You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கமல்ஹாசனை வீழ்த்த வானதிக்கு உதவிய கடைசி 4 சுற்றுகள் - கோவை தெற்கு பரபரப்பு முடிவுகள்
கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் களம் கண்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.
மொத்தம் நடந்த 26 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், வானதி சீனிவாசன் 1,728 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அந்த தொகுதியில் மொத்தம் பதிவான 1,54,765 வாக்குகள், 26 சுற்றுகளாக எண்ணப்பட்டன.
இதன் முடிவில் 53,209 வாக்குகளுடன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் முதலிடம் பிடித்தார். 51,481 வாக்குகளைப் பெற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் இரண்டாம் இடத்தில் இருந்தார். 42,383 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மூன்றாம் இடத்தில் இருந்தார்.
இந்த முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் அலுவலர்கள் மூலம் கிடைத்த தகவலைத் தொடர்ந்து தமது ட்விட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் வானதி ஸ்ரீனிவாசன்.
முன்னதாக, இந்த தொகுதியில் காலையில் இருந்து பிற்பகல் வரை வாக்குகள் எண்ணப்பட்டபோது, வானதி, காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் ஆகியோரை விட ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் என்ற அளவில் கமல்ஹாசன் முன்னிலை வகித்தார். இதனால் புன்னகையுடனேயே அவர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் காணப்பட்டார்.
ஆனால், மாலை 5 மணிக்கு பிறகு 22ஆவது சுற்று எண்ணத்தொடங்கியபோது, கமலையும், மயூரா ஜெயகுமாரையும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு வானதி முன்னேறினார். 25, 26 என கடைசி சுற்று நெருங்கியபோது இரண்டாமிடத்தில் இருந்த கமலை விட அதிக வாக்குகளை வானதி பெற்றதைத் தொடர்ந்து அவரது வெற்றி உறுதியானது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைமுறையை முதல் முறையாக பார்க்கும் கமல், ஒரு வேட்பாளராக அந்த அரங்கின் முகவர், வேட்பாளர்கள் அமர ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்தவாறு வாக்குகள் அறிவிக்கப்படும் தகவலை ஒரு நோட்புக்கில் குறிப்பெடுத்துக் கொண்டே இருந்தார். கடைசி இரு சுற்றுகளின்போது எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாதவராக காணப்பட்ட கமல், தமது கடைசி சுற்று தகவலையும் குறிப்பெடுத்துக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றார்.
தொடர் தோல்வியிலும் துவளாத கமல்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, 142 இடங்களில் போட்டியிட்டது.
முன்னதாக, இவரது கட்சி 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலிலும் களம் கண்டது. அதில் எந்த தொகுதியிலும் வெற்ற பெற முடியாதபோதும், 3.72 வாக்குகள் சதவீதத்தை அந்த கட்சி பெற்றது. மக்களவை தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கிய கமல் ஹாசன் அதில் போட்டியிடவில்லை.
தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை 2018ஆம் ஆண்டில் தொடங்கினார் கமல்ஹாசன். அடுத்த ஓராண்டிலேய அவரது கட்சி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது. ஒரு வேட்பாளர் கூட வெற்றி பெறாதபோதும் மனம் தளராமல் சட்டப்பேரவை தேர்தலிலும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து கமல் கட்சி தேர்தல் களம் கண்டது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும் கமல் ஹாசன் நேரடியாக பிரசாரம் செய்தார். ஆனால், தேர்தல் முடிவுகள், அவருக்கோ அவர் சார்ந்த கட்சிக்கோ வெற்றி வாய்ப்பை தரவில்லை.
முன்னதாக, வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன், முடிவுகள் எப்படி வந்தாலும் தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம் என்று கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு தேர்தல்: "வாருங்கள் சேர்ந்து உழைக்கலாம்" - மு.க. ஸ்டாலினுக்கு மோதி அழைப்பு
- "நான் அவர்களிடம் படுக்கை கேட்டேன், அவர்கள் எனக்குச் சடலங்களைக் காட்டினார்கள்"
- கொரோனா தடுப்பூசி தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்து கொள்ள முடியுமா?
- என்ஜிடி நிபுணத்துவ உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்த கிரிஜா வைத்தியநாதன்
- 18 வயதுக்கு மேல் கொரோனா தடுப்பூசி: மோதி அரசின் அறிவிப்பை செயல்படுத்த மாநிலங்கள் தயாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: