You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சார்பட்டா பரம்பரை' ஆர்யா பேட்டி: 'ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற துரத்திப் பிடித்தேன்'
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
'சார்பட்டா பரம்பரை' vs 'இடியாப்ப பரம்பரை' என இரு குத்துச்சண்டை பரம்பரைகளுக்கு இடையே 1975களில் 'மெட்ராஸ்' நகரத்தில் நடைபெறும் குத்துச்சண்டையை மையப்படுத்தி ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கிறது 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம்.
படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் கதையில் கபிலனாக இடியாப்ப பரம்பரையை எதிர்த்து தன் ஆட்டத்தை ஆடிய நடிகர் ஆர்யாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
தமிழ் சினிமாவில் குத்துச்சண்டை மையப்படுத்திய நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அதில் இருந்து 'சார்பட்டா' எந்த அளவில் வேறுபடுகிறது?
வடசென்னையில் குத்துசண்டையை மையப்படுத்தி நடந்த நிறைய கதைகளை சொல்லலாம். அந்த வகையில் இயக்குநர் ரஞ்சித் 1975ல் நடக்கும் சம்பவங்களை வைத்து கதை எழுதியிருக்கிறார். இதில் மற்ற படங்களின் சாயல் இருக்குமா என கேட்டால், நிச்சயம் குறைவாகவே இருக்கும். ஏனெனில், அதில் அவர்கள் வேறொரு களம், வேறு பிரச்னைகளை குறிப்பிட்டு இருப்பார்கள். ஆனால், இதில் பேசியிருக்கும் விஷயங்கள் வேறு. படத்தில் வரும் வாழ்கை முறைகளும், மனிதர்களும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
'சார்பட்டா'வில் நடிக்க வேண்டும் என நீங்கள்தான் இயக்குநர் ரஞ்சித்தை துரத்தி பிடித்தீர்கள் என கேள்வி பட்டோம். அவருடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
'ஸ்போர்ட்ஸ் ட்ராமா' படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அது ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும் என தோன்றியது.
அதனால்தான் அவரை நான் துரத்திப் பிடித்தேன். அவர் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து செய்வார். இந்த படத்தில் கதைக்காக ஒவ்வொருவரின் தோற்றம் மட்டுமில்லாமல், கதாப்பாத்திரம் வழியாகவும் கதையின் காலத்தை குறிப்பிடும்படியாக அமைத்தது சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் அமைந்தது.
பாக்ஸிங் இல்லாமல் வேறு ஒரு 'ஸ்போர்ட்ஸ் ட்ராமா' படம் என்றால் எது உங்கள் தேர்வு?
எதுவாக இருந்தாலும் செய்யலாம். குறிப்பாக பிரபலமாக இருக்கும் கிரிக்கெட், ஃபுட்பால், பாட்மிட்டன், டென்னிஸ் இதுபோன்ற விளையாட்டுகளில் படங்கள் நடித்தால்தான் அது மக்களிடையே சென்று சேரும். அதனால், அதில் எந்த படங்களாக இருந்தாலும் நடிப்பேன்.
படத்தில் பாக்ஸிங்கிற்கான பயிற்சி எப்படி இருந்தது? படம் முடிந்த பின்பும் பாக்ஸிங்கிற்கான பயிற்சியை தொடர்கிறீர்களா?
பாக்ஸிங்கான பயிற்சி இன்னும் போய் கொண்டுதான் இருக்கிறது. இந்த படத்திற்கு முன்பிருந்தே நான் பாக்ஸிங் செய்து கொண்டுதான் இருந்தேன். இப்போதும் அது தொடர்கிறது. படம் பொருத்தவரையில், தொடங்குவதற்கு முன் எல்லாருக்கும் 45 நாட்கள் பயிற்சி கொடுத்தார்கள். திரைக்கதை படிப்பது, உடல்மொழி, பேச்சு என எல்லாமே அதில் இருந்தது. அதனால், எல்லாருமே படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போதே தயாராகத்தான் இருந்தார்கள்.
'சார்பட்டா பரம்பரை' பட ட்ரைய்லரில் 'மெட்ராஸ்', 'மதராசப்படினம்' படமும் இணைந்த நியாபகம் வருகிறது என்ற ஒரு பின்னூட்டம் பார்க்க முடிந்தது. உங்களுக்கு 'சார்பட்டா' எந்த இடத்திலாவது 'மதராசப்பட்டினம்' படத்தை நினைவுப்படுத்தியதா?
'மதராசப்பட்டினம்' இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு எடுக்கப்பட்ட படம். 'சார்பட்டா' காலகட்டம் 1975ல் நடப்பது. படத்திற்காக போடப்பட்ட செட்டுக்குள் போகும்போதே அந்த காலகட்டத்திற்குள் நுழைந்தது போல இருக்கும். அதனால், 'மதராசப்பட்டினம்' நினைவுகள் நிச்சயம் இருந்தது. இந்த படத்தை பொருத்தவரையில் தொழில்நுட்ப கலைஞர்கள், கலை இயக்குநர்கள் இவர்களுக்குதான் வேலை அதிகம். ஏனெனில், அந்த காலக்கட்டத்தை சரியாக அதில் பிரதிபலிக்க வேண்டும்".
சார்பட்டா பரம்பரையின் வாத்தியாராக பசுபதி நடித்திருக்கிறார். படத்தில் அவருக்கும் உங்களுக்கும் இடையிலான அந்த பிணைப்பு குறித்து சொல்லுங்கள்?
ரங்கன் வாத்தியாராக பசுபதி கதாப்பாத்திரம் படத்தில் மிக முக்கியமானது. சார்பட்டா பரம்பரைக்கே அவர்தான் வாத்தியார். அந்த கதையில் நிறைய விஷயங்கள் அவரை சுற்றி நடக்கும். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை நாங்கள் எல்லோரும் கற்று கொண்டோம்.
ஆர்யாவுடைய படங்கள் என்றால் ஜாலியான கதாப்பாத்திரங்கள் அல்லது 'நான் கடவுள்', 'மகாமுனி' மாதிரியான சீரியஸான கதாப்பாத்திரங்கள்தான் நினைவிற்கு வருகிறது. மாஸ் ஹீரோ கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விருப்பமில்லையா?
குறிப்பிட்ட இதுபோன்ற கதாப்பாத்திரங்கள்தான் நடிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் என்னிடம் கிடையாது. நல்ல படங்கள் வரும்போது அதில் நடிக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன். நல்ல இயக்குநர்கள், கதை, கதாப்பாத்திரங்கள் வரும்போது என்னால் அதை செய்ய முடியுமா என்றுதான் பார்ப்பேன். இதுபோலதான் யோசிப்பேனே தவிர குறிப்பிட்ட இந்த கதாப்பாத்திரங்கள்தான் நடிக்க வேண்டும் என்ற எந்த திட்டமும் என்னிடம் இல்லை.
அஜித், பரத், விஷ்ணுவிஷால், விஷால், மாதவன் இப்படி பல கதாநாயகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்திருக்கிறீர்கள். இதில் உங்களுக்கு பிடித்தது யார்?
கதைக்கு தேவை இருந்ததால் இவர்களுடன் இணைந்து நடித்தேன். அது இயக்குநர்களுடைய முடிவு. மற்றபடி, மற்ற நடிகர்களுடன் நடித்தால் நன்றாக இருக்கும் என யோசிக்கலாமே தவிர கதையும், இயக்குநரும்தான் அதை தீர்மானிக்க வேண்டும். 'எனிமி' கதை கேட்டு நான் நடித்தால் நன்றாக இருக்கும் என விஷால் என்னை பரிந்துரைத்தார். கதையும் எனக்கு பிடித்திருந்தது.
இப்படி அது தானகத்தான் நடக்கும். நானும் விஷாலும் இணைந்து இதற்கு முன்பும் படங்கள் நடித்திருப்பதால் அவருடன் வேலை பார்ப்பது இன்னும் எளிதாக இருக்கும்.
'நான் கடவுள்' போல உங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய மாதிரியான நடிப்பை வெளிப்படுத்த கதைகளில் படங்கள் செய்திருந்தாலும், அந்த முயற்சிகள் கவனிக்கப்படாமல் போக நிஜத்தில் உங்களுடைய ஜாலியான குணாதிசியமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்து பார்க்க முடிகிறதே. அது உண்மைதானா?
நாம் படங்கள் நடிக்கிறோம். சில சமயங்களில் அந்த முயற்சிகள் கவனிக்கப்படாமல் போகின்றன. அதில் நிறைய விஷயங்கள், எண்ணங்கள் உள்ளே இருக்கலாம். அதனால், கூட அது மக்களிடம் போய் சேராமல் இருக்கும். ஆனால், படங்களில் சீரியஸான விஷயங்களை நிச்சயம் நாம் முயற்சி செய்ய வேண்டும். இந்த விமர்சனத்தையும் நேர்மறையாக எடுத்து கொள்ள வேண்டும்.
அடுத்த படங்கள்?
"'அரண்மனை3', 'எனிமி' என அடுத்து இரண்டு படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன".
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்