லாக்கப் - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், ZEE5
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சமீப காலமாக ஓடிடியில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களில் பல த்ரில்லர்களாகவே இருக்கின்றன. அதே பாணியில் அமைந்த திரைப்படம்தான் Zee 5ல் வெளியாகியிருக்கும் 'லாக்கப்'.
ஒரு காவல்துறை ஆய்வாளரான சம்பத் (மைம் கோபி) கழுத்தறுத்து கொல்லப்படுகிறார். அந்தக் கொலையை விசாரிக்கும் காவல்நிலையத்திற்கு தற்காலிக ஆய்வாளராக வருகிறார் ஆய்வாளர் இளவரசி (ஈஸ்வரிராவ்). அந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த துணை ஆய்வாளரான மூர்த்தி (வெங்கட் பிரபு), கொலைகாரன் என ஏற்கனவே ஒருவரை பிடித்து வைத்திருக்கிறார். இந்த வழக்கை இளவரசி விசாரிக்கத் துவங்கும்போது மல்லிகா (பூர்ணா) என்றொரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது. இந்தச் சடலத்திற்கும் ஆய்வாளர் சம்பத்தின் கொலைக்கும் என்ன தொடர்பு, சம்பத்தை உண்மையிலேயே கொலை செய்தது யார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பட மூலாதாரம், ZEE5
கடந்த சில மாதங்களாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்ததால், இப்படி நேரடியாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்த எதிர்பார்ப்பே பலரிடம் குறைந்துபோயிருந்தது. இந்தப் படம் ஓரளவுக்கு அந்த மனநிலையை மாற்றியிருக்கிறது. ஒரு கொலை தொடர்பான மர்மக் கதையை சீரான இடைவெளியில் வரும் திருப்பங்களோடு, 'கொலையை யார் செய்தது' என்ற சஸ்பென்ஸை கடைசிவரை நீட்டித்து, படத்தை கரையேற்றியிருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தில் வரும் மற்றொரு பாராட்டத்தக்க அம்சம், நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்திருப்பதுதான். குறிப்பாக ஆய்வாளராக வரும் ஈஸ்வரி ராவ், மூர்த்தியாக வரும் வெங்கட் பிரபு, குழந்தைகளின் தாத்தாவாக சில காட்சிகளில் மட்டுமே வரும் ஒருவர் ஆகியோரின் நடிப்பு படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது.

பட மூலாதாரம், FACEBOOK
'நான் - லீனியர்' பாணியில் கதையைச் சொல்லியிருந்தாலும் எந்த இடத்திலும் குழப்பத்திற்கு இடம் வைக்காமல் தொடர்ந்து நகர்கிறது படம். ஒன்றிரண்டு காட்சிகள் படம் மெதுவாக நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. தவிர, சில லாஜிக் ஓட்டைகளும் உண்டு. சில காட்சிகள் தொலைக்காட்சி சீரியல்களைப் போல எடிட் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தக் குறைகள் தவிர, வேறு சிக்கல்கள் இல்லாத படம் இது.
பின்னணி இசை ஓகே என்றாலும் பல இடங்கள் மிஷ்கின் படங்களில் வரும் பின்னணி இசையை நினைவூட்டுகின்றன. குறிப்பாக குழந்தை கத்தியுடன் ஓடும் காட்சியில் வரும் பின்னணி இசை.
ஆனால், படத்தின் பெயரான லாக்கப் என்பதற்கும் படத்தின் கதைக்கும் என்ன தொடர்பு?
பிற செய்திகள்:
- பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்
- வேலூர்: மகன் தவிக்க விட்டதால் புகார் கொடுத்து சொத்தை மீட்ட முதியவர்கள்
- தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை
- பிரசாந்த் பூஷண்: குற்றவாளியாக அறிவித்தது உச்ச நீதிமன்றம்
- இஸ்லாத்தை `பாதுகாப்பதற்கான' மசோதா: பாகிஸ்தானில் தொடரும் சர்ச்சை
- ”தி.மு.கவிலிருந்து என்னை நீக்கியது சந்தோஷமே”: கு.க. செல்வம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












