You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"நான் அவர்களிடம் படுக்கை கேட்டேன், அவர்கள் எனக்கு சடலங்களை காட்டினார்கள்"
- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி
கிராமமோ நகரமோ, தற்சமயம், நாடு முழுவதிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மற்றும் மருத்துவமனைகளின் ஐ சி யூ மற்றும் வென்டிலேட்டர்கள் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால், இவை கிடைப்பது அரிதாகிறது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில், இவற்றின் பற்றாக்குறையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் பலர் சுகாதார வசதிகள் பற்றாக்குறையால் உயிரிழந்தனர்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், ஆயிரக்கணக்கானவர்களின் இன்றைய நிலையை இந்த இருவரின் கதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
நிதி ஷர்மா, தில்லி
எங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. எங்களது பணமோ செல்வாக்கோ எதுவும் எடுபடவில்லை. ஒரு தலைவர் தொலைபேசியில், " நான் ஒரு தலைவர். படுக்கை ஏற்பாடு செய்வது என் வேலை இல்லை. இனி ஒரு முறை தொந்தரவு செய்ய வேண்டாம்" என்று கூறினார்.
காலையில், என் மாமியார் பினா ஷர்மாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கியது.
தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் விசாரித்தபோது, அங்கு எங்குமே ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை எதுவும் இல்லை என்று தெரிய வந்தது.
பின்னர் அவரை குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவருக்கு ஆக்ஸிஜன் வைக்கப்பட்டது. ஆனால், பத்தே நிமிடங்களில், அவருடைய நுரையீரல் 60 சதவீதம் சேதமடைந்துள்ளதாகவும் அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறும் கூறி கை விரித்து விட்டார்கள்.
பின்னர் தொடர் தொலைபேசி அழைப்புகளுக்குப் பிறகு, எப்படியோ ஆக்சிஜனுடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்தோம். வேறு மருத்துவமனைக்குப் புறப்பட்டோம்.
நாங்கள் அங்கு சென்ற நேரத்தில், அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய படுக்கை வேறு ஒரு நோயாளிக்கு வழங்கப்பட்டிருந்தது. மிகவும் கெஞ்சிய பிறகு, அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆக்ஸிஜனைக் கொடுக்கத் தொடங்கினர்.
ஆனால் சிறிது நேரத்தில் நிலை மோசமாக இருப்பதாகவும் வென்டிலேட்டர் தேவை என்றும், இவர் பிழைக்க மாட்டார், அழைத்துச் செல்லுங்கள் என்றும் கூறினார்கள்.
அவருக்கு 55 வயதுதான். இதை அவர்களது வாயால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர் என் கையைப் பிடித்து, மகளே, எல்லாவற்றையும் நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள் என்றார்.
அவர்கள் கைவிட்டிருக்கலாம். ஆனால் நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அப்போது ஒரு வென்டிலேட்டர் மற்றும் ஒரு மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸ் தேவைப்பட்டது.
'அந்தப் பயங்கரமான சம்பவத்தின் நினைவு இன்னும் என்னை இரவில் தூங்கவிடுவதில்லை.'
அதிக பணம் கொடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைத்து அரசு மருத்துவமனையான ஜிடிபி மருத்துவமனைக்குச் சென்றோம். செல்லும் வழியெல்லாம், ஹெல்ப்லைனுக்குத் தொடர்பு கொண்டு, அங்கு படுக்கை இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டே சென்றோம்.
23 படுக்கைகள் உள்ளன என்று எங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறப்பட்டது. ஆனால் நாங்கள் வந்ததும், ஆம்புலன்சில் இருந்து இறங்குவதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. ஹெல்ப்லைன் தவறான தகவல்களைத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்பட்டது.
இங்கு படுக்கை இருக்கிறது என்ற ஒரே நம்பிக்கையில் ஒரு மணி நேரமாகப் பயணம் செய்து வந்ததாகக் கையெடுத்துக் கும்பிட்டு, அழுது கொண்டே கூறினேன்.
ஆனால் அந்த மருத்துவர் இங்கே படுக்கைகள் இல்லை என்று கூறினார். மருத்துவமனையின் பின்புறம் என்னை அழைத்துச் சென்று அறைக் கதவைத் திறந்து, இங்கே இறந்த உடல்கள் மட்டுமே உள்ளன என்றார்.
நான் என் வாழ்க்கையில் பல சடலங்களை ஒன்றாக பார்த்ததில்லை. அந்தக் கொடுமையான காட்சி இன்னும் என்னை இரவில் தூங்க விடவில்லை. மனதில் மீண்டும் மீண்டும் வருகிறது.
அந்த மூன்றாவது மருத்துவமனையிலிருந்து விரக்தியடைந்த நாங்கள் இறுதியாக எங்கள் தொடர்புகளின் உதவியுடன் ஒரு மருத்துவமனையில் வென்டிலேட்டர் படுக்கையைப் பெற்றோம், ஆனால் அதற்குள் தாமதமாகிவிட்டது.
எங்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இப்போது, என் இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உட்பட வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரொனா.
இப்போது எனக்கு அழைப்புகள் வருகின்றன. ஆக்சிஜன் எங்கிருந்து கிடைக்கும், எந்த கிளினிக்குகளில் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும், ஆம்புலன்ஸ்-க்கு யாரை அணுக வேண்டும் என்று கேட்கிறார்கள்.
எனக்குத் தெரிந்தவரை அவர்களிடம் சொல்கிறேன்.
சச்சின் சைனி, பலடி கிராமம், முசாஃபர்பூர், உத்தரப்பிரதேசம்
எனது மனைவி அஞ்சலி ஆறு மாதங்கள் கர்ப்பமாக இருந்தார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள், மூன்று வயது மகன் மற்றும் ஒரு ஐந்து வயது மகள் உள்ளனர், அவள் இந்தக் குழந்தையை என் சகோதரிக்குக் கொடுப்பதாக இருந்தாள். ஆனால், அதற்குள் அவள் இந்தக் கொடுமையான நோய்க்குப் பலியாகிவிட்டாள்.
சில நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனா இருந்தது. எனவே அஞ்சலிக்கும் பரிசோதனை செய்தோம். ஆன்டிஜென் சோதனையில் நெகடிவ் வந்தது. ஆர்.டி.பி.சி.ஆரின் முடிவுக்காகக் காத்திருந்தோம்.
இதற்கிடையில், அவளுக்கு இருமல் ஏற்பட்டது, ஆக்சிஜன் அளவு 85 ஆக குறைந்தது. நாங்கள் கிராமத்தில் உள்ள தனியார் கிளினிக்குக்கு அழைத்துச் சென்றபோது, அது நிச்சயமாக கொரோனாதான் என்றும் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் சொல்லிவிட்டார்கள்.
நாங்கள் அவரை ஆம்புலன்சில் ஒரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, நெகடிவ் என்று வந்தது. இங்கு அனுமதிக்க முடியாது, மாவட்ட மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று கூறினார்கள்.
மிகவும் கெஞ்சிய பிறகு, இரண்டரை மணி நேரம் கழித்து, அவசர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. பின்னர் ஆன்டிஜென் சோதனை செய்யப்பட்டது, அது மீண்டும் நெகடிவ் ஆக வந்தது. அதனால் அங்கும் அனுமதி இல்லை.
பின்னர் நாங்கள் ஆம்புலன்சில் முசாபர்நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு அவருக்கு மீண்டும் சோதனை செய்ததில், இந்த முறை கொரொனா உறுதியானது.
இப்போது மாவட்ட மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்து, மீண்டும் பெகராஜ்பூர் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்கள்.
அந்த பாசிடிவ் அறிக்கையுடன், நான் மீண்டும் அவளை அழைத்துச் சென்றேன். இந்த முறை அதே மருத்துவமனையில் அனுமது கிடைத்தது. ஆனால் சில மணி நேரங்களுக்குள் அவள் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், வென்டிலேட்டரில் வைக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
எங்கள் குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கவில்லை என்றும் கருவிலேயே அது இறந்துவிட்டதாகவும் தகவல் கூறினார்கள்.
பின்னர் என் மனைவியில் இதய துடிப்பும் நின்றுவிட்டது என்று எனக்கு அழைப்பு வந்தது. என் அஞ்சலி தனது இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு சென்றுவிட்டாள்.
நான் அவளை அந்த இரண்டு மருத்துவமனைகளுக்கு இடையில் மூன்று நாட்கள் சுற்றிக் கொண்டே இருந்தேன். சோதனை முடிவுகளும் மாறிக்கொண்டே இருந்தன. அவளது உடல்நிலையும் தொடர்ந்து மோசமடைந்தது.
அவளுக்கு அந்த மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், அவள் உயிர் பிழைத்திருக்கலாம்.
இந்த வைரஸ் ஒரு உயிர்கொல்லி தான். ஆனால் அதை விடக் கொடுமையானது நமது அமைப்பு, இது நம்மை வென்று விட்டது.
இப்போது நான் என் குழந்தைகளைப் பார்த்து, அவர்களால் சிறப்பாக ஏதாவது செய்ய முடியும் என்று நினைக்கிறேன். நான் அவர்களை ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் படிக்க வைப்பேன். ஒருவேளை ஒன்றாக இணைந்து நாம் இந்த அமைப்பைச் சரிசெய்ய முடியும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: