மூதாதையர் சொத்தில் மகள்களுக்கும் உரிமை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது?

மூதாதையர் சொத்தில் மகள்களுக்கும் உரிமை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்வதென்ன?

பட மூலாதாரம், Hindustan Times / Getty

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்திய உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் ஒரு தீர்ப்பு, இந்து கூட்டுக் குடும்பங்களில் மூதாதையர் சொத்துகளின் மீது ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமை உண்டு என உறுதிப்படுத்தியிருக்கிறது.

1956ஆம் ஆண்டின் இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின் பிரிவு 6, 2005ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. அந்த திருத்தத்தின்படி, மூதாதையர்களின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு எனக் கூறப்பட்டது.

இந்தியாவில் இந்து வாரிசுரிமைச் சட்டப்படி, 2005ஆம் ஆண்டிற்கு முன்பாக, மூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு இருந்தது. இது coparcenary rights என்று குறிப்பிடப்பட்டது. 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் செய்த திருத்தத்தின்படி, இந்த உரிமை மகள்களுக்கும் அளிக்கப்பட்டது.

ஆனால், சட்டம் வருவதற்கு முன்பாக பிறந்தவர்களுக்கு இது பொருந்துமா, சட்டம் திருத்தப்பட்டபோது தந்தை உயிரோடு இருந்தால் மகள்களுக்கு சொத்தில் பங்கு வருமா என்பதெல்லாம் குறித்து பல வழக்குகள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

இது தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நாஸர், எம்.ஆர். ஷா அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில், 2005ஆம் ஆண்டின் சட்டத் திருத்தத்திற்கு முன்பாக மகள் பிறந்தாரா, இல்லையா என்பது இதில் பொருட்டில்லை; மகன்களுக்கு உள்ள உரிமை மகள்களுக்கும் உண்டு என்று கூறியிருக்கிறது.

2005ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்திற்கு முன்பிருந்த நிலை

இந்துக் கூட்டுக் குடும்பத்தில் மூதாதையர் சொத்து அதாவது Coparcenary சொத்து என்பது ஒரு இந்து ஆணுக்கு அவருடைய தந்தை, அவருடைய தந்தை, அவருடைய தந்தை என மூன்று தலைமுறையினரின் சொத்துகளைக் குறிக்கும். (பெண்கள் வழியில் வரும் சொத்தை இது குறிக்காது. அதாவது தாயின் தந்தை, அவரது தாய் என்ற வகையில் கிடைக்கும் சொத்துகளை இது குறிக்காது.) 2005ஆம் ஆண்டிற்கு முன்பாக, 1956ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி இந்த ஆண் வழி மூதாதையரின் சொத்தில் தந்தை, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என ஆண் வாரிசுகளுக்கே சொத்தில் உரிமை இருந்துவந்தது.

2005ல் ஆண்டில் இந்து வாரிசுரிமைச் சட்டம் திருத்தப்பட்டபோது, கூட்டுக் குடும்பத்தில் உள்ள மகன்களைப்போல மகள்களுக்கும் மூதாதையரின் சொத்தில் உரிமை உண்டு எனத் திருத்தப்பட்டது.

இந்தச் சட்டம் திருத்தப்பட்ட பிறகு பல குழப்பங்கள் எழுந்தன. இது தொடர்பாக பலரும் வழக்குகளைத் தொடர்ந்தனர். இப்படி 2015ல் தொடரப்பட்ட ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கியது. அதன்படி சட்டத் திருத்தம் வருவதற்கு முன்பாக தந்தை இறந்திருந்தால், மகள்களுக்கு சொத்தில் உரிமை கிடையாது என கூறப்பட்டது. இதற்குப் பிறகு, மற்றொரு வழக்கில் 2018ல் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, தந்தை 2001ல் இறந்திருந்தாலும் மகள்களுக்கு சொத்தில் உரிமை உண்டு எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த குழப்பங்களை நீக்குவதற்காக மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2018 நவம்பரில் உருவாக்கப்பட்டது.

தற்போது அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பின்படி Coparcener உரிமை என்பது பிறப்பால் வருவது. ஆகவே சட்டத்தைத் திருத்தும்போது மகளின் தந்தை உயிரோடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஆனால், சட்டம் திருத்தப்பட்ட பிறகு உள்ள சொத்துகளுக்கே இந்தச் சட்டம் பொருந்தும். 2004ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி இந்தச் சட்டம் மாநிலங்களவை தாக்கல் செய்யப்பட்டது. அந்தத் தேதிக்கு முன்பாக நடந்துமுடிந்த பாகப்பிரிவினை, விற்பனை போன்றவற்றிற்கு இந்தச் சட்டம் பொருந்தாது.

அதேபோல, இந்தத் திருத்தத்திற்கு முன்பாக வாய்மொழியாக சொத்துகளை பிரித்துக்கொள்வது பொருந்தும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், இப்போது இந்த சொத்துப் பிரிவினையை பதிவுசெய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. வாய்மொழியாக முதலில் தருவதாகச் சொல்லிவிட்டு, பிறகு மகள்களுக்கு சொத்து கிடைப்பது மறுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இதனை உறுதிப்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டிருக்கும் வழக்குகளை இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து ஆறு மாதங்களுக்குள் தீர்க்க வேண்டுமென்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

முன்னோடி மாநிலங்கள்

மூதாதையர் சொத்தில் பெண் குழந்தைகளுக்கும் சம உரிமை வழங்கும் சட்டம் தற்போது இந்தியா முழுவதும் அமலுக்கு வந்திருந்தாலும் சில மாநிலங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இது தொடர்பான சட்டத் திருத்தங்களைச் செய்திருக்கின்றன.

குறிப்பாக, தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டில் இந்து வாரிசுரிமைச் சட்டம் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்கும்படி திருத்தப்பட்டது. இதேபோல, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு அளிக்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

"இது ஒரு முக்கியமான சட்டம், முக்கியமான தீர்ப்பு. ஏனென்றால் அதிகாரத்தின் அடிப்படையே பொருளாதாரம்தான். சொத்து கிடைக்கும்போது அதிகாரம் தானாகக் கிடைக்கும். அந்த வகையில் இது மிக முக்கியமான திருத்தம்" என்கிறார் மூத்த வழக்கறிஞரான சுதா ராமலிங்கம்.

இந்தியாவில் பெண்களுக்கான சொத்துரிமை தொடர்பாக இயற்றப்பட்ட முதல் சட்டம் திருமணமான பெண்கள் சொத்துச் சட்டம், 1874 என்பதாகும். அதற்குப் பிறகு 1937ல் இந்துப் பெண்கள் சொத்துரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. 1956ல் இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. முந்தைய சட்டங்களைவிட இது மேம்பட்ட சட்டம் என்றாலும் பரம்பரைச் சொத்து, கூட்டுக்குடும்பச் சொத்தில் மகள்களுக்கு பங்கு வழங்குவதை இந்தச் சட்டம் உறுதிசெய்யவில்லை. இந்த நிலையில், 2005ஆம் ஆண்டில் செய்யப்பட்ட திருத்தம் இந்த உரிமைகளை வழங்கியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: