எதிர்கட்சி தலைவர் யார்? எடப்பாடி பழனிசாமியோடு மோதும் ஓபிஎஸ் - தொண்டர்கள் மனநிலை என்ன?

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, `எதிர்கட்சித் தலைவர் யார்?' என்ற மோதல், அ.தி.மு.கவில் வலுத்து வருகிறது. `முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்தது போல இதுவும் முடிவுக்கு வரும்' என அக்கட்சித் தொண்டர்கள் நம்புகின்றனர். என்ன நடக்கிறது?

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களில் வென்றுள்ளது. இதில் அ.தி.மு.க மட்டும் 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, 16 ஆவது சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் வரிசையில் அ.தி.மு.க அமர உள்ளது.

இந்நிலையில், வரும் 7ஆம் தேதி மாலை ராயப்பேட்டையில் உள்ள அ.இ.அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதேநேரம், கடந்த சில நாள்களாக எடப்பாடி பழனிசாமியின் சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வளர்மதி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வந்தனர். இதன்பிறகு பேசிய வளர்மதி, ` எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதைக் கட்சித் தலைமை கூடி முடிவு செய்யும்' என்றார்.

இந்த சூழலில், அ.தி.மு.கவின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி தேனியில் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்தினார். இதனால் அ.தி.மு.க முகாமில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

`கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதால் எதிர்கட்சித் தலைவராக ஓ.பி.எஸ் முன்னிறுத்தப்பட வேண்டும்' என அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

`கொங்கு மண்டலத்துக்கு அதிக எம்.எல்.ஏக்கள் கிடைத்திருப்பதால் எடப்பாடியின் கை கட்சிக்குள் ஓங்கியிருக்கிறது. அப்படியிருக்கையில், எடப்பாடி சொல்வதைத்தான் கொங்கு எம்.எல்.ஏக்கள் கேட்பார்கள். முதல்வர் வேட்பாளராக தன்னுடைய தலைமையை எடப்பாடி நிரூபித்துவிட்டார். எதிர்கட்சித் தலைவர் வரிசையில் அவர் அமர்வதுதான் சரியாக இருக்கும்' என சேலம் மாவட்ட அ.தி.மு.கவினர் பேசி வருகின்றனர்.

`ஏன் இப்படியொரு குழப்பம்?' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

`` எந்தவிதக் குழப்பங்களும் இல்லை. கட்சியை அமைதியாக வழிநடத்திச் செல்லக் கூடியவராக ஓ.பி.எஸ் இருக்கிறார். அவரே எதிர்கட்சித் தலைவர் வரிசையில் அமர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்".

`முதல்வர் வேட்பாளராக எடப்பாடி முன்னிறுத்தப்பட்டார். கொங்கு மண்டலத்தில் கிடைத்த வெற்றியே அ.தி.மு.கவுக்கு வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது. அப்படியானால் எடப்பாடிதானே முன்னிறுத்தப்பட வேண்டும்?'

``கட்சி முடிவு செய்து தான் வேட்பாளர்களை நிறுத்தியது. அதில் இருவருமே கையொப்பமிட்டார்கள். அதில் பலர் வெற்றி பெற்றார்கள்; பலர் தோல்வியடைந்தார்கள். இதில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அப்படியொரு முக்கியத்துவம் எங்கிருந்து வருகிறது? ஜனநாயகத்தில் வெற்றி என்பது நிரந்தரமானது அல்ல. 10 வருடங்கள் ஆட்சியில் இருந்ததால் மக்கள் ஒரு மாற்றத்தைக் கொடுத்து விட்டனர்.

மேலும், `வன்னிய சமூக மக்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை தற்காலிகமாக அறிவித்திருக்கிறோம்,' என முதல்வர் தெரிவித்தார். அதை நல்லெண்ண அடிப்படையில் அறிவித்திருந்தாலும் பிற சமூகத்தினர் வேறு கண்ணோட்டத்தில் பார்த்தனர். இதை ஓ.பி.எஸ்ஸே குறிப்பிட்டார். தோல்விக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். அமைச்சர்களில் எத்தனை பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

`எடப்பாடி பக்கம்தானே அதிகப்படியான எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்?'

`` நான் சொல்ல வருவது என்னவென்றால், சட்டமன்றத்தில் பல ஆண்டுகால அனுபவம்மிக்கவராக ஓ.பி.எஸ் இருக்கிறார். அம்மாவால் பாராட்டுப் பெற்ற மனிதராகவும் இருக்கிறார். அவரிடம் அம்மா பலமுறை கலந்து ஆலோசனை செய்துள்ளார். சட்டமன்றத்தில் எதையும் அமைதியாக எதிர்கொள்வராகவும் இருக்கிறார். அதனால்தான், அவர் முன்னிறுத்தப்பட வேண்டும் என்கிறேன்.

`எதிர்க்கட்சித் தலைவராக தனது பெயர் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என ஓ.பி.எஸ் நினைக்கிறாரா?'

``அது பற்றி எனக்குத் தெரியவில்லை. `என்னை முன்னிறுத்துங்கள்' என எந்த இடத்திலும் ஓ.பி.எஸ் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமியும் சொல்லவில்லை. நாளை மறுநாள் கூடுகின்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. அதேநேரம், முதல்வராக நான்கு ஆண்டுகள் சிறப்பாக ஆட்சியை பழனிசாமி நடத்திக் கொடுத்துவிட்டார். இதன்பின்னர், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். என்னைப் பொறுத்தவரையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்தான் சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக இருக்க வேண்டும்," என்கிறார்.

`எதிர்கட்சித் தலைவர் யார் என்ற மோதல் முடிவுக்கு வருமா?' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதைக் கட்சித் தலைமை பேசி முடிவு செய்யும். எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், வழிகாட்டும் குழு, ஆட்சி மன்றக் குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து பேசி முடிவெடுப்பார்கள். பதவிகளுக்கு அனைவரும் ஆசைப்படலாம். ஆனால், யார் வர வேண்டும் என்பதை தலைமையில் பேசி முடிவு செய்வார்கள். எங்களை பலவீனப்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகள் செய்யும் வேலை இது," என்கிறார்.

`எதிர்கட்சிகள் அல்ல, உங்கள் கட்சியிலேயேதான் பேசுகிறார்கள்' என்றோம். ``அவரவர்களுக்கு எனத் தனிப்பட்ட நிலைப்பாடு இருக்கும். அது அவர்களின் சொந்தக் கருத்தாக இருக்கும். கட்சி ஒரு முடிவை எடுத்த பிறகு அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: