"பாலு... நீ இல்லாம உலகம் சூன்யமாயிடுச்சு" - இளையராஜாவின் உருக்கமான அஞ்சலி

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவால் மிகவும் துயருற்றுள்ள இசை அமைப்பாளர் இளையராஜா, அவரது பிரிவால் பேச வார்த்தைகளே வரவில்லை என்று மிகுந்த கவலையுடன் பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பேசிய காணொளியில், "பாலு, சீக்கிரம் எழுந்து வா. உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். நீ கேட்கலை. போயிட்ட. எங்க போன? கந்தர்வர்களுக்காக பாடுறதுக்காக போயிட்டியா, இங்கே உலகம் சூனியமாக போச்சு. உலகத்துல ஒன்னும் எனக்கு தெரியலை. பேசறதுக்கு பேச்சு வரலை. சொல்றதுக்கு வார்த்தை இல்லை. என்ன சொல்றதுன்னே தெரியலை. எல்லா துக்கத்துக்கும் ஒரு அளவு இருக்கு. இதுக்கு அளவில்லை," என்று பேசியிருக்கிறார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம், திரையுலகில் நுழைந்து கொடிகட்டிப் பறக்கும் முன்பே இளையராஜாவின் ஆரம்ப காலம் தொட்டு சமீப காலம் வரை எண்ணற்ற படங்களில் பாடியிருக்கிறார்.

திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பி, திரைப்படங்களுக்கு பாடுவது மட்டுமின்றி பல நிகழ்ச்சிகளையும் நடத்தி மெல்லிசை குழு கச்சேரிகளிலும் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் பெரும்பாலும் தமிழில் பாடிய பாடல்கள், இளையராஜா இசை அமைத்த படங்களில் இடம்பெற்றவை.

2016ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் டொரோன்டோவில் எஸ்பிபி50 என்ற பெயரில் உலகம் தழுவிய இசை நிகழ்ச்சிப் பயணத்தை எஸ்.பி. பாலசுப்ரமணியம் தொடங்கினார். அதன்படி துபை, சிங்கப்பூர், ரஷ்யா, இலங்கை, மலேசியா, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த நேரத்தில் திடீரென அவரது இசை நிகழ்ச்சிகளில் தனது பாடல்களை பாட இளையராஜா ஆட்சேபம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ் திரை உலகில் முன்னெப்போதும் அறிந்திராத வழக்கமாக, தனது திரைப்பட பாடல்களை வெளியில் உள்ள நிகழ்ச்சிகளில் பாடினால், அதற்கு ராயல்டி தொகையை எஸ்.பி. பாலசுப்ரமணியம் தர வேண்டும் என்று 2017ஆம் ஆண்டில் இளையராஜா நிபந்தனை விதித்தார்.

இந்த விவகாரம், இருவருக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எஸ்.பி.பி, பாடகி சித்ரா, எஸ்.பி. சரணம் ஆகியோருக்கு வழக்கறிஞர் மூலமாக அதே ஆண்டு மார்ச் மாதம் இளையராஜா நோட்டீஸும் அனுப்பியிருந்தார்.

அந்த நேரத்தில் சியாட்டில், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய இடங்களில் நிகழ்ச்சி நடத்தி வந்த எஸ்.பி.பிக்கு இந்த தகவல் எட்டியபோது, "எனக்கு சட்டத்தின் சாராம்சம் தெரியாது. இருந்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன். இதற்கு முன்பும் பல காலமாக நான் பாடல்களை பாடியிருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு நோட்டீஸ் அனுப்பாத இளையராஜா இப்போது நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இனி நான் எப்போதும் இளையராஜா பாடல்களை பாட மாட்டேன்" என்று அறிவித்தார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

இரண்டு ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட நேரடி பேச்சுவார்த்தை எதுவுமே இல்லாத நிலையில், இளையராஜாவையும், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தையும் இணைத்து வைக்க பலரும் முயற்சி மேற்கொண்டனர்.

அதன் பயனாக ஊடலை எதிர்கொண்ட நண்பர்கள், 2019ஆம் ஆண்டில் இளையராஜாவின் 76ஆவது பிறந்த நாளையொட்டி சென்னையில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி பங்கேற்றார்.

நேரலையாக நடந்த அந்த நிகழ்ச்சியில் இருவரும் கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணருடன் பழைய கசப்புணர்வை மறந்து ஒரே மேடையில் பாடியும், பழைய நினைவுகளை அசைபோட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதன் பிறகு இருவரும் நட்பைத் தொடர்ந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அவர் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டபோது இளையராஜா ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் "எழுந்து வா பாலு" என்று உருக்கமாகப் பேசிய இளையராஜா, விரைவில் எஸ்.பி.பி குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது எஸ்.பி.பியின் மறைவுக்கு பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் அவர் துயரத்துடன் மற்றொரு காணொளியை பகிர்ந்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :