You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தோனீசிய பயணிகள் விமானம் கடலில் விழுந்ததாக அச்சம்: 62 பேர் நிலை என்ன?
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 62 பேரோடு சனிக்கிழமை பிற்பகல் புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம் கடலில் விழுந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.
கிளம்பிய நான்கே நிமிடங்களில் அந்த விமானத்தின் தொடர்பு அறுந்தது.
ஸ்ரீ விஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம் அதே நாட்டில் உள்ள மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
போர்னியா தீவின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த நகருக்கு செல்வதற்கான பயண நேரம் வழக்கமாக ஒன்றரை மணி நேரம்.
கிளம்பிய சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு நிலையத்துடன் அந்த விமானத்தின் தொடர்பு அறுந்தது.
உள்ளூர் நேரப்படி பகல் 2.40 மணிக்கு (கிரீன்விச் சராசரி நேரம்-7.40) அந்த விமானத்தோடு கடைசி தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.
விமானத்தின் சிதைவுகள் என்று தோன்றும் படங்கள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படுகின்றன.
அந்த விமானம் பறந்துகொண்டிருந்த உயரம் திடீரென ஒரே நிமிடத்தில் 10 ஆயிரம் அடி குறைந்தது என்கிறது விமான கண்காணிப்பு இணைய தளமான Flightradar24.com.
விமானத்தில் சிதைவுகளா? - அதிகாரி என்ன சொல்கிறார்?
லகி தீவு முதல் லேன்காங் தீவு வரையில் மீட்புதவிப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை (Basarnas) அதிகாரி பம்பாங் சூர்யோ அஜி தெரிவித்துள்ளார்.
இந்த இடம், பேன்டன் மாகாணத்தில் உள்ள தன்ஜுங் கெய்ட் என்ற இடத்தில் இருந்து 3 மைல் தொலைவில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
விமானத்தின் சிதைவுகளைப் போலத் தோன்றும் பொருள்கள் தென்படுவதாக அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் அவை உறுதியாக விமானத்தின் சிதைவுகளா என்பதை சரிபார்த்துவருவதாகவும் அவர் கூறினார்.
"சரியாக எந்த இடத்தில் விமானம் விழுந்தது என்பதைக் கண்டுபிடிக்க முயன்று வருகிறோம். இன்றிரவு அதனைக் கண்டுபிடித்துவிட முடியும். மேலே குறிப்பிட்ட தீவுகளுக்கு இடையில் கடலின் ஆழம் சுமார் 20-23 மீட்டர் இருக்கும்" என்றும் பாம்பாங் கூறினார்.
காணாமல் போன விமானத்தில் 50 பயணிகள், 12 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்களில் 7 பேர் சிறார்கள், 3 பேர் குழந்தைகள் என்றும் இந்தோனீசிய போக்குவரத்து அமைச்சர் புடி கர்ய சுமாடி தெரிவித்தார்.
தீவு வாசிகள் கூறுவது என்ன?
விமானம் காணாமல் போன இடத்துக்கு அருகே உள்ள ஒரு தீவினைச் சேர்ந்த பலர் விமானத்தின் பாகங்கள் போன்று தோன்றும் பொருள்களைப் பார்த்ததாக பிபிசி இந்தோனீசிய சேவையிடம் தெரிவித்துள்ளனர்.
தேடுதல், மீட்புப் பணிகள் நடந்து வருவதாக அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானம் குறித்த தகவல்களைப் பெற முயன்றுவருவதாக இந்தோனீசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீவிஜயா ஏர் தெரிவித்துள்ளது. இது இந்தோனீசியாவுக்கு உள்ளேயும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் குறைந்த கட்டண விமானங்களை இயக்கும் நிறுவனம் ஆகும்.
விமானம் எந்த வகை?
இந்த விமானம் போயிங் விமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றாலும், சமீப ஆண்டுகளில் அடுத்தடுத்த விபத்துகளால் சர்ச்சைக்குள்ளான 737 மேக்ஸ் ரகம் அல்ல.
பதிவுத் தகவல்களின் படி 26 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த விமானத்தின் மாடல் போயிங் 737-500.
2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் இன்னொரு இந்தோனீசிய விமான சேவை நிறுவனமான லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து 189 பேர் இறந்தனர்.
பிற செய்திகள்:
- "திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி; 100% தேவையற்ற ஒன்று" - சுயநலத்துக்காக அரசியல் செய்கிறதா திரைத்துறை?
- பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை திடீர் ரத்து - தலைமை விருந்தினரின்றி குடியரசு தின விழா
- தலை முடி உதிர்வுக்கு தீர்வு என்ன?
- "திரையரங்கில் 100% பார்வையாளர்கள் தற்கொலைக்கு சமம்" - மருத்துவரின் ஆதங்க பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்