You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
என்ஜிடி நிபுணத்துவ உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்த கிரிஜா வைத்தியநாதன்
தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து அந்த பதவிக்கு கே. சத்யகோபால் என்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கிரிஜா வைத்தியநாதனை பிபிசி தமிழ் புதன்கிழமை இரவு தொடர்பு கொண்டு பேசியபோது, "நான் பதவி ஏற்க மறுத்த தகவல் உண்மைதான்," என்று உறுதிப்படுத்தினார்.
ஆனால், எதற்காக அந்த பதவியை ஏற்கவில்லை என்பது குறித்த கருத்தை அவர் வெளியிட விரும்பவில்லை.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் நிபுணத்துவ உறுப்பினர் பதவிக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்வான கிரிஜா வைத்தியநாதனுக்கு, அப்பதவிக்குரிய தகுதியோ அனுபவமோ இல்லை என்று கூறி தமிழகத்தைச் சேர்ந்த பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக குரல் கொடுக்கும் அமைப்பின் ஜி. சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நிபுணத்துவ உறுப்பினராக இருப்பவர், சுற்றுச்சூழல் பணியில் ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று என்ஜிடி விதிகளில் உள்ளதாகக் கூறி சுந்தர்ராஜன் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
அந்த பதவியை கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கிரிஜா வைத்தியநாதன் ஏற்கவிருந்த நிலையில், மறுஉத்தரவு வரும்வரை புதிய பதவியை ஏற்க கிரிஜா வைத்தியநாதனுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இருப்பினும், அடுத்து நடந்த விசாரணைகளின்போது, கிரிஜா வைத்தியநாதன் மாநில அரசின் தலைமைச் செயலாளராக இருந்தபோது சுற்றுச்சூழல் விவகாரங்களை கவனித்தவர் என்றும் தமது அரசுத்துறை அனுபவத்தில் சுற்றுச்சூழல் துறை செயலாளராக அவர் பதவி வகித்துள்ளார் என்றும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்று, கிரிஜா வைத்தியநாதனுக்கு நிபுணத்துவ உறுப்பினர் பதவியை வகிக்க தகுதி இருப்பதாகக் கூறி உயர் நீதிமன்றம் கடந்த 18ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோதும், புதிய பதவியை ஏற்காமல் கிரிஜா வைத்தியநாதன் தவிர்த்திருக்கிறார்.
இந்திய ஆட்சிப்பணியில் 1981ஆம் ஆண்டு தமிழக பிரிவைச் சேர்ந்த கிரிஜா வைத்தியநாதன், 38 ஆண்டுகால அரசுத்துறைப் பணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சென்னை ஐஐடியில் அவர் 1981ஆம் ஆண்டு இயற்பியல் முதுகலை பட்டமும், மனிதாபிமான சேவை மற்றும் சமூக அறிவியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழக அரசின் தலைமை செயலாளராக 2016 முதல் 2019ஆம் ஆண்டுவரை அவர் பதவி வகித்தார்.
2016ஆம் ஆண்டில், தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவின் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.8.6.16 அன்று தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட ராம மோகனராவ் 22.12.16 அன்று அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஒரு மாநில அரசின் தலைமை செயலாளர் வீடு மற்றும் அலுவலக அறையில் வருமான வரித்துறை சோதனை நடந்தது அதுவே முதல் முறையாக பார்க்கப்பட்டது. இந்தப்பின்னணயில்தான் யாரும் எதிர்பார்க்காத வேளையில், கிரிஜா வைத்தியநாதன் தலைமை செயலாளர் பதவிக்கு நியமிக்கப்ட்டார்.
அரசியல் பின்புலம் இல்லாதபோதும் தலைமை செயலாளர் பதவிக்கு வேறு சில அதிகாரிகள் தகுதி பெற்றிருந்தபோதும் திடீரென கிரிஜா வைத்தியநாதன் அரசுத்துறையின் தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்டது அப்போது சர்ச்சையாக பேசப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிந்தைய அரசியல் நிகழ்வுகள், ஆட்சித் தலைமை மற்றம் என பல முக்கிய நிகழ்வுகளுக்கு சாட்சியாக கிரிஜா வைத்தியநாதன் இருந்திருந்தார்.
பிற செய்திகள்:
- கொரோனா ஆக்சிஜன்: ஸ்டெர்லைட் ஆலையை இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
- கொரோனா தடுப்பூசி: 18-45 வயதுடையவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் பதிவு
- ஸ்புட்னிக் V, கோவிஷீல்ட், கோவேக்சின்: இந்தியாவில் இருக்கும் தடுப்பூசிகள் குறித்து நமக்கு என்ன தெரியும்?
- "வீட்டிலேயும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் வந்துவிட்டது"
- கொரோனா: கேரளாவில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி சாத்தியமானது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: