனித்துவம் ரசிகர்களிடையே மிக பிரபலம். இப்படி ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் தனித்துவமான செயல்களுக்காக தனி ஒரு அணியே பின்னால் வேலை பார்த்திருக்கிறது.
• டாலி முகமூடியும் கொள்ளை அடிக்கும் போது புரொஃபசர் மற்றும் அவரது அணியினர் அணியும் அந்த சிவப்பு நிற ஜம்ப் சூட் உடையும் இத்தொடரின் மூலம் உலக பிரபலமாகிவிட்டது. உலகில் பல நாடுகளிலும் அரசுக்கெதிராக மக்கள் நடத்திய பல போராட்டங்களிலும் இந்த உடைகளும், முகமூடிகளும் மக்கள் அணிருந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
•கொள்ளையர்கள் முகத்தில் போட்டிருக்கும் அந்த முகமூடி பிரபல ஸ்பெயின் ஓவியரான டாலியின் ஓவியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த ஓவியத்தை அடிப்படையாக வைத்துதான் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' கதாப்பாத்திரத்தின் மீசையும் வரைந்திருக்கிறார்கள்.
•ஒரு திரைப்படமோ, தொடரோ பிரபலமடைந்தால் ரசிகர்கள் அந்த கதையில் ஈர்க்கப்படுவது வழக்கம். அதுபோல, இந்த ''மணி ஹெய்ஸ்ட்' தொடரை பார்த்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டேன்' என பல நிஜ சம்பவங்கள் அரேங்கறியுள்ளன.
அதிலும் குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் திருச்சி அருகே நடந்த ஒரு வங்கி கொள்ளை சம்பவம் மற்றும் பிரபல நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் இந்த அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்து பரபரப்புக்குள்ளாக்கியது.
•அதேபோல, இந்த தொடரை தமிழில் எடுத்தால் யார் நடிக்க வைக்கலாம் என ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழ, நடிகர் விஜய், சிம்ரன், கார்த்தி, ராதிகா ஆப்தே என பலரது பெயர்களும் இதில் அடிபட்டது.
•முதல் இரண்டு சீசன்கள் ஸ்பெயின் தொலைக்காட்சி தொடராகவே ஒளிபரப்பானது. பின்பே அதை நெட்ஃபிலிக்ஸ் வாங்கியது. அதுவரை குறைந்த செலவில் உருவாக்கப்பட்டு வந்த தொடர் நெட்ஃபிலிக்ஸ் உள்ளே வந்ததும் விதவிதமான லொகேஷன், கதாப்பாத்திரங்கள் என பட்ஜெட் ரீதியாக தொடர் தனக்குத் தேவையான பிரம்மாண்ட எல்லைகளைத் தொட்டு விரிவடைந்தது.
•ஒவ்வொரு சீசனிலும், கதைக்கான அடிப்படை கொள்ளை சம்பவம் மட்டும்தான். அது எப்படி இருக்க வேண்டும், என்னவெல்லாம் நடக்க வேண்டும் என கதையைக் கொண்டு செல்வதை முன்பே தீர்மானிக்க மாட்டார்களாம். கதைப்போக்கிலேயே படக்குழு முடிவு செய்யும். அதனால், கதைக்கான முடிவு என்ன என்பது முதல் சீசனில் யாருக்குமே தெரியாத விஷயமாக இருந்திருக்கிறது.
•இதுவரை நான்கு சீசன் ஒளிபரப்பாகியுள்ளது. இந்த தொடரின் ஐந்தாவது சீசனே இறுதி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு நெட்ஃபிலிக்ஸ் தரப்பில் வெளியாக ரசிகர்கள் படு அப்செட். அதனால், ரசிகர்களை சமாதானம் செய்யும் விதமாக ஐந்தாவது சீசனை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்திருக்கிறது நெட்ஃபிலிக்ஸ்.
•அதன்படி இன்று ட்ரெய்லர் வெளியிட்டு அடுத்த மாதம் அதாவது, செப்டம்பர் 3-ம் தேதி முதல் பாகமும், டிசம்பர் 3ஆம் தேதி இரண்டாம் பாகமும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
பிற செய்திகள்:
- e-RUPI: மோதி அரசின் புதிய பணப் பரிவர்த்தனை திட்டம் - 10 முக்கிய தகவல்கள்
- விண்வெளி அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - 5 கேள்வி பதில்கள்
- பெட்ரோலுக்கு அதிக வரி வசூலிப்பது மத்திய அரசா மாநில அரசா? #Factcheck
- ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி: ஆஸ்திரேலிய அரணை சிதறடித்த இந்திய வீராங்கனைகள்
- இந்த வீராங்கனையின் 'எக்ஸ்' போராட்டத்துக்கு என்ன காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்