You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"மாஸ்டர், ஈஸ்வரன்" படங்கள் ரீலிஸ் தேதியில் வெளிவருமா? திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி ரத்து
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை மாலையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நீதிமன்றத்தில் இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை கருத்தில் கொண்டும், மத்திய அரசின் அறிவுரையை கவனத்தில் கொண்டும் திரையரங்குகள், திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும்வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது," என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் முக கவசம் அணதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ள தமிழக அரசு, கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, திரையரங்குகளில் நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சென்னையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் இருப்பதால் நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதில் சிக்கல் இருக்காது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். ஆனால் நீதிபதிகள், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் கூடாது. கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்வரை எச்சரிக்கையுடன் மாநில அரசு செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும், தற்போது உள்ள நடைமுறைப்படி, 50 சதவீத பார்வையாளர்களை கொண்டே திரையரங்குகள் செயல்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர். மதுரை கிளையில் ஜனவரி 11ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால், அதுவரை 50 சதவீத பார்வையாளர் அனுமதி என்ற நடைமுறையே தொடர வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
நூறு சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க தமிழக அரசின் அனுமதி கிடைத்து விட்டதால், பொங்கல் தினத்தன்று முழுவீச்சில் திரையரங்குகள் செயல்படத் தொடங்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். இதனால், பொங்கல் நாளன்று நடிகர் விஜய் நடித்த மாஸ்டர், நடிகர் சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருந்தனர்.
நடிகர் விஜய் சமீபத்தில் பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும்போது நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த சந்திப்பை அடுத்து, 100 சதவீத பார்வையாளர்களை திரையரங்குகளில் அனுமதிக்கும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.
ஆனால், கொரோனா பரவல் மற்றும் புதிய உருமாற்றம் பெற்ற கொரோனா பரவல் தணியாத நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பலரிடையே அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன், அரசின் இந்த உத்தரவை எதிர்த்து இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த இரு வழக்குகளையும் உயர் நீதிமன்ற மதுரை கிளையே விசாரிக்கும் என்றும் வெள்ளிக்கிழமை விசாரணையின்போது தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தமிழக அரசு, திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்திருப்பதால், பொங்கல் திருநாளையொட்டி வெளியிட திட்டமிட்டிருக்கும் மாஸ்டர், ஈஸ்வரன் தயாரிப்புக்குழுவினர் குறித்த தேதியில் படத்தை திரையிடுவார்களா அல்லது தள்ளிப்போடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து இரண்டு படங்களின் தயாரிப்புக்குழுவினருடன் பேசியபோது, 50 சதவீத அனுமதியோ 100 சதவீத அனுமதியோ திட்டமிட்ட தேதியில் ஈஸ்வரன் படத்தை வெளியிட ஏற்கெனவே தீர்மானித்துள்ளதாக அந்த படத்தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, 100 சதவீத திரையரங்க பார்வையாளர் அனுமதியை கோரிய நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படக்குழுவினர், படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டதால், குறித்த நாளில் அரசு உத்தரவின்படி படம் திரைக்கு வரும் என்று கூறியுள்ளனர.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்