You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் பாண்டு காலமானார் - கொரோனா சிகிச்சையில் இருந்தவர்
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரும், ஓவியருமான நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 74.
கொரோனா தொற்று காரணமாக நடிகர் பாண்டுவும் அவரது மனைவி குமுதாவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், நடிகர் பாண்டு இன்று அதிகாலை உயிரிழந்திருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி குமுதா தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
சென்னை ஓவிய கல்லூரி மாணவரான பாண்டு தமிழில் 1970ல் வெளியான 'மாணவன்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு, 'பணக்காரன்', 'சின்ன தம்பி', 'ரிக்ஷா மாமா', கில்லி', 'போக்கிரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவரது வசன உச்சரிப்பும், நடிப்பும் தனித்தன்மை வாய்ந்தது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் 'இந்த நிலை மாறும்'. இவரது சகோதரர் 'இடிச்சபுளி' செல்வராஜும் நகைச்சுவை நடிகர். தென்னிந்தியாவில் ஓவியத்தில் ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கிய ஒரே நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் மகன்கள் பிண்டு, பிரபு, பஞ்சு இவர்களுடன் இணைந்து நிறுவனங்களுக்கு பெயர் பலகைகளை வடிவமைத்து தரும் நிறுவனத்தை சென்னையில் நடத்தி வந்தார் பாண்டு.
நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனக்கென தனி பாணியை கடைப்பிடித்த பாண்டு, சிறந்த ஓவியரும் கூட. இவரது சகோதரர் 'இடிச்சபுளி' செல்வராஜ் எம்.ஜி.ஆரிடம் உதவி இயக்குநராக இருந்தார். அவர் மூலமாக எம்.ஜி.ஆருக்கு அறிமுகமானார் பாண்டு. அதன் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த 'குமரிக்கோட்டம்', 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களில் ஓவியங்கள் வரைந்து கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆர். அதிமுக கட்சி தொடங்கியபோது, ஓவியராக அதிமுகவின் கொடியை வடிவமைத்தவர் பாண்டுதான். எம்.ஜி.ஆர். கேட்டு கொண்டதற்கு இணங்க ஒரு மணி நேரத்திலேயே இரவில் கொடியை வடிவமைத்துள்ளார். அதேபோல, அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையை வரைந்தவரும் இவர்தான்.
பிற செய்திகள் :தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் தற்போதைய சின்னமான குடையை கல்லூரி மாணவராக இருந்த போது பாண்டு வரைந்து கொடுத்தார். அதேபோல, சன் தொலைக்காட்சியின் சின்னம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட சின்னங்களை பல நிறுவனங்களுக்கு வடிவமைத்து கொடுத்திருக்கிறார். ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட பாண்டு, இந்த சின்னங்கள் வடிவமைப்பதை அதிகாலை 4-4.30 மணிக்கு மட்டுமே செய்வதை தனது வழக்கமாக கொண்டுள்ளார்.
- 78,000 ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை கண்டுபிடிப்பு
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
- இந்தியா, இலங்கை குடிமக்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை
- ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 13 பேர் பலியா? செங்கல்பட்டில் என்ன நடந்தது?
- ஸ்டாலினின் அமைச்சரவையில் புதிய முகங்கள் - யாருக்கு வாய்ப்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்