You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய குடியரசு தினம்: போரிஸ் ஜான்சனின் பயண ரத்தால் தலைமை விருந்தினரின்றி விழா
- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
எதிர்வரும் இந்திய குடியரசு தினத்தின்போது தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென தனது பயணத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டதால், இந்த ஆண்டின் குடியரசு தினம் தலைமை விருந்தினரின்றி நடக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
உலகை புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது புதிய திரிபுவாக உருப்பெற்று பிரிட்டனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு புதிய கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் முழு பொது முடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த போரிஸ் ஜான்சன், தனது இந்திய வருகையை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
தனது பயணத்திட்டம், பிரிட்டனில் தீவிரமாகி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதியை செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, 2021ஆம் ஆண்டின் குடியரசு தின தலைமை விருந்தினராக வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி விடுத்த அழைப்பை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு ஏற்றுக்கொண்டிருந்தார். இதன் மூலம், 1993ஆம் ஆண்டில் ஜான் மேஜருக்குப் பிறகு இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் விளங்குவதாக அறியப்பட்டது.
மேலும், இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஆறாவது பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. "இந்திய குடியரசு தினத்தில் போரிஸ் ஜான்சன் இடம்பெறுவதை, இந்திய புதிய சகாப்தத்தின் அடையாளமாகவும், எங்கள் உறவின் ஒரு புதிய கட்டமாகவும் கருதுகிறோம்," என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறியிருந்தார்.
இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், இந்திய குடியரசு தின விழா அடுத்த மூன்று வாரங்களில் நடைபெறவுள்ளதால் அதற்கு வேறு தலைமை விருந்தினரை இந்தியா அழைத்து கெளரவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பிரிட்டனின் பங்களிப்பு முக்கியமாவது ஏன்?
இந்தியா ஒரு சுதந்திரமான, இறையாண்மை மற்றும் ஜனநாயக நாடாக 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதியன்று தனது அரசியலமைப்பை அமல்படுத்தியது. அப்போது முதல் ஜனநாயக குடியரசாக ஆனதை நினைவுகூர்வதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினம் மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் இந்தியா தனது ஜனநாயக கட்டமைப்பையும் படைபலத்தையும் நட்பு நாடுகளுக்கு காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு வெளிநாட்டு தலைவரை தலைமை விருந்தினராக அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950ஆம் ஆண்டில் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அப்போது முதல் 1954ஆம் ஆண்டு வரை குடியரசு தின அணிவகுப்பு, வெவ்வேறு இடங்களில் (செங்கோட்டை, ராம்லீலா மைதானம், இர்வின் ஸ்டேடியம், கிங்ஸ்வே) ஆகியவற்றில் நடந்தது.
1955ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக குடியரசு தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வழியாக செங்கோட்டையில் முடிவடையும் வகையிலான அணிவகுப்பு, ராஜ்பாத் எனப்படும் ராஜபாதை வழியாக நடைபெற்றது. அந்த ஆண்டு, இந்திய குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக கலந்து கொண்டவர் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் மாலிக் குலாம் முகம்மத்.
இந்தியாவின் முதல் குடியரசு தின தலைமை விருந்தினராக இந்தோனீசியா அதிபர் சுகர்னோ கலந்து கொண்டார். பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் தலா ஐந்து முறை குடியரசு தின தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கின்றனர்.
தலைமை விருந்தினர் தேர்வு எப்படி நடக்கிறது?
இந்தியாவின் குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினருக்கு நெறிமுறை அடிப்படையில் நாட்டின் மிக உயர்ந்த மரியாதை வழங்கப்படுகிறது. ஆனால் குடியரசு தின தலைமை விருந்தினர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
குடியரசு தினத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர், இந்தியா நட்புறவை கொண்டிருக்கும் நட்பு நாட்டின் தலைவருக்கு அல்லது அரசாங்கத்திற்கு அழைப்பை அனுப்புகிறது.
இந்திய குடியரசு தலைவரின் அனுமதியை இந்திய பிரதமர் முறைப்படி பெற்று வெளியுறவுத்துறை மூலம் இந்த அழைப்பு அனுப்பப்படும்.
இரு தரப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்வதும், இந்திய கலாசாரத்தின் பன்முகத்தன்மையையும் செழிப்பையும் பறைசாற்றவே வெளிநாட்டு தலைவர் குடியரசு தின விழாவுக்கு அழைக்கப்படுகிறார். இந்த நிலையில், பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை திடீர் என ரத்து செய்யப்பட்டிருப்பது, தலைமை விருந்தினரின்றி எதிர்வரும் குடியரசு தின விழா நடத்தப்படுவதை கட்டாயமாக்கியிருக்கிறது.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி: கூட்டறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனங்கள்
- லாஸ்லியாவின் ஒரேயொரு பதிவு: இந்திய அளவில் ட்ரெண்டிங்!
- "திரையரங்க தளர்வு மருத்துவர்களை இழிபடுத்தும் செயல்" - வலுக்கும் விமர்சனம்
- வயதாவதால் பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலம் - தவிர்க்க முடியுமா?
- இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டட பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
- ஜாக் மா மாயமாகிவிட்டாரா? சீன அரசுடனான மோதல்போக்கு காரணமா? - எழுப்பப்படும் கேள்விகள்
- யுரேனியம் செறிவூட்டலை திடீரென அதிகரித்த இரான் - எச்சரிக்கும் உலக நாடுகள்
- தகனம் செய்யப்படும் கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: பிரச்சனை எழுப்பும் ஜாகிர் நாயக்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்