Bigg Boss Tamil Season 4 இன்று ஆரம்பம்: அசம்பாவிதம் நடந்தால் வேறு திட்டம்

Bigg Boss Tamil Season 4

பட மூலாதாரம், vijay television

இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது பிக்பாஸ் சீஸன் 4. அந்த நிகழ்ச்சி குறித்த சில சுவாரஸ்யங்களை இங்கே கேள்வி பதில் வடிவத்தில் வழங்குகிறோம்.

அரசியல் கட்சிகள் அனைத்தும் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் சூழலில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கிறார்.

பிக்பாஸிற்கான படபிடிப்பு எங்கு நடக்கிறது?

கடந்த சீஸன்களை போலவே இந்த சீஸனும் பூந்தமல்லி அருகேயுள்ள ஈவிபி-யில்தான் நடக்கிறது. அங்குதான் பிக்பாஸ் செட் போடப்பட்டுள்ளது.

சரி… இது கொரோனா காலமாச்சே. இப்போது எப்படி இந்த படப்பிடிப்பு சாத்தியம்?

இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் அனைவரும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே தனிமைப்படுத்தப்படுவிட்டதாக கூறுகிறது பிக்பாஸ் தயாரிப்பு குழு.

Banner image reading 'more about coronavirus'
Banner

அதாவது படப்பிடிப்பு நடக்கும் செட்டுக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் போட்டியாளர்கள் அனைவரும் க்வாரன்டீனில் இருந்து வருகிறார்களாம்.

இங்கே அவர்களுக்குத் தொடர்ந்து கொரொனா டெஸ்ட் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதாம். அதுமட்டுமல்லாமல், பிக்பாஸ் வீட்டுக்குள் கடைப்பிடிக்க சில விதிகள் உள்ளதாம். அதனை கமல் இன்று கூறுவாராம்.

இந்த சீஸனின் இயக்குநர் யார்?

ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என்று தகவல்கள் கூறுகின்றன. பின்னணியில் பணியாற்ற மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இருக்கிறார்களாம்.

போன சீஸனில் ஏராளமான சர்ச்சைகள் எழுந்ததே? மதுமிதா கையை அறுத்து கொண்டது, பிக்பாஸ் வீட்டுக்குள் போலீஸ் என?

Bigg Boss Tamil Season 4

பட மூலாதாரம், vijay television

இந்த முறை அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் கமல் கவனமாக இருக்கிறாராம். சர்ச்சைகளை உண்டாக்குபவர்களையோ, வழக்குகளை எதிர்கொள்பவர்களையோ அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளாராம்.

வழக்கம் போல நூறு நாள் வீட்டில் இருக்க வேண்டும் என்பது திட்டம், ஆனால், கொரோனா உள்ளிட்ட வேறு அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கான வேறு திட்டமும் உள்ளதாம்.

சரி… யார் பங்கேற்பாளர்கள்?

அது இன்று இரவுதான் தெரியும். ஆனால், சமூக ஊடகங்களில் வைரலாக ஒரு லிஸ்ட பகிரப்பட்டு வருகிறது.

அது போன சீஸனின் டெம்ப்லட்டிலேயே இருக்கிறது . அது இதுதான்: நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர் ரியோ, பாடகர் வேல்முருகன், 'காமெடி டைம்' அர்ச்சனா, செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், ஆரி, ஜித்தன் ரமேஷ், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா என்று நீள்கிறது அந்த பட்டியல். ஆனால், இதை இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

.