You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தலை முடி ஏன் கொட்டுகிறது? அதற்கு என்ன தான் தீர்வு?
- எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
- பதவி, பிபிசி தமிழ்
மக்கள் பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தலை முடி உதிர்வு. இயற்கை மருந்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ளும் மருந்து என பலரும் முடி உதிர்வை தவிர்க்க முயல்கின்றனர். இதற்கு துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுவது என்ன என்று பார்ப்போம்.
உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை இருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது? எவ்வளவு முடி கொட்டினால் முடி கொட்டும் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்? கொட்டிய மீண்டும் முடி நன்கு வளர என்ன செய்யலாம்? என பல கேள்விகள் குறித்து விளக்குகிறார் அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.
"தினமும் 50-80 முடிகள் உதிர்ந்தால், அது இயல்பே. அதுகூட விழக்கூடாது என்று நம்மால் எதிர்பார்க்க முடியாது. காரணம், அது முடி வளர்ந்து விழுவதின் சுழற்சி. இந்த முறையை ஆனாஜென்,கெடாஜென் மற்றும் டெலோஜென் என்று கூறுவார்கள். ஆனாஜென் என்பது, முடி வளரும் நிலை, கெடாஜென் என்பதில் முடி மேற்கொண்டு வளராது, விழவும் விழாது ஆனால், டெலாஜென் என்ற கட்டத்தை அடையும் போது முடி உதிர்ந்துவிடும். இவ்வாறு உள்ள இந்த சுழற்சியில், ஒருவருக்கு ஒரு நாளுக்கு 100 முடிகள் வரை கொட்டலாம். ஆனால் அதற்கும் மேலாக, 150 முடிகளோ அல்லது நீங்கள் ஒவ்வொரு முறையும் வாரும்போதோ முடி உதிர்ந்தால், முடியின் மீது கவனம் செலுத்தும் நேரம் வந்து விட்டது என்று அர்த்தம்" என்கிறார் அழகுக்கலை நிபுணரான வசுந்தரா.
"சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முடி கொட்டும். உடலில் சத்துகள் சரியாக இல்லை என்றால் முடிகொட்டும். டைபாய்ட், ஜாண்டிஸ் மாதிரி நோய் வந்தவர்களுக்கு, நோய் தாக்கியபோது கொட்டாமல், முடி டெலோஜென் நிலையை அடைந்த பின்பு, அதாவது நோய் குணமான 1.5 மாதங்களில் கொட்டும். அத்தகைய நிலையில், பயப்பட எதுவுமில்லை. நிச்சயமாக முடி வளரும்" என்கிறார் அவர்.
"உங்களில் தலைமுடி எப்போது வளரவே செய்கிறது. பல நேரங்களில் அது வளரும் வேகத்திலேயே மாற்றம் ஏற்படுகிறது. ஆனால், அதற்கு ஏற்ப நாமும் சத்தான உணவு, சுகாதாரமான வாழ்க்கையை கொண்டிருந்தால். அதுவும் தொடர்ந்து வளரும்."
அவ்வாறு முடி உதிர்வு அதிகம் உள்ளவர்கள், எண்ணெய் மசாஜ் அல்லது ஸ்பா போன்றவை செய்து கொள்ளலாம் என்கிறார் அவர்.
ஹேர் பேக்:
இவ்வாறு மசாஜ் செய்வதையும் தாண்டி, முடிக்கு ஊட்டம் அளிக்க சில இயற்கையான பொருட்கள் அடங்கிய ஒரு ஹேர் பேக் குறித்தும் அவர் பேசினார்.
வில்வ மர இலையின் பொடி, பொடுகை போக்க உதவும் எலுமிச்சை தோலை காய வைத்த பொடி, முருங்கை இலையின் காயவைத்த பொடி, வெட்டிவேர், ஹென்னா, ப்ரிங்கராஜ் என்று கூறப்படும் கரிசலாங்கன்னி, செம்பருத்தி போன்றவற்றை, பொருட்களை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, கத்தாழையுடன் சேர்த்து, ஒரு கலவையாக மாற்றி, எண்ணெய் தடவிய தலையில் பூசி, வெயில் காலத்தில் 30 நிமிடங்களும், மழைக்காலத்தில் 10-15 நிமிடங்கள் மட்டும் ஊர வைத்து தலைக்கு குளிக்கலாம் என்கிறார் வசுந்தரா.
முடியின் அடர்த்தியை அதிகரிக்க
முடி அதிகம் உதிர்ந்த நிலையில், தலையில் மிகவும் குறைவான அளவை முடி உள்ளவர்கள், ஹேர் ஃபைபர் (Hair fiber) என்று கூறப்படும் துகள்களை தலையில் போட்டுக்கொண்டால், அடர்த்தியாக தெரியும். இது ஒரு தற்காலிக வழிதான் என்றபோதிலும், முக்கிய நாட்களில் மக்களுக்கு உதவும் வழி என்கிறார் அவர்.
ஆனால், இந்த பிரச்சனைக்கான தீர்வு, சரியான மருத்துவம் மற்றும் கட்டுப்பாடான உணவு முறையில் உள்ளது என்கிறார் வசுந்தரா. " இதில் முக்கியமான விஷயம் எண்ணெய். உதிர்ந்த முடிகள் மீண்டும் முளைக்க இதுவே உதவியாக இருக்கும். நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என எதுவாக இருந்தாலும், சுத்தமான எண்ணெய் எடுத்து, சற்றே சூடாக்கி, நம் தலைப்பகுதியில் தடவுவதோடு, சுழற்சி முரையில் தலைக்கு மசாஜ் போல செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது, அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதுவே முடி மீண்டும் வளரவும், அந்த பகுதியில் உள்ள முடிக்கு கூடுதல் சத்துகள் கிடைக்கவும் உதவியாக இருக்கும்." என்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.
பிற செய்திகள்:
- வயதாவதால் பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலம் - தவிர்க்க முடியுமா?
- இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டட பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
- ஜாக் மா மாயமாகிவிட்டாரா? சீன அரசுடனான மோதல்போக்கு காரணமா? - எழுப்பப்படும் கேள்விகள்
- யுரேனியம் செறிவூட்டலை திடீரென அதிகரித்த இரான் - எச்சரிக்கும் உலக நாடுகள்
- தகனம் செய்யப்படும் கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: பிரச்சனை எழுப்பும் ஜாகிர் நாயக்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்