யூ டியூபில் மாஸ்டர் படத்தை பின்னுக்குத் தள்ளிய கேஜிஎப்2

தமிழ் திரைப்படங்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் அடங்கிய தொகுப்பு இது.

கே.ஜி.எப் படத்தின் டீஸர் கடந்த 24 மணி நேரத்தில், 10 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூபில் சாதனை படைத்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது இப்படம். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். தற்போது கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

டீஸர் வெளியான நேரத்திலிருந்து, யூடியூப்பில் ட்ரெண்டில் முதலிடத்தில் இருந்த இந்த டீஸரானது தற்போது 24 மணிநேரத்தில் 10 கோடி (100 மில்லியன்) பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி நடிகையாக நடிக்கும் புதிய படத்துக்கு 'டிரைவர் ஜமுனா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள அந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக, எஸ்.பி.செளத்ரி தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு, இசை ஜிப்ரான். கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

தனுஷ் நடிக்கும் டி43

கார்த்திக் நரேன் இயக்கும் 'தனுஷ் 43' படத்தின் ஷூட்டிங் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படத்தில் மாளவிகா மோகனன் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

பிரபல பாடலாசியரான விவேக் இந்த படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுத உள்ளார் என்று சத்ய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரகனி இந்த படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் டி43 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதன் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மீண்டும் தொடங்கிய `பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு!

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு ஜனவரி 6-ஆம் தேதி முதல் மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்தில் எடுக்கப்பட்டது.

திட்டமிட்டபடி சில காட்சிகள் அங்கு 90 நாட்களுக்கு மேல் படமாக்கப்பட்டது. நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் அந்த படப்பிடில் பங்கேற்றனர்.இதுவரை நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, அமிதாப் பச்சன், மோகன் பாபு மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆதித்ய கரிகாலனாக நடிகர் விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கிறார்கள்.

ஓடிடியில் வெளியாகிறது செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை'

செல்வராகவன் இயக்கத்தில் எடுக்கப்பட்டு நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டே உருவான திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு நெஞ்சம் மறப்பதில்லை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதுதான் புதுத் தகவல்.

ஹீரோவாக செந்தில்!

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுரேஷ் சங்கையா, விதார்த், ரவீனா நடிப்பில் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.இப்படத்தைத் தொடர்ந்து சுரேஷ் சங்கையா நடிகர் பிரேம்ஜியை வைத்து 'சத்திய சோதனை' படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில்தான் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார். 'சத்திய சோதனை' படத்தை தயாரித்த சமீரா பரத்ராம்தான் இப்படத்தையும் தயாரித்திருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்திலும் செந்திலுடன் இருக்கும் புகைப்படத்தை தயாரிப்பாளர் பகிர்ந்து அதிகாரபூர்வமாக உறுதி செய்திருக்கிறார்.

'காடன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'கும்கி' திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 'காடன்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார்.

3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும்,ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தினமும் 20 யானைகளை வைத்து தாய்லாந்து, கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரும் காடுகள், மலைகளில் படமாக்கியுள்ளது படக்குழு. ஏற்கெனவே ஏப்ரல் 2-ம் தேதி திரைக்கு வரும் என்ற அறிவிக்கப்பட்ட இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது.

இந்நிலையில் மார்ச் 26-ஆம் தேதி 'காடன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :