You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டோக்யோ ஒலிம்பிக்: அமெரிக்க வீராங்கனை ரேவன் சாண்டர்ஸ் 'எக்ஸ்' வடிவில் கைகளை உயர்த்திக் காட்டியது ஏன்?
டோக்யோ ஒலிம்பிக்கில் குண்டு எரிதல் போட்டியில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை ரேவன் சாண்டர்ஸ் தான் வென்றெடுத்த வெள்ளிப் பதக்கத்தைப் பெறும்போது கைகளை எக்ஸ் வடிவில் காட்டினார். இந்தக் குறியீட்டுக்கு என்ன பொருள்? அதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்?
25 வயதான ரேவன் சாண்டர்ஸ் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். ஓரினைச் சேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்தவர். மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டவர். இந்தக் காரணங்களால் தாம் அனுபவித்த இன்னல்களைப் பற்றி பல முறை பேசியிருக்கிறார்.
"ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் இடம்" என்பதைக் குறிப்பதற்காகவே எக்ஸ் வடிவில் தமது கைகளை உயர்த்திக் காண்பித்ததாக ரேவன் சாண்டர்ஸ் கூறியுள்ளார். கறுப்பினம், ஓரினச் சேர்க்கை , மன நலச் சிக்கல் ஆகியவற்றுக்கு ஆதரவாக குரல் எழுப்பும் வகையில் இதைச் செய்திருப்பதாக அவர் விவரித்தார்.
பதக்கங்களைப் பெறுவதற்கான மேடையில் எந்த வகையிலும் போராட்டம் நடத்துவதையோ, குறியீடுகளைக் காண்பிப்பதையோ, முழக்கம் எழுப்புவதையோ சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதிப்பதில்லை. அப்படிச் செய்ய விரும்புவோர் தங்களுக்கான செய்தியாளர் சந்திப்பில் வாய்ப்பு உண்டு என டோக்யோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ரேவன் சாண்டர்ஸ் தடையை மீறி பதக்க மேடையிலேயே தனது மறைமுகப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்.
ரேவன் சாண்டர்ஸின் செயல் தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆய்வு செய்து வருவதாக அதன் செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் கூறியுள்ளார். தண்டனை ஏதும் வழங்கப்பட்டால் அதை சாண்டர்ஸ் எதிர்கொண்டாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மனநல குறைவால் பாதிக்கப்பட்ட சாண்டர்ஸ், தன்னுடைய சமூகத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே பதக்க மேடையில் தாம் குறீயீட்டைக் காண்பித்ததாகத் கூறுகிறார்.
பழைய தலைமுறையைக் காட்டிலும் புதிய தலைமுறையினர் வேறுபாடுகளை வெளிப்படையாக விவாதிக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
"உலகம் முழுவதும் குரல் எழுப்புவதற்குத் தளம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றி அனைவரும் அறிய வேண்டும்" என்பதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
"நாங்கள் உண்மையில் எதற்காகவும் கவலைப்படவில்லை. எனது அனைத்து கருப்பின மக்களுக்காவும் குரல் எழுப்புங்கள். எனது எல்லா LGBTQ சமூகத்திற்குமாகக் குரல் எழுப்புங்கள். மனநல குறைபாடுகளைக் கொண்ட அனைவருக்குமாகக் குரல் எழுப்புங்கள். எங்களைப் பலர் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் ஏதாவது பேசுகிறோமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று சாண்டர்ஸ் கூறினார்.
"நான் பல சமூகங்களைச் சார்திருக்கிறேன்" என்று கூறிய சாண்டர்ஸ், தனது போட்டி முடிந்ததும் மாறுபட்ட முறையில் நடனமாடி கவனத்தை ஈர்த்தார்.
இந்தப் போட்டியில் சீன மற்றும் நியூசிலாந்து நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
மனநலம் தொடர்பான விவாதக் களமாகும் ஒலிம்பிக்
டோக்யோ ஒலிம்பிக் போட்டி வீரர்களின் மனநலம் சார்ந்த பிரச்னைகளைப் பற்றிப் பேசும் களமாக உருவெடுத்திருக்கிறது. மூத்த வீரர், வீராங்கனைகள் பலர் போட்டிகளின் பல்வேறு நிலைகளில் இருந்து வெளியேறியதற்கு மனநலம் தொடர்பாக சிக்கல்களே காரணம் என்று கருத்து பரவலாகப் பேசப்படுகிறது.
ஜிம்னாஸ்டிக் போட்டியில் மிகவும் பிரபலமான அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ், மன நலனைக் காரணமாகக் காட்டி முக்கியமான போட்டிகளில் இருந்து விலகிவிட்டார். தங்கப் பதக்கங்களை வெல்வார் என்று கூறப்பட்ட ஒருவர் போட்டிகளில் இருந்து திடீரென விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் வீரர்களின் மனநலன் குறித்த விவாதத்தையும் தோற்றுவித்தது.
சிமோன் பைல்ஸுக்கு ஆதரவாக ஜப்பானின் டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாகா குரல் கொடுத்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காகவே கிராண்ஸ்லாம் போட்டிகளைத் தவிர்த்து வந்த அவர், தொடக்க சுற்றுப் போட்டிகளிலேயே வெளியேறினார். இதற்கும் மனநலச் சிக்கல்களே காரணம் என்று கூறப்பட்டது.
இதேபோல் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இதுவரை யாரும் பெறாத கோல்டன் ஸ்லாம் சாதனையைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச் அரையிறுதிப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
அதன் பிறகு ஸ்பெயின் நாட்டு வீரர் பாப்லோ பஸ்டாவுடன் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதினார். அந்தப் போட்டியிலும் அவரால் வெற்றி பெற இயலவில்லை. கலப்பு இரட்டையர் பிரிவிலும் ஜோக்கோவிச்சால் பதக்கச் சுற்றுகளுக்குச் செல்ல முடியவில்லை.
சமீப காலமாக அழுத்தங்களை தாங்கிக் கொண்டு இயல்பாக ஆடிவந்த ஜோக்கோவிச், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியின்போது தனது ராக்கெட்டை வலைக் கம்பத்தில் ஆவேசமாக அடித்து உடைத்தார். இதுவும் நட்சத்திர வீரர்களின் மனநலன் பற்றிய விவாதத்தை எழுப்பியது.
இப்போது மனநல குறைபாட்டுக்காக சிகிச்சை பெற்றிருக்கும் ரேவன் சாண்டர்ஸ் பதக்க மேடையிலேயே குரல் எழுப்பியுள்ளார்.
2016-ஆம் ஆண்டில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற சாண்டர்ஸ், தனது மனநலச் சிக்கல்கள் காரணமாக 2018-ஆம் ஆண்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதையும் விவரித்திருக்கிறார்.
மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்ற பிறகே குண்டு எரிதல் விளையாட்டில் முன்னைவிட அதிகமாகக் கவனம் செலுத்த முடிந்தது என்றும் சாண்டர் கூறியுள்ளார்.
பதக்கம் பெறும் மேடையில் கைகளை உயர்த்திக் குறியீடு செய்வதற்கு முன்பாகவே, தனது தலைமுடியின் நிறத்துக்காவே கவனம் பெற்றுவிட்டார் சாண்டர்ஸ். கற்பனைப் பாத்திரங்களான ஹல்க் மற்றும் ஜோக்கர் ஆகியவற்றைப் பார்த்து தனது தலைமுடியின் நிறத்தை அவர் மாற்றிக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய மாற்று வடிவாக ஹல்க்கை கருதும் சாண்டர்ஸ், ட்விட்டரிலும் அந்தப் பெயரைப் பயன்படுத்துகிறார்.
கறுப்பினத்தைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரங்களும் சகோதரிகளுமான வீனஸ், செரீன வில்லியம்ஸைப் பார்த்து வியக்கிறார் சாண்டர்ஸ். "கூந்தலில் மணிகளைக் கொண்ட இளம் கறுப்புப் பெண்கள். எதற்கும் வருத்தப்படாதவர்கள்" என்று கூறுகிறார்.
தனது சாதனைகள் மூலமாகவும், நேர்மை மூலமாகவும் மற்றவர்களை ஊக்குவிக்க முடியும் என்று நம்புகிறார் ரேவன் சாண்டர்ஸ்.
பிற செய்திகள்:
- இமயமலை நாட்டின் இமாலய சாதனை: பூட்டானில் 99% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
- ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த எம்மா மெக்கியோன்
- காஷ்மீர் ப்ரீமியர் லீக்: 'வெளிநாட்டு வீரர்களை பிசிசிஐ மிரட்டுகிறது ' - பாகிஸ்தான்
- "பெட்ரோல் பாண்டுகளால்தான் பெட்ரோல் விலை உயர்வதாகச் சொல்வது பொய்" - ஆனந்த் ஸ்ரீநிவாசன்
- நரபலி கொடுக்கும் ஆஸ்டெக் பேரரசு: மத்திய அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பழங்குடிகளை பற்றி தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்