You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அழியும் மொழியை இசையால் மீட்கும் ஹிப்-ஹாப் கலைஞர்கள்: ஒரு நம்பிக்கை கதை
- எழுதியவர், டேவிட் பாஸ்டர்
- பதவி, பிபிசிக்காக
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதோடு மட்டுமல்லாமல் நடிகர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பல துறைகளிலும் சாதனை படைத்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் நேற்று (சனிக்கிழமை) சென்னையில் சிகிச்சை பலனின்றி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
ரசிகர்களின் நெஞ்சங்களைத் தாலாட்டும் குரல் வல்லமை படைத்த அவரது இழப்புக்கு இரங்கல் தெரிவித்து பலரும் தங்களது கருத்தை பதிவு செய்து வருவது இசை மூலம் ஒருவர் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை பறைசாற்றுவதாக உள்ளது.
அந்த வகையில், கொலம்பியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சான் பசிலியோ டி பாலென்குவே நகரில், அழிந்து கொண்டிருந்த உள்ளூர் மொழிக்கு புத்துயிரூட்ட ஹிப்-ஹாப் இசை உதவி வருகிறது.
ராப் நாட்டுப்புறக் கலை பாலென்குவேரோ என்பது மக்களின் குரலை அடையாளப்படுத்துகிறது என்று, ''கொம்பிலேசா மீ'' என்ற ஆப்ரோ-கொலம்பிய ஹிப்-ஹாப் குழுவின் தலைவர் ஆண்ட்ரிஸ் பாடில்லா ஜூலியோ கூறுகிறார். இந்த இசைக் குழுவினர் ஸ்பானிய மற்றும் பிற மொழிகளுக்கு அவ்வப்போது மாறிக் கொள்கிறார்கள். ஆனால் அது ஹிப்-ஹாப்பின் சர்வதேச மொழியாக இருக்கும் ஆங்கிலம் கிடையாது.
வேறு மொழி என்பது பாலென்குவேரோ என்பதாக உள்ளது. கொலம்பியாவின் இரண்டு பூர்வீக மொழிகளில் ஒன்றாக இது இருக்கிறது. அந்த நாட்டில் 68 மொழிகள் உள்ளன. அவற்றில் பல மொழிகள் ''கலாசார ஒன்றிணைவுக்கான அழுத்தங்கள்'' (ஒரு மொழி, கலாசாரம் ஆகியன வேறு மொழி, கலாசாரம் ஆகியவற்றுள் கலந்து கரைவது) அல்லது போதை மருந்து கும்பல்கள் மற்றும் துணைநிலை ராணுவத்தினருக்கு இடையிலான உள்நாட்டுச் சண்டை போன்ற காரணங்களால் அழியும் நிலையில் உள்ளன.
சகாரா பாலைவனத்துக்கு கீழே உள்ள ஆப்பிரிக்க நாடுகளின் பாண்ட்டூ மொழிக் குடும்பத்தில் பாலென்குவேரா மொழி தனது வேர்களைக் கொண்டுள்ளது. வேறு பல மொழிகளின் தாக்கமும் இதில் கலந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையானதாகவும் இருக்கிறது. இந்த மொழி 21ஆம் நூற்றாண்டிலும் உயிர்ப்புடன் இருக்க ஹிப்-ஹாப் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
''மோசமாகப் பேசப்படும் ஸ்பானிய மொழிதான் பாலென்குவேரா என ஒரு சமயத்தில் கருதப்பட்டது. அதனால் மக்கள் அதைக் கெட்டதாகக் கருதி பேசாமல் தவிர்த்தனர்'' என்று பாடில்லா ஜூலியோ தெரிவித்தார். 20வது நூற்றாண்டின் பிற்பாதியில் வேர்களுக்குப் புத்துயிரூட்டல் முயற்சி தொடங்கியபோது, இந்த எதிர்மறை சிந்தனைகளுக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. அதேசமயத்தில், நகரில் உள்ள சுமார் 3,5000 குடியிருப்புவாசிகள் இந்த மொழியை மீண்டும் பேசவைக்க முயற்சி எடுக்கப்பட்டது.
அதேபோல தங்கள் இசையின் மூலம் இந்த மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து அடையாளத்தை ஏற்படுத்துகின்றனர். ரசிகர்களுக்குப் புரியும் வகையில் பாலென்குவேரோ வார்த்தைகள் மற்றும் வாசகங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். ''எப்படி குட்பை சொல்வது என்று மக்கள் கற்றுக் கொள்ள விரும்பினால், சிறிது ஒலிநயம் சேர்த்து பாடலாக அதைச் சொல்கிறோம். மக்கள் அதை ரசிக்கிறார்கள்'' என்று பாடில்லா ஜூலியோ தெரிவித்தார்.
நாட்டுப்புறக் கலையுடன் இணைந்த பாலென்குவேரோவின் ராப் வடிவம் எப்படி ஹிப்-ஹாப் முறைக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பது, வழக்கமான நீதிபோதனை நிகழ்ச்சி போன்ற அணுகுமுறை விவரிக்கிறது என்கிறார் ஜூலியோ: ''ஹிப்-ஹாப் பாடலில் மக்கள் நடனம் ஆடுவதுடன், கேட்கவும் செய்கிறார்கள். நான் ஒரு தகவலைச் சொல்வதற்கு விரும்புவதால், அதற்கு ஹிப்-ஹாப் உதவியாக உள்ளது. அதனால்தான் அது எனக்குப் பிடித்திருக்கிறது,'' என்று அவர் கூறினார்.
ஹிப்-ஹாப்பின் ஒலி அம்சங்களை பாலென்குவோ இசை மற்றும் இசைக் கருவிகளுடன் பொருத்திக் கொள்வது சமுதாயத்திற்கு பிடித்தமானதாக ஆக்கிவிடுகிறது. நாட்டுப்புறக் கலையுடன் இணைந்த பாலென்குவேரோ ராப் இசைக்கு உடனடி தேவை என்பதற்கான உணர்வைத் தருவதாக ஹிப்-ஹாப் இருக்கிறது. ''கொம்பிலேசா மீ குழுவில் நாங்கள் இப்படி செய்வது எங்களது தைரியத்தைக் காட்டுவதாக மக்கள் கருதுகிறார்கள். ஆதரவுக்கான குரல், போராட்டத்துக்கான, எதிர்ப்புக்கான குரலாகக் கருதுகிறார்கள்'' என்று பாடில்லா ஜூலியோ கூறுகிறார்.
``நாங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு மட்டும் ஹிப்-ஹாப்பை பயன்படுத்தவில்லை. எங்களை பலப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்துகிறோம்'' என்கிறார் அவர். சான் பசிலியோ டி பாலென்குவே நகரின் சமூக சூழல் மற்றும் வரலாற்றுக்கு இது முக்கியமானதாக உள்ளது. கொம்பிலேசா மீ குழு தொடங்கப்பட்ட மான்டெஸ் டி மரியா மலைகளின் அடிவாரப் பகுதியில் உள்ள இந்த நகரில் 3,500 பேர் வாழ்கின்றனர்.
பல நூற்றாண்டுகளாக சான் பசிலியோ டி பாலென்குவே நகரம் எதிர்ப்பின் அடையாளமாக இருந்தது. தனது மொழி, கலாசாரம், அடையாளத்தை வளர்ப்பதாக இருந்தது.
கொம்பிலேசா மீ (பாலென்குவேரோவில் உள்ள ``என் நண்பர்கள்'') குழு 2011ல் தொடங்கப்பட்டது. அதில் 9 பேர் இருக்கின்றனர். இந்தக் குழு Así es Palenque என்ற தனது முதலாவது ஆல்பத்தை 2016-ல் வெளியிட்டது. பாலென்குவேயின் முதலாவது மற்றும் ஒரே மியூசிக் ஸ்டூடியோவில் ஆல்பம் தயாரிக்கப்பட்டது.
இந்தப் பணியின் போது, ஆப்பிரிக்க - கொலம்பிய குழுக்களுடனும் அவர்கள் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். கொலம்பியாவின் மற்ற பகுதிகளில் அந்தக் குழுக்கள் இதேபோன்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தன. பியூனாவென்சுராவில் ரோஸ்ட்ரோஸ் அர்பனோஸ் மற்றும் மெடெல்லினில் சான் பாட்டா ஆகிய குழுக்களுடன் தொடர்பு ஏற்பட்டது.தலைநகர் பகோட்டாவில் பாலென்குவே மக்கள் வாழும் இடங்களிலும் கொம்பிலேசா மீ குழுவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று பாடில்லா ஜூலியோ தெரிவித்தார். இதுதவிர இந்தக் குழு வெளிநாட்டுப் பயணங்களும் மேற்கொண்டுள்ளது. நாட்டுப்புற கலையுடன் கூடிய பாலென்குவேரோ இசையை பாரம்பரிய இசையாக மட்டுமின்றி, கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் சமூக இயக்கமாகவும் இது அமைந்து. பாலென்குவே பகுதியிலும், வெளியிலும் வாழும் மக்களை திரட்ட இது உதவியது.
பல நூற்றாண்டுகளாக, சான் பசிலியோ டி பாலென்குவே நகரம் எதிர்ப்பின் அடையாளமாக இருந்து வருகிறது. தன் மொழி, கலாசாரம் அடையாளத்தின் மூலம் மிளிரும் நகரமாக உள்ளது. அமெரிக்கா பகுதியில் முதலில் உருவான சுதந்திர குடியிருப்புப் பகுதியாக வரலாற்று ரீதியில் இந்த நகரம் அறியப்படுகிறது. தப்பி வந்த ஆப்பிரிக்க அடிமைகள் கொலம்பியா தோட்டங்களுக்குச் செல்லும் வழியில் 17வது நூற்றாண்டில் இந்தப் பகுதியில் குடியேறியுள்ளனர். சுமார் நூறாண்டு காலம் ஸ்பானிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடியதன் விளைவாக, அவர்களுக்கு 18 ஆம் நூற்ராண்டில் குடியேற்ற உரிமை வழங்கப்பட்டது. இப்போதைய காலக்கட்டத்தில் உயிர்ப்புடன் உள்ள இதுபோன்ற குடியேற்ற நகரமாக இது மட்டுமே உள்ளது.
இதன் விளைவாக 2005-ல் மனிதகுலத்தில் பாதிப்புக்கு ஆளாகக் கூடாத கலாசார பாரம்பரியம் கொண்ட பட்டியலில் சான் பசிலியோ டி பாலென்குவே நகரத்தை யுனெஸ்கோ சேர்த்தது. அதன் மூலம் அதன் பாரம்பர்யத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது. அந்த பாரம்பர்யத்தைக் காப்பாற்றுவதற்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்வது என்று கொம்பிலேசா மீ குழு முடிவு செய்தது. ``பாலென்குவே கலாசாரம் தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்து கொண்டிருக்கிறது என்று எங்கள் ஆசிரியர்கள் எங்களிடம் கூறினார்கள்'' என்று பாடில்லா ஜூலியோ கூறினார்.
உதாரணமாக செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அந்தப் பகுதியில் மொழி குறித்த பயிலரங்குகள், முடி திருத்தும் வேலை ஆகியவை நடைபெறும். வாரத்தில் மீதம் உள்ள நாட்களில், இந்தக் குழு மியூசிக் மற்றும் நடன வகுப்புகள் நடத்துகிறது. ``குழந்தைகள் உறுதியான அடையாளத்துடன் வளர வேண்டும் என்பதற்காக நாங்கள் இதைச் செய்கிறோம்'' என்று கொம்பிலேசா மீ குழுவின் மேலாளர் குவில்லெர்மோ கமாச்சோ கூறினார்.
``இசையின் மூலம் பாலென்குவேரோ அடையாளத்தைப் பலப்படுத்துவது எங்கள் வேலை. எங்கள் சமுதாயத்தை பலப்படுத்துவதற்கான ஒரு கருவியாக எப்போதும் மொழி இருந்து வருகிறது'' என்றார் அவர். சமுதாய சுவர் ஓவியங்களை உருவாக்குவதிலும் இந்தக் குழு பணியாற்றுகிறது. அவற்றில் பாலென்குவேரோ வாசகங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த முயற்சிகளின் மையமாக இருப்பது நாட்டுப்புறக் கலையுடன் இணைந்த பாலென்குவேரோ தான். இந்த சமுதாயத்தில் ஹிப்-ஹாப் பெரிய அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு அது பிடித்துள்ளது என்று பாடில்லா ஜூலியோ தெரிவித்தார். வெனிசுலா, கியூபா அல்லது அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் இருந்து ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகலை காப்பியடிக்கும் முயற்சியாக அல்லாமல், பாலென்குவே கலாச்சாரத்தையும் பாரம்பர்யத்தையும் இணைத்து மேற்கொண்ட முயற்சிக்குக் கிடைத்த பலன் இது என்றார் அவர். எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டுப்புறக் கலையுடன் இணைந்த பாலென்குவேரோ ராப் பாடல்கள், ``உங்கள் குரலை உயர்த்தி எதிர்ப்பைக் காட்டுங்கள்'' என்ற எண்ணத்தை இசை கேட்பவர்களைிடம் ஊக்குவிக்கக் கூடிய வகையிலான இசையாக ஹிப்-ஹாப் உள்ளது என்பதை உணரும்படி செய்கிறது.
இப்போதைய வாழ்க்கை நிலை பற்றி, மோசமான தண்ணீர் விநியோகம், மின்சார வசதி முதல் கலாசாரத்துக்கு மரியாதை அளித்தல் வரை பாலென்குவே மக்கள் கேள்வி கேட்கும் திறனை இது ஊக்குவிக்கிறது என்று கமாச்சோ தெரிவித்தார். ``கல்வி, சுகாதாரம், நல்ல வேலைகள் கிடைக்காத வரையில் சுதந்திரம் என்பதன் அர்த்தம் என்ன'' என்று அவர் கேள்வி எழுப்புகிறார். ``உங்களுடைய தோலின் நிறத்தின் அடிப்படையில் அவர்கள் பாகுபாடு காட்டுவார்கள் என்றால், சுதந்திரம் என்பதன் அர்த்தம் என்ன'' என்றும் அவர் கேட்கிறார்.
இவையெல்லாம் நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சனைகள் என்றாலும், 52 ஆண்டு காலமாக இடதுசாரி கொரில்லா கலகக்காரர்களின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து 2016ல் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டபோது தான் பெரிதாகப் பேசப்பட்டன. ``கொரில்லா கலகக்காரர்கள் மட்டும் தான் பிரச்சனை என்றில்லை'' என்கிறார் கமாச்சோ.
இந்த சமுதாயம் வேறு பல வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இனவாதம், பாகுபாடு ஆகியவற்றால் இந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க மற்றும் உள்நாட்டு சமுதாயங்களின் தலைவர்கள் மற்றும் சமூகப் போராளிகள் தொடர்ந்து கொலை செய்யப் படுகிறார்கள். 2016 ஒப்பந்தத்திற்குப் பிறகு நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இது புதியதல்ல என்கிறார் கமாச்சோ: ``நமது பாதையை நாமே உருவாக்கிக் கொள்வது நல்லது. ஏனெனில் மற்ற சமுதாயங்களை, மற்ற தலைவர்களை நாங்கள் விழிப்படையச் செய்கிறோம்'' என்று பாடில்லா ஜூலியோ கூறினார். இதில் தான் பலமான ஓர் கருவியாக இசை அமைந்துள்ளது.
கொம்பிலேசா மீ குழு Esa Palenquera என்ற தங்களுடைய இரண்டாவது ஆல்பத்தைத் தயாரித்து வருகிறது. பெண்களைக் கொண்டாடும் வகையிலும், பாலென்குவே உருவாக்கத்தில் அவர்களுடைய பங்கை பாராட்டும் வகையிலும் அமைந்துள்ள இந்த ஆல்பம் மின்கா மலைப் பகுதிகளில், தயாரிப்பாளர் கிறிஸ்டியன் கேஸ்தானோவின் ஸ்டூடியோவில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
காட்சிப் பின்னணியை மாற்றியது, இயற்கையான ஒலியுடன் பொருத்தமான மாற்றத்திற்கு ஒத்திசைவாக அமைந்துள்ளது. கித்தார்கள், டிஜிட்டல் இசைக் கருவிகள் கிடையாது. நாட்டுப்புற கலையுடன் கூடிய பாலென்குவேரோ ராப் மட்டும் அதன் தூய்மையான வடிவத்தில் இடம் பெற்றுள்ளது. பாரம்பரிய நடனங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. சமூகத்துக்கான தகவலை மட்டும் கொண்ட சில பாடல்களும் உள்ளன. லாஸ் பெய்னடோஸ் போன்ற பாடல்கள் நீதிபோதனை வகையைச் சேர்ந்தவையாக உள்ளன. தப்பி வந்த அடிமைகளின் தலைமுடிகள் எப்படி வெட்டப்பட்டிருந்தன என்ற வரலாற்றை, இசை ரசிகர்களுக்குச் சொல்பவையாக உள்ளன. முதலாவது பாலென்குவே குடியேற்றம் நிகழ்ந்த லாஸ் மோன்டேஸ் டி மரியா பகுதி நிகழ்வுகள் இதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
இறுதியாக, இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் நாட்டுப்புறக் கலையாடன் கூடிய பாலென்குவேரோ ராப் பாடலின் தேவையை பூர்த்தி செய்பவையாக உள்ளன. ``இந்த நகரின் மக்கள் இதற்காகத்தான் நீண்டகாலமாகக் காத்திருந்தார்கள்'' என்று பாடில்லா கூறுகிறார். ``சான் பசில்லியோ டி பாலென்குவே நகரின் பாரம்பர்யத்தைப் பாதுகாப்புக்கு இளைய தலைமுறையினருக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு வழிமுறைக்காக அவர்கள் காத்திருந்தார்கள்'' என்று அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: