You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் பசுபதி பகிரும் நவம்பர் ஸ்டோரி' வெப் சீரிஸ் அனுபவங்கள்
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
நடிகர் பசுபதி என்றதுமே பலருக்கும் முதலில் நினைவில் வருவது அவருடைய கதாப்பாத்திரங்கள்தான். 'பட்டாசு' பாலு, கொத்தாள தேவர், முருகேசன், நெல்லை மணி, நெடுமாறன், அண்ணாச்சி, தற்போது வெளியாகியுள்ள 'நவம்பர் ஸ்டோரி' சீரிஸில் குழந்தை ஏசு என அனைத்து கதாப்பாத்திரங்களிலும் தனி முத்திரை பதித்தவர் அடுத்து 'சார்பட்டா', ரங்கன் வாத்தியார் ஆகியவற்றில் நடிப்பில் மிரட்ட இருக்கிறார். பிபிசி தமிழுக்காக ஆனந்தப்பிரியா நடிகர் பசுபதியுடன் உரையாடினார்.
அதில் இருந்து...
'நவம்பர் ஸ்டோரி' உங்களுடைய முதல் இணையத்தொடர். சினிமா- வெப்சீரிஸ் பயணம் எப்படி உள்ளது?
"'நவம்பர் ஸ்டோரி' கதை எனக்கு ரொம்ப பிடித்தது. இந்த படத்துடைய கதையும் களமும் வெகுஜன சினிமாவில் இதுவரை அதிகம் வராதது. இயக்குநர் கதையை கையாண்ட விதமும் வித்தியாசமாக இருந்தது. அதனால் படம் கண்டிப்பா நல்லா வரும் என எனக்கு தோன்றியது. ஆனால், அதை விட 'நவம்பர் ஸ்டோரி'க்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் சந்தோஷம். சினிமாவை பொறுத்த வரைக்கும் எல்லாருமே அவங்கவங்களுடைய வேலையை செய்வோம். ஆனால், நம் எல்லாருடைய வேலைகளையும் ஒருங்கிணைப்பது இயக்குநருடைய வேலையாக இருக்கும். அதேபோல், எப்பொழுதும் இயக்குநருடைய நடிகராக இருப்பதுதான் நடிகருடைய தர்மம், இலக்கணம்.
உதாரணமாக, ஒரு நாடகம் எடுக்கும்போது நாடகம் இப்படிதான் இருக்க வேண்டும் என தீர்மானிப்பது இயக்குநர்தானே, நடிகர்கள் இல்லையே - இயக்குநர்களுடைய கதையை உள்வாங்கி நடிப்பை வெளிக்கொண்டு வரனுமே தவிர இதுதான் நடிக்கனும் என இயக்குநர் நடித்து காட்டினால் அது தவறு. அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அது என்னுடைய வேலை. என்னுடைய கதாப்பாத்திரத்தை எனக்கு புரிய வைத்து நடிப்பை கொண்டு வருவதுதான் இயக்குநர் வேலை".
சினிமா- வெப்சீரிஸ் என வரும்போது நடிகர்களுக்கு ரசிகர்களிடம் இருக்கக்கூடிய ஈர்ப்பு குறைந்து விடுமோ என நினைத்தது உண்டா?
"இல்லை அப்படி எல்லாம் நினைத்தது இல்லை. ஆனாl, சினிமாவை விட இதில் வேலை அதிகம். சினிமாவில் 3 மணிநேரத்தில் ஒரு கதையை சொல்லி விடலாம். ஆனால், வெப்சீரிஸ்ஸில் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக ஒரு கதையை எடுத்து செல்வது சாதாரண விஷயம் கிடையாது. சினிமாவில் நீங்கள் ஆரம்பத்தில் சொன்ன கதைக்கான முடிச்சை கடைசியில் கூட அவிழ்க்கலாம். ஆனா, சீரிஸில் அப்படி கிடையாது. ஒவ்வொரு எபிசோடு முடியும் போதும் அடுத்து என்ன என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். அது இல்லை என்றால், அடுத்து ரசிகர்கள் அதை பார்க்க மாட்டார்கள். அதனால், இதில்தான் வேலையும் பொறுப்பும் அதிகம்.
இரண்டு மணி நேரத்தில் கதை கொடுக்க வேண்டும் என்ற அவசரம் இங்கே இல்லை. அதற்காக அதிக நேரம் இழுப்பதும் பார்வையாளர்களுக்கு அயர்ச்சியா இருக்கும். கதை எந்த அளவுக்கு சுவாரஸ்யமாக உள்ளது என்பதுதான் முக்கியம். மற்றபடி சினிமாவுக்கும் சீரிஸ்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை".
இப்போது தமிழ் சினிமா இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் ஓடிடி பக்கம் கவனம் செலுத்துவது குறித்து?
"வளர்ச்சி என்பது இருக்கதான் செய்யும். இது காலத்துடைய கட்டாயம். சீரியல் வந்த ஆரம்ப காலத்தில் 'சினிமா இனிமே இருக்காது' என சொன்னார்கள். அப்படியா நடந்தது? இல்லையே! எல்லாமே பரிணாம வளர்ச்சிதான். எந்த காலத்திலும் சினிமா இருக்கதான் செய்யும். இப்போது இருக்கக்கூடிய காலக்கட்டத்தில் ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்ப்பது என்பது கடினமான ஒரு காரியம். அப்படி இருக்கும்போது மாற்றம் வரதான் செய்யும். அந்த மாற்றத்திற்கு நீங்கள் எந்த அளவு தயார் என்பதுதான் விஷயம். மற்றபடி சினிமா என்பது நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் பார்க்கக்கூடிய பெரிய திரை அனுபவம். ஓடிடி நீங்கள் எப்போது வேண்டுமோ அப்போது பார்க்கலாம்".
'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்திற்கு முன்பு சில படங்கள் நடித்திருந்தாலும், அந்த படம் மூலமாகவே நடிகர் பசுபதி பரவலாக அறியப்பட்டார். அந்த அனுபவம் பற்றி கூறுங்களேன்?
"'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்திருப்பேன். ஆனாலும், அந்த படத்தில் என்னை பல பேர் கவனித்தார்கள் என்பது உண்மைதான். இதை விட, என்னுடைய ஆரம்பகாலத்தில் 'தூள்' படம் வெகுஜன மக்களிடையே இன்னும் பரவலாக கொண்டு போய் சேர்த்தது. பிறகு 'விருமாண்டி' எப்படி இருந்தது என உங்களுக்கே தெரியும்.
எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதை முழுதாக கற்றுக்கொண்டு செய்யும் போது தனிமரியாதை வரும். அது சரியான பாதையில் போகும். இது நடிப்பு துறைக்கு மட்டுமில்லை, எல்லா துறைகளுக்கும் பொருந்தும். அதற்கு சரியான பயிற்சி வேண்டும். அப்போது நீங்கள் பல விஷயங்களை தைரியமாக செய்ய முடியும்.
பலருக்கும் தொடக்கத்திலேயே சினிமாவில் நல்ல இடம் கிடைத்து விடும். சிலருக்கு அது நேரம் எடுக்கும். அப்படிதான் நாங்கள் பலரும் படிப்படியாக முன்னேறி வந்தோம். எல்லாருக்கும் எல்லாமே கிடைத்துவிடாது இல்லையா?"
'கன்னத்தில் முத்தமிட்டால்', 'இயற்கை', 'விருமாண்டி' மாதிரியான கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்கள் நடித்தீர்கள். அதே சமயம் 'தூள்', 'அருள்', 'சுள்ளான்' என அடுத்தடுத்து கமர்ஷியல் படங்களிலும் நடிக்க காரணம்?
"நடிகன் என்பவன் எல்லா கதாபாத்திரங்களும் நடிக்க வேண்டும். நமக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இருக்கலாம். ஆனா, நீங்கள் சொன்ன இந்த கமர்ஷியல் கதாப்பாத்திரங்கள்தான் அதிகம் உள்ளது எனும்போது அதில் இருந்து விலகி நிற்க முடியாது. என்னுடைய வயிற்றுக்கும் பண்ணனும். மூளைக்கும் நான் பார்க்கனும். ரெண்டும் சரிசமமா இருக்க வேண்டும் இல்லையா? எனக்கு வர கதைகளில் எனக்கு சிறந்தது எது என தோன்றுகிறதோ அதை தேர்வு செய்வேன். இங்கே சினிமாவில் பணம் போட்டு தானே படம் உருவாகுது? அப்போ எல்லாமே கமர்ஷியல் படங்கள்தான். எனவே, கமர்ஷியல் படங்கள் கமர்ஷியல் அல்லாத படங்கள் என எதுவுமே இல்லை. எந்த ஒரு சமரசமும் இல்லாமல் கதையை சொல்லக்கூடிய படங்கள், ஜாலியா இருக்கக்கூடிய படங்கள் என சொல்லலாம். இப்படி சொல்வது சரியா என்று கூட எனக்கு தெரியவில்லை.
எப்போதும் எனக்கு பிடிக்காத படங்கள்ல நான் நடித்தது கிடையாது. கமர்ஷியல் என நீங்க சொல்லக்கூடிய படங்களில் கூட சில தருணங்கள் உண்டு. அதற்காகதான் தேர்ந்தெடுப்பேனே தவிர பணத்திற்காக நான் என்றுமே படங்கள் நடித்தது கிடையாது. பணமும் நம்முடைய வாழ்க்கையில் வேண்டும். அதற்காக பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது".
கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் என்பதை தாண்டி இப்போ தமிழ் சினிமாவுடைய களம் கதைக்கு முக்கியத்துவம் தருவதை நோக்கி மாறியுள்ளதை கவனித்தீர்களா?
"தமிழ் சினிமாவை பொறுத்தவரை கதைக்கு ஆரம்ப காலத்தில் இருந்து முக்கியத்துவம் கொடுத்துட்டுதான் இருக்காங்க. நிறைய புது இயக்குநர்கள் வந்து புரட்சி எல்லாம் செய்து புது விஷயங்களை புகுத்தி இருக்காங்க. பாரதிராஜா, பாலசந்தர் மாதிரி நிறைய இயக்குநர்களை உதாரணம் சொல்லலாம். இடையில் சில காலம் அதுபோல இல்லாமல் இருக்கும், பிறகு திடீர் என வரும். இது அனிச்சையா நடக்கக்கூடியதுதான்.
அந்த காலத்தில் உலக சினிமாக்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், இப்போ எல்லாமே அவரவருடைய விரல் நுனியிலே உள்ளது. படங்கள் குறித்த தெளிவும் எல்லாரிடமும் உண்டு. இப்படி இருக்கும் போது சினிமாக்குள்ளே இருப்பவர்கள் பார்வையாளர்களை விட பல விஷயங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பலமடங்கு உழைக்க வேண்டும். அதுதான் இப்போ நடந்துட்டு இருக்குது. நல்ல விஷயம்தானே?"
இதுவரை நீங்கள் நடித்த கதாபாத்திரங்களிலேயே உங்களுக்கு பிடித்தது எது?
"ஒரு அப்பாக்கிட்ட போய், 'எந்த பிள்ளை உனக்கு பிடிக்கும்' என கேட்க முடியாது இல்லையா? அதுபோலதான் ஒரு நடிகனுக்கும் அவனுடைய கதாப்பாத்திரங்கள். நான் ஒரு நடிகன். என்னுடைய வேலை நடிப்பது. ஒரு கதாப்பாத்திரம் என்னிடம் வரும்போது, என்னால் இந்த கதாப்பாத்திரத்திற்கு என்ன நியாயம் செய்ய முடியும், பார்வையாளர்களை ஏற்று கொள்ள வைக்க முடியுமா என இது போன்ற விஷயங்களை மட்டுமே யோசிப்பேன். அதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டால், அது எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன். அதுபோலதான் நகைச்சுவை, குணச்சித்திர கதாப்பாத்திரங்கள், வில்லன் என எல்லா கதாப்பாத்திரங்களும் நடித்தேன்".
'பொன்னியின் செல்வன்' நாடகத்தில் ஆதித்திய கரிகாலனாக நடித்தீர்கள். இப்போது இயக்குநர் மணிரத்னம் எடுக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க அழைப்பு வந்ததா?
"அழைப்பு வந்தது. ஆனால், அப்போது பண்ண முடியாத ஒரு சூழல். 'நடிக்க முடியாமல் போயிருச்சே' என எந்தவொரு வருத்தமும் கிடையாது. நமக்கு என்ன கதாப்பாத்திரங்கள் என இருக்கோ அதை தானே பண்ண முடியும். நான் 'பொன்னியின் செல்வன்' நாடகத்திலேயே நடித்து விட்டேனே. வேற என்ன வேண்டும்? நீங்கள் கேட்பது போல, 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்க பலர் முயற்சி செய்தும் அது நடக்கவில்லைதான். அதை இப்போது ஒருவர் சாத்தியமாக்குவது சந்தோஷம்தானே"
வெற்றிமாறன் (அசுரன்), பா. ரஞ்சித்(சார்பட்டா பரம்பரை) என இப்போது தமிழ் சினிமாவுடைய முக்கியமான இயக்குநர்களுடைய படங்களில் நடிக்கற அனுபவம்?
"ஒவ்வொரு இயக்குநரிடமும் ஒவ்வொரு தனித்தன்மை, திறமை உள்ளது. அந்த வகையில, வெற்றிமாறன் ஒரு தனித்தன்மையான இயக்குநர். அவருடைய படங்கள் கவனித்த அனைவருக்கும் இது தெரியும். இயக்குநர் ரஞ்சித் இன்னொரு வகையில் மிகத்தீவிரமான இயக்குநர். 'சார்பட்டா பரம்பரை' ரொம்ப நல்லா வந்துருக்கு. ரஞ்சித் இதுவரை இயக்கிய படங்களில் இருந்து மாறுபட்ட படம் இது. இதுவரை அவர் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் இல்லாமல் இது வித்தியாசமான படமாக இருக்கும். என்னுடைய 'ரங்கன் வாத்தியார்' கதாப்பாத்திரம் ரொம்ப முக்கியமானது. படம் பார்க்கும்போது தெரிய வரும்.
வடசென்னையில் பாக்ஸிங்கை மையப்படுத்தின கதை இது. நானும் வடசென்னையை சேர்ந்தவன் என்பதால் அந்த மொழி, களம் எல்லாமே எனக்கு இன்னும் நெருக்கமானது. ரொம்ப மகிழ்ச்சியா இந்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன்".
கோவிட் 19-ஆல் ஏற்பட்டுள்ள பொது முடக்க காலம் உங்களை பாதித்திருக்கிறதா?
"உறவினர்கள், தெரிந்தவர்கள் என நமக்கு நெருக்கமான பலரையும் இழந்துட்டு இருக்கோம். தினசரி இந்த செய்திகளை கடந்து வருவது வருத்தமாதான் உள்ளது. கொரோனாவுக்கான சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது மட்டுமே அடுத்தவர்களுக்கு இப்போது நாம் செய்யக்கூடிய நன்மை. வீட்டிலேயே இருங்கள், வெளியே வராதீர்கள் என பலமுறை சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை. நீங்கள் அடுத்தவர்கள் குறித்துகூட நினைக்க வேண்டாம். உங்களை முதலில் பாதுகாப்பு செய்து கொள்ளுங்கள். குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள். ஏனெனில், இது மிக மோசமான காலக்கட்டம். பல பிரச்சனைகள் உள்ளது. அதில் இருந்து மீண்டு வர ஒரேவழி வீட்டுக்குள்ளேயே இருப்பதுதான். தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். பல கட்டமைக்கப்பட்ட தவறான கதைகள் தடுப்பூசி குறித்து உள்ளது. அதை எல்லாம் நம்புவதை விட்டுட்டு அரசு சொல்வதை மட்டும் செய்யுங்கள்" என்றார் பசுபதி.
பிற செய்திகள்:
- சீனாவில் வீகர் மக்கள் மீது பரிசோதிக்கப்பட்ட உணர்ச்சி கண்டறியும் மென்பொருள்
- அதார் பூனாவாலா: சீரம் தடுப்பூசி சாம்ராஜ்ஜியம் உருவானது எப்படி?
- விவசாயிகள் போராட்டம்: 6 மாத போராட்டத்தை நினைவூட்டும் காட்சிகள்
- ஆன்லைன் வகுப்பு புகார்கள்: முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த 5 உத்தரவுகள்
- இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை உச்சம் தொட்டு விட்டதா?
- கொரோனா தடுப்பூசி: ஆண்மை குறைவு, மாதவிடாய், மதுப்பழக்கம் - புரளிகளும் உண்மைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்