Sherni எப்படி உள்ளது? வித்யா பாலன் படத்தின் சினிமா விமர்சனம்

Amazon prime video india

பட மூலாதாரம், Amazon prime video india

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர்கள்: வித்யா பாலன், சரத் சக்ஸேனா, முகுல் சட்டா, விஜய் ராஸ்; ஒளிப்பதிவு: ராகேஷ் ஹரிதாஸ்; இயக்கம்: அமித் மாசூர்கர். வெளியீடு: அமெஸான் ப்ரைம்.

சினிமாவில் அதிகம் பேசப்படாத விஷயங்களை வைத்து மிக அரிதாகவே திரைப்படங்கள் வெளியாகும். அப்படி ஓர் அரிதான திரைப்படம்தான் (Sherni - பெண் புலி). சுலேமானி கீடா, நியூட்டன் படங்களை இயக்கிய அமித் மாசுர்கரின் அடுத்த படம் இது.

மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு புதிய காட்டிலாக அதிகாரியாக வருகிறார் வித்யா. அந்தத் தருணத்தில் பெண் புலி ஒன்று அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களை அடித்துக்கொல்ல ஆரம்பிக்கிறது. அந்தப் புலியை உயிருடன் வேறு இடத்திற்கு மாற்ற முயலும் வித்யாவின் முயற்சிகளுக்கு வரும் தடைகளும் அந்தத் தடைகளை அவரால் உடைக்க முடிகிறதா என்பதுமே படம்.

இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய இடத்திற்கு வரும் ஒரு காட்டிலாகா அதிகாரி தன் வேலையை நேர்மையாகவும் திறம்படவும் செய்வதற்கு எத்தனை பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற கதையைச் சொல்லும் படமாகவும் இதனைப் பார்க்க முடியும்.

சுருங்கிக்கொண்டே வரும் காடுகள், பேராசையுடன் வெட்டப்படும் கனிமச் சுரங்கங்கள், கிராமவாசிகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போவது, வனவிலங்குகளைப் பாதுகாக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு உள்ளூர் மட்ட அரசியல்வாதிகள் போடும் முட்டுக்கட்டைகள் என இரண்டரை மணி நேரத்திற்குள் பல விஷயங்களைப் பேசியிருக்கிறார் இயக்குநர்.

ஓர் ஆட்கொல்லிப் பெண் புலியை வனத்துறை காக்க முயல்கிறது; அரசியல்வாதிகள் கொல்ல முயல்கிறார்கள் என்ற ஒரு வரிக் கதைக்குள் பல்வேறு அடுக்குகளை வைத்து படத்தை முன்னெடுத்துச் செல்கிறார் மசூர்கர். திரைக்கதையும் காட்சியமைப்புகளும் படத்தை சிறப்பாக நகர்த்திச் செல்கின்றன. ஒற்றைக் காட்சியில் பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறார் இயக்குநர்.

வனத்தில் நடக்கும் ஒரு பிரச்னையை வைத்து, பல சமூக, அரசியல், சுற்றுச்சூழல் பிரச்னைகளை அநாயாசமாகச் சொல்கிறது படம். ஒரு வீராப்பான பெண் அதிகாரிக்கும் அரசியல்வாதிகளின் ஆதரவுபெற்ற கொலைகார வில்லனுக்கும் இடையிலான மோதலாக மாற்றி, தடதடக்க வைக்கும் க்ளைமாக்ஸில் கதாநாயகிக்கு வெற்றியைக் கொடுத்திருக்கலாம்.

Sherni movie review: Vidya Balan film

பட மூலாதாரம், Amazon prime video india

பார்வையாளர்களுக்கு அம்மாதிரி மோதல் வெகுவாக உற்சாகமூட்டவும்கூடும். ஆனால், அந்த பொழுதுபோக்கு வலையில் விழுந்துவிடாமல், எடுத்துக்கொண்ட கதைக்கு விசுவாசமாக, நம்பகத்தன்மையுடன் கூடிய ஒரு படத்தை முன்வைக்கிறார் இயக்குநர்.

இந்தியத் திரைப்படங்களில் பொதுவாகத் தென்படும் பெண்களை ஆண்களைவிட சற்று கீழானவர்களாகக் காட்டும் போக்கை உடைத்தெறிகிறது இந்தப் படம். இதையெல்லாம் சத்தமாக, பிரசாரத் தொனியோடு பேசாமல், ஒற்றைக் காட்சிகளில் செய்திருக்கிறார் இயக்குநர் என்பதுதான் இன்னும் வசீகரிக்கிறது.

படத்தின் டைட்டிலுக்கு அர்த்தம் பெண் புலி என்பது. இது காட்டில் உலவும் புலிக்கும் கதாநாயகிக்கும் பொருந்தும் வகையில் ஒரு பொதுப் பெயராக அமைகிறது. அந்த முதன்மைப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் வித்யா பாலன்.

அவர் மட்டுமல்ல, வில்லனாக வரும் சரத் சக்ஸேனா, விலங்கியல் துறை பேராசிரியராக வரும் விஜய் ராஸ், முதுகெலும்பில்லாத உயரதிகாரியாக வரும் ப்ரிஜேந்திர கலா என ஒவ்வொருவரும் படத்தை சிறப்பாக முன்னகர்த்துகிறார்கள்.

வார இறுதியில் ஓடிடியில் ஒரு நல்ல படத்தைப் பார்க்க விரும்பினால், ஷேர்னி அதற்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :