வேலூர்: மகன் தவிக்க விட்டதால் புகார் கொடுத்து சொத்தை மீட்ட முதியவர்கள்

ராஜாகண்ணு(80) மற்றும் அவரது மனைவி வசந்தா (75

பட மூலாதாரம், vellore district administration

படக்குறிப்பு, ராஜாகண்ணு(80) மற்றும் அவரது மனைவி வசந்தா (75)
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

வேலூர் மாவட்டத்தில் பெற்றோரை கவனித்துக் கொள்ளாத மகனிடம் இருந்து சொத்தை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள், பல முதியவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

வேலூரில் பேரணாம்பட்டு பகுதியில் வசித்துவரும் ராஜாகண்ணு(80) மற்றும் அவரது மனைவி வசந்தா (75), தங்களது முதுமை காலத்தில் மகன் கவனித்துக்கொள்வான் எனக் கருதி, தங்களின் சொத்தை அவருக்கு எழுதிவைத்தனர். ஆனால் சொத்து கை மாறியதும் மகன் கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்ததால் அவர்களின் சொத்தை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழிடம் பேசிய வேலூர் மாவட்ட துணை ஆட்சியர் ஷேக் மன்சூர், இந்த விவகாரத்தில், முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.

''முதியவர்கள் தங்களை பிள்ளைகள் பராமரிக்கவில்லை என புகார் கொடுத்தால் அவர்களுக்காக இயற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்கீழ் அவர்களின் சொத்தை கோரமுடியும். சொத்தை மகன் மீது எழுதிவைத்துவிட்டதால், ராஜாகண்ணு மற்றும் வசந்தா மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். எங்களது விசாரணையில் மகன் பிரபு தந்தையை தாக்கியது மற்றும் பெற்றோரை கவனிக்காதது உறுதியானது. ராஜாகண்ணு தனது இரண்டு மகள்கள் உதவியோடு புகார் கொடுத்தார்கள். தற்போது ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1,100 சதுரடி நிலம் முதியவர்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது,'' என்றார் ஷேக் மன்சூர்.

ஷேக் மன்சூர்.

பட மூலாதாரம், Vellore Dist. Administration

ராஜாகண்ணு-வசந்தா தம்பதியின் இரண்டு மகன்கள் இறந்து விட்டதால், கடைசி மகன் பிரபு மீது நம்பிக்கையோடு இருந்ததாகவும், மகன் மோசமாக நடந்துகொண்டதால் பெற்றோர் மனவருத்தத்தில் இருந்ததாகவும் கூறுகிறார் துணை ஆட்சியர் ஷேக் மன்சூர்.

''வசந்தா அம்மா முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். புகார் கொடுத்தால் சொத்தை மீட்கலாம் என முதியவர்களுக்கு இரண்டு மகள்களும் விளக்கி பின், புகார் கொடுத்தார்கள்.

மூன்று முறை இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசினோம். ஒரு முறை பெற்றோரை கவனித்து கொள்வதாக வாக்களித்த பிரபு, பெற்றோருக்கு உதவாமல், உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதனால், மூன்றாவது விசாரணையின் முடிவில் சொத்தை மீட்டோம்.

சமீபத்தில் உசிலம்பட்டியில் இதுபோன்ற ஒரு வழக்கில் கவனிக்காத மகனிடம் இருந்து சொத்து மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. முதியவர்கள் புகார் கொடுத்தால்,முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத்தின் 23ம் பிரிவின் படி, அவர்கள் பராமரிப்பு செலவு கோரலாம், சொத்தையும் மீட்கமுடியும்,'' என்றார் அவர்.

"முதியவர்கள் புகார் கொடுப்பது பிள்ளைகளுக்கு நேரும் அவமானம் என பெற்றோர் நினைப்பதால்தான், பலரும் புகார் கொடுக்க தயங்குகிறார்கள்" என்கிறார் மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

வேலூரில் மகன் தவிக்கவிட்டதால் புகார்கொடுத்து சொத்தை மீட்ட முதியவர்கள்

பட மூலாதாரம், Vellore Dist. Administration

''இந்திய குடும்பங்களில் குழந்தைகளை வளர்த்து, அவர்களின் படிப்பு, திருமணம் என குழந்தைகளின் வாழ்க்கைக்கு துணை நிற்கவேண்டியது தங்களது கடமை என பெற்றோர் எண்ணுகின்றனர். இந்த கடமை உணர்வு மற்றும் பாசத்தின் காரணமாக பல நேரங்களில் தங்களுக்கு கொடுமை நடந்தால்கூட, மௌனமாகிவிடுகிறார்கள். வேலூர் தம்பதியினர் புகார் கொடுத்து, தங்களது சொத்தை மீட்டுள்ளது பல முதியவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செயல்,''என்கிறார் சுதா ராமலிங்கம்.

முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் குறித்து விவரித்த அவர், ''குழந்தைகள் தங்களை பராமரிக்கவில்லை என்ற நிலையில், இந்த சட்டத்தின் கீழ் பெற்றோர் வழக்கு தொடரலாம். இதற்காக நீதிமன்றம் செல்ல தேவையில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தால்,விசாராணை நடைபெறும். குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் போலவே குறுகிய காலத்தில் விசாரணையை முடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கொடுக்க வேண்டும் என்பதை இந்த சட்டம் உறுதிசெய்கிறது. குழந்தைகளின் வருமானத்தை பொருத்து பராமரிப்பு செலவு நிர்ணயம் செய்யப்படும். அதேபோல, சொத்து மீட்கப்பட வேண்டும் என பெற்றோர் விரும்பினால், அதனை பெறலாம்,'' என்றார் அவர்.

நீதிமன்றம் மூலமாக பெற்றோர் நீதி கோரும்போதும், மூத்த குடிமக்களின் வழக்குக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், முதியவர்கள் வன்முறையை அனுபவிக்க தேவையில்லை என்றார் அவர்.

''தயக்கம் இல்லாமல் பெற்றோர்கள் முன்வரவேண்டும். கூட்டுக்குடும்ப அமைப்பு மிகவும் அரிதாகிவிட்டது. 1950 மற்றும் 1960களில் வளர்ந்தவர்கள், தங்களது முதியவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் தங்களுக்கும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். தற்போது நுகர்வு கலாச்சாரம் அதிகரித்த சூழலில், பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டுமே அதிக கவனம் கொடுக்கப்படுவதால், இதுபோன்ற முதியோர்கள் பாதிக்கப்படுகிறார்கள்,'' என்றார் சுதா ராமலிங்கம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: